Search This Blog

Saturday, September 18, 2010

எதுவுமில்லை மிச்சம்!

உன் அமைதியில் அழிந்த
என் ஆர்வம்.
உன் பார்வையில் மறைந்த
என் முயற்சி.
உன் சிரிப்பில் தொலைத்த
என் சுயம்
உன் கருத்தால் மறந்த
என் இலட்சியம்
உன் நினைவில் சென்ற
என் தனிமை
உன் ஆசையில் சங்கமித்த
என் ஆன்மா
உன் உள்ளத்தில் ஒன்றிய
என் உயிர்
உன் காதலால் வாழ்ந்த
என் கணங்கள்
ஏதேதோ நினைத்து
எதுவுமில்லை
நீயும் நானும் வாழ்ந்த
வாழ்க்கையின் மிச்சம்.
தொலைப்பதுதான்
வாழ்க்கை என்று
துலங்கியது இப்போது!
மீண்டும் தொடங்கிவிட்டேன்
பயணத்தைத்
தொலைப்பதற்கு!

Tuesday, September 14, 2010

கனம்

என்
இதயத்தின்
கனம்
திடீரென்று
கூடிவிட்டது!
உன்
வார்த்தைகளின்
கனம் அவ்வளவு!

எதிர் எதிர் கோணங்கள்

என் முகம்
பார்க்க மறுக்கும்
உன்
விழியோடு சண்டையிடும்
உன் இதயத்தில்
ஒவ்வொரு நிமிடமும் நான்!
இரண்டும்
எதிர் எதிர் கோணத்தில்!
உனக்கு மட்டுமல்ல!
எனக்கும்தான்!
உன் முகம்
பார்க்கத் துடிக்கும்
என்
விழியிடம் சண்டையிடும்
இதயத்தோடு நான்!

Sunday, September 12, 2010

மௌனப் பார்வை

வார்த்தைகளுக்கு
எட்டாத
வலிகளின்
உண்மைகளை
உரக்கச் சொல்கிறது
உன்
மௌனப் பார்வை!

எதிர்பார்ப்பு

எங்கே நான் போனாலும்
எவர் எதிரே வந்தாலும்
உன் சாயல்
அதில் தெரிந்தால்
மனதிற்குள் மழைக்காற்று!
பின்புறம் பார்க்கும்போதே
உன் முகமாக இருக்காதா
என்ற என் எதிர்பார்ப்பு!
ஏனடா இந்தத் தொல்லை?
சுவாசிக்க மறந்திருந்தாலும்
யோசிக்க மறந்ததில்லை
என்னருகில் நீயிருந்த
இன்பமான பொழுதுகளை!
யாசிக்க மனமில்லை என்றாலும்
வாசிக்கின்றேன் தினந்தோறும்
உன் பெயரை
என் இதழில்!

கொக்காய்...மனம்

கண்கள் படபடக்க
கால்கள் நடுநடுங்க
கைகள் பரபரக்க
உடல் துடிதுடிக்க
உன்னைப் பார்த்த
உற்சாகத்தில்
என்னுள் நடந்த
இத்தனை நாடகத்தில்
மனம் மட்டும்
எதற்கும் அசையாமல்
ஒற்றைக் காலில்
தவம் செய்யும்
கொக்காய்!

நீயும் ... நானும்...

உன்னோடு சேர்ந்து நடந்த
பாதை மட்டுமே
மொத்த உலகமும்
நான்
வாழ்ந்த நாட்கள்!
மை தீர்ந்த பேனா
என்று தெரிந்தும்
தூக்கிப் போட மனமின்றி
உயிரற்ற பேனாவோடு
தொடர்ந்து செல்கிறது
என் எழுத்து!
எதிர்பாராது நடக்கும்
எண்ணற்ற நிகழ்வுகள்
என்
அனுமதியின்றியே
நம்
கடந்த காலத்திற்குள்
என்னைக்
கட்டிப் போட்டுக்
காயப்படுத்துகிறது!
என்னோடு நீயும்
உன்னோடு நானும்..
கடற்கரை…
கடைவீதி…
இப்படி
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்
நீ… நான்….
உள் மூச்சை
இழுக்கும்போதெல்லாம்
உன் மூச்சைத் தேடுகிறேன்!
நான் நினைப்பது போல
நீயும் நினைப்பாயா?
ஆராய்கிறேன்…
முடிவில்லை…?
செம்புலப் பெயல்நீர் என்று சொன்ன
உன் காதல்
இல்லை … இல்லை
நம் காதல்,
இன்று
நீர் வேறு… மண் வேறாய்….
தனித் தனியாய்….
இது எப்படி?

அம்மாவோடு நான்...

