Search This Blog

Wednesday, December 22, 2010

சிறுபாணாற்றுப்படை


சிறுபாணாற்றுப்படை
நிலமகளின் தோற்றம்
மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று        [1–3]
கருத்துரை
நிலமாகிய பெண், மணிகள் கிடைக்கும் மலையாகிய மார்பினையும், மூங்கிலாகிய தோளினையும் உடையவள். அழகிய அம்மார்பில் அசைகின்ற முத்துமாலை போன்று செல்லும் அருவி நீரானது, வருந்தித் தொலைவில் சென்று காட்டாற்றோடு கலக்கிறது.
சொற்பொருள் விளக்கம் : மணிமலை – மணிகள் கிடைக்கும் மலை, பணைத்தோள் – மூங்கிலாகிய தோள், மாநில – பெரிய நிலமாகிய, மடந்தை – பெண், அணி முலை – அழகிய மார்பு, துயல் வரூஉம் – அசைகின்ற, ஆரம்போல – மாலைபோல், செல்புனல் – செல்லும் நீர், உழந்த – வருந்த, சேய்வரல் – தொலைவில் சென்று, கான்யாற்று – காட்டாறு.
கொல்கரை நறும்பொழில் குயில்குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடிபுடை நெறித்து
கதுப்பு விரித்தன்ன காழ்அக நுணங்குஅறல்               [4-6]
கருத்துரை
காட்டாற்றின் கரையில் நறுமண மலர்கள் பூக்கும் மரங்கள் நிறைந்த சோலை உள்ளது. சோலையிலுள்ள குயில்கள் தம் மூக்கு அலகினால் குத்தி உதிர்த்த புதிய வாடல் பூவைச்சூடி நில மகளின் கூந்தல் விரிந்து கிடப்பதைப் போன்று, நெருங்கி இருக்கும் ஆற்றின் கரையிலுள்ள நுண்ணிய கருமணல் காட்சியளிக்கிறது.
சொற்பொருள் விளக்கம் : கொல்கரை – அழிகின்ற கரை, நறும்பொழில் – நறுமணம் வீசும் சோலை, குயில் – குயில் பறவை, குடைந்து – குத்தி, துளைத்து; உதிர்த்த – உதிர்த்த, புதுப்பூ – புதியபூ, செம்மல் – வாடல்பூ, சூடி – அணிந்து, புடை – பக்கம், நெறித்து – நெருங்கி, கதுப்பு – கூந்தல், விரித்து அன்ன – விரிந்தது போல, காழக – கருமை, நுணங்கு – நுண்ணிய, அறல் – மணல்.
இளைப்பாறும் பாணன்
அயில் உருப்பு அனையஆகி, ஐது நடந்து
வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம்பத வழிநாள்
காலை ஞாயிற்றுக் கதிர்கடா உறுப்ப    
        பாலை நின்ற பாலை நெடுவழி
சுரன் முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ        (7-12)
கருத்துரை
பாலை நிலத்து கருமணல் இரும்பு வெப்பமேற்ற தன்மை போல் இருந்தது. அம்மணலில் மெல்ல நடந்து வந்தான் பாணன். வெயிலால் வெப்பமேறிய பரற்கற்களும் காலைக் கிழித்தன. வேனிற்காலம் நடைபெறுகின்ற வெம்மையான காலமாதலால், காலையிலேயே கதிரவனின் வெப்பம் மிகுதியாக இருந்தது. பாலை நிலத்தின் வறண்ட தன்மை நிலை பெற்ற, நீண்ட காட்டுவழியில் [நடந்து வந்த களைப்பு தீர அங்கிருந்த] கடம்ப மரத்தின் கிளையாகிய நிழலில் [குடும்பத்தினரோடு] தங்கி இருந்தான்.
சொற்பொருள் விளக்கம் : அயில் – இரும்பு, உருப்பு – வெப்பம்; அனைய – தன்மைபோல், ஆகி – இருக்க, ஐது – மெல்ல, நடந்து – நடந்து, வெயில் – வெயில், உருப்புற்ற – வெப்பமடைந்த, வெம்பரல் – வெம்மையான பரற்கற்கள், கிழிப்ப – (காலைக்) கிழிக்க, வேனில் – வேனிற்காலம், நின்ற – நடைபெறும், வெம்பத – வெப்பத்தன்மை, வழிநாள் – வெம்மையான நாட்களில், காலை ஞாயிற்று – காலையில் தோன்றும் கதிரவன், கதிர் – கதிர், கடா – செலுத்த, உறுப்ப – மிகுதியாக, செறிவாக, பாலை நின்ற – வெப்பம் நிலைபெற்ற, பாலை நெடுவழி – பாலை நிலத்து நெடிய வழியில், சுரன் – பாலை நிலம், மராஅம் – கடம்பமரம், வரிநிழல் – கிளை நிழல், அசைஇ – தங்கி.
விறலியின் அழகு
ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண்டு அருளி
நெய்கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்புஎன
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன்                  
மயில்மயில் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்குநாய் நாவின் நல்எழில் அசைஇ
வயங்குஇழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து
ஈர்ந்துநிலம் தோயும் இரும்பிடித் தடக்கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின்; குறங்குஎன          
மால்வரை ஒழுகிய வாழை; வாழைப்
பூஎனப் பொலிந்த ஓதி;                                 (13-22)
கருத்துரை
மெதுவாகத் துளித்துளியாக மழை பெய்கின்ற காலத்துத் தோன்றுகின்ற மேகத்தின் அழகினைப் பெற்றிருக்கும் எண்ணெய் தேய்க்கப்பட்ட இருண்ட கூந்தலினை உடையவள் விறலி. நீல மணிபோலும் நிறமுடைய தோகையினை ஆண்மயில்கள் பலவும் சேர்ந்து விரித்து ஆடியபோதும் இவளின் (விறலியின்) கூந்தல் அழகினுக்கு ஒப்பாகாமைக் கண்டு வெட்டகமுற்று, பெண்மயில்கள் கூட்டத்தினுள் சென்று மறைவதற்குக் காரணமான அழகினை உடையவள். பனஞ்சிறாம்பு நிறமுடைய ஓடி இளைத்த நாயின் நாக்குப் போல நல்ல அழகினைப் பெற்று, அணிகலன்கள் அணியப்பெறாதப் பாதத்தினைக் கொண்டவள். பாதத்தினைத் தொடர்ந்து கருமையான பெண் யானையின் தரையில் படுகின்ற துதிக்கை போல், ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடையினை உடையவள். இவளின் கூந்தல் முடிப்பு, மேகங்கள் தங்குகின்ற மலையில் உள்ள வாழை மரத்தின் பூப்போன்றது.
சொற்பொருள் விளக்கம் : ஐது வீழ் – மெதுவாக விழும், இகு – சொரிகின்ற, பொழிகின்ற, பெயல் – மழை, அழகு கொண்டு அருளி – அழகினைப் பெற்று, நெய் கனிந்து – எண்ணெய் தேய்க்கப்பட்டு, இருளிய – இருண்ட, கதுப்பின் – கூந்தலின், கதுப்பு என – கூந்தலும், மணி – நீலமணி, வயின் – பக்கம், இடம், கலாபம் – தோகை, பரப்பி – விரித்து, பலவுடன் – பலவும், மயில் – ஆண்மயில், மயில் – பெண் மயில், குளிக்கும் – மறைக்கும், சாயல் – அழகு, சாஅய் – நிறம், செறும்பு – பனஞ்சிறாம்பு, உயங்கு[ஓடி இளைத்து] வருந்தும், நாய் – நாய், நாவின் – நாக்கின், நல் எழில் – நல்ல அழகு, அசைஇ – இருத்தல், வயங்கு – விளங்குகின்ற, இழை அணிகலன், உலறிய – அணயப் பெறாத, நீங்கிய, இல்லாத, அடியின் – காலடி, தொடர்ந்து – தொடர்ந்து, ஈர்ந்து – ஈர்க்கப்பட்டு, (கீழ்நோக்கி) நிலம் – பூமி, தோயும் – பொருந்தும், இரும்பிடி – கரிய யானை, தடக்கை – துதிக்கை, சேர்ந்து உடன் – ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, செறிந்த – நெருங்கிய, குறங்கின் – தொடையினையும், குறங்கு என – தொடை போன்ற, மால் – மேகங்கள், வரை – மலை, ஒழுகிய – வரிசையாக, வாழை – வாழை மரம், வாழைப்பூ என – வாழை மரத்தின் பூப்போல, பொலிந்த – விளங்கிய, ஓதி – கூந்தல்,
.................................................ஓதி
நளிச்சினை வேங்கை நாள்மலர் நச்சி
களிச்சுரும் அரற்றும் சுணங்கின், சுணங்கு பிதிர்ந்து
யாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப்                       
பூண்அகத்து ஒடுங்கிய வெம்முலை; முலைஎன
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன்சேறு இகுதரும் எயிற்றின்; எயிறுஎன
குல்லைஅம் புறவில் குவிமுகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின்; மெல்இயல்                          
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்                [22-31]
கருத்துரை
கூந்தல் முடிப்பில், நெருங்கிப் படர்ந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றலர்ந்த பூக்களை விரும்பிச் சூடி இருப்பர். அந்தப் பூக்களில் உள்ள தேனை உண்ண வரும் வண்டுகள், விறலியின் உடம்பிலுள்ள தேமலை மலர் என்று எண்ணி ஒலி எழுப்பும். அத்தகு தேமல் படர்ந்த கோங்க மரத்தில் புதிதாகப் பூத்திருக்கும் மொட்டைப் பழிக்கும் அணிகலன்கள் தங்கியுள்ள விருப்பம் தரும் மார்பும், அம்மார்பைப் போல பெரிய குலைகளையுடைய பனைமரத்தின் இளநுங்கின் சுவை நீரைத் தாழ்த்திக் கூறும் இனிய நீர் ஊறும் பற்களையும் உடையவர். அவர்களின் பற்களைப் போல் பூக்களைப் பூக்கும் துளசி வளர்ந்திருக்கின்ற அழகிய முல்லை நிலத்தில், குவிந்த மொட்டுக்களை மலர்த்தியுள்ள முல்லை மலரைச் சான்றாகச் சொல்லத்தக்க பெண் இயல்பும் உடையவர். ஒளி பொருந்திய நெற்றியும், மென்மையான மானின் பார்வையும் பெற்றவர்.
சொற்பொருள் விளக்கம் : நளிச்சினை – நெருங்கிப் படர்ந்த கிளை, வேங்கை – வேங்கை மரம், நாள் மலர் – அன்றலர்ந்த மலர், நச்சி – விரும்பி, களி சுரும்பு – கள் உண்டு மகிழ்ச்சியிலிருக்கும், வண்டு அரற்றும் – ஒலி எழுப்பும், சுணங்கு – தேமல், பிதிர்ந்து – சிதறி, யாணர் – புதிதாக, கோங்கின் – கோங்க மரத்தின், அவிர் – விளங்கும், ஒளிரும், முகை – மொட்டு, எள்ளி – இகழ்ந்து, பூண் – அணிகலன், அகத்து – நடுவண், நடுவே, ஒடுங்கிய – தங்கிய, வெம்முலை – விருப்பம் தரும் மார்பு, முலை என – மார்பு போன்று, வண்கோள் – பெரிய குலை, பெண்ணை – பனை மரம், வளர்த்த – வளர்ந்த, நுங்கின் – நுங்கினது, இன்சேறு – இனிய நீர், இகு தரும் – சொரியும், பொழியும், எயிற்றின் – பல்லினையும், எயிறு என – பல் போன்று, குல்லை – துவளம் (துளசி), அம் – அழகிய, புறவில் – முல்லை நிலத்தில், குவி – குவிந்த, முகை – மொட்டு, அவிழ்ந்த – மலர்ந்த, முல்லை – முல்லை மலர், சான்ற – சாட்சியாக சான்றாக, கற்பின் – அறிவின், கல்வியின், மடம் – மென்மை, மான் – மான், நோக்கின் – பார்வையின், வாள்நுதல் – ஒளி பொருந்திய நெற்றியினை உடைய விறலியர் (பாணனின் துணைவி)
விறலியின் காலைத் தடவிவிடும் இளையர்
நடைமெலிந்து அசைஇய நல்மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவரப்             [31 – 33]
கருத்துரை
காட்டு வழியே நடந்து வந்ததால், நடை சோர்ந்து தளர்ந்த விறலியின் சிறிய பாதங்களைப்பாடும் தொழிலன்றியும் வேறெதுவும் கற்காத இளையர் மெல்லத் தடவிவிடுகின்றனர்.
சொற்பொருள் விளக்கம் : நடைமெலிந்து – நடை சோர்ந்து, அசைஇ – தளர்ந்து, நல்மென் – நல்ல மென்மையான, சீறடி – சிறிய அடியினை, கல்லா இளையர் – பாடும் தொழிலன்றி வேறெதுவும் கற்காத இளையர், மெல்ல – மெதுவாக, தைவர – தடவி விட.
யாழ் வாசிக்கும் பாணனைச்
சந்திக்கின்றான் பரிசில் பெற்ற பாணன்
பொன் வார்த்துஅன்ன புரியடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ
துனிகூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப
முனிவு இகந்துஇருந்த முதுவாய் இரவல!        [34-40]
கருத்துரை
பொன்னை உருக்கிச் செய்தது போன்று முறுக்கேறிய நரம்பினையுடைய இனிய குரலை எழுப்பும் சிறிய யாழை