அம்மா!
உன்
கற்பனைச் சிறகுகளுக்குள்
வந்த சில
கவிதைகளைப் போல்
உன்
கருச் சிறைக்குள்
வந்த
என்னையும்
காகிதமாய் கிழிக்கின்றாயே!
உன்
கவிதைகளைப் புத்தகமாக
வெளியிடும் நீ,
என்னை மட்டும்
குழந்தையாக
வெளிவிட மறுப்பதேன்?
மருத்துவரின் கூராயுதம்
என் தளிர் உடலை
பதம் பார்க்க
இரத்தக் குளம்பாய்
நான்
பூமி காண…
உன் சித்தம் புரியவில்லை
அம்மா!
உருவாகி வந்தாலும்
தினம் வடியும்
இரத்தம்
என் இதயத்தில்
என்பதால்
ஒரு நாள் மட்டும்
பொறுத்துக் கொள் என்று…?
உலகம் பார்க்காமல்
உறங்கச் சொல்கிறாய்!
புரிகிறது அம்மா,
உன்
வேதனையும் விம்மலும்!
நானும் பெண் தான்!

Saturday, September 11, 2010

மாற்றம்

உன்
வரவு பார்த்து
விழித்திருந்த விழிகள்
இன்று
உறக்கத்தை எதிர்பார்த்து!
காரணம் புரிந்தது…
கனவில் மட்டுமே
உன்
அன்புக் கரங்கள்
கிடைக்கிறதாம்!

மழை கேட்கும் மின்னல்

உன் தோளில் முடங்கி
மார்பில் தோய்ந்து
உன் வன்விரல்
என் மென்கூந்தல்
வருடிவிட
தூங்கப் போகிறேன்
நான் ,
கனவில் மட்டுமே
நீ வருவதால்!
நினைவாக
என்று வருவாய்?
காதலோடு கேட்கின்றேன்,
மழை கேட்கும் மின்னலாய் !

வாழ்க்கைப் புள்ளி

கூப்பிடாமலே வந்து விழும்
கண்ணீரைக்
கூட்டுக்குள் அடைக்கின்றேன்
தனியாக நிற்கும்
ஆயுள் தண்டனையை
அனுபவிக்கக் கற்றுக் கொண்டதால்,
சுடும் நிஜங்களே
இன்று
எனக்குச் சுயத்தைக் காட்டியது.
உணர்வற்ற உடலில்
ஊசலாடும் என்னுயிர்,
”நான் வாழ வேண்டும் ” என்றது.
”நீயா” என்றேன்.
”யாருக்காகத் தொலைக்கப் போகிறாய்
உன் வாழ்வை” என்றது.
”நானிருக்கிறேன் உன்னோடு” என்றது.
”நான் நான் மட்டும் தான் நிஜம்” என்றது.
புள்ளி புரிந்துவிட்டதால்
கோலத்தின் அழகை
இரசிக்கின்றேன் நானும்!

Friday, September 10, 2010

சுயம்

என்னிடம்
அடைக்கலமாய் இருந்த
அழுகைகூட
விடைபெற்றுச் சென்று
வெகுநாட்கள்
ஆகிவிட்டது!
தூக்கத்தில்கூட
கனவாய் மிரட்டிய
என் துக்கம்
கரைந்து போய்
காலங்கள் கடந்துவிட்டது!
எங்கு சென்றாலும்
நிழலாய் தொடர்ந்த
நினைவுகளின் வலிகூட
குறைந்து போனது
கொஞ்ச நாட்களில்!
இதயம் சுமந்த
சோகத்தின் சுமைகளை
இறக்கி வைத்துப்
பல நாட்கள் ஆகிவிட்டது!
இப்போது
குப்பைகள் அகற்றப்பட்ட
ஈர மணலாய்
விதைக்காகக் காத்திருக்கிறது
என் உள்ளம்!
அதனால்
தொலைந்துவிட்டது என்று நினைத்த
என் சுயம்
துளிர்விட்டது மெல்ல!

மலராய்...

கடந்து போன பாதையில்
பயணித்தவர் பலர்
நடந்து போகின்ற பாதையில்
பார்க்கின்றவர் சிலர்
உறுதி இல்லாத எதிர்காலத்தில்
உறுதுணை யார் என்று
அறியமுடியா அதிசய உலகி்ல்
தினம் மலரும் மலராய்
மலர்ந்து விடு! மடிந்து விடு!

துணிவு

துணிந்தால்
கடல்கூட
உன் காலைத் தொழும்
பயந்தால்
பனிகூட
உன்னைப் பதம் பார்க்கும்!
மரிக்கத் துடிக்கும்
உன் துணிவைக் கொஞ்சம்
மறக்கப் படி!
வாழத் துடி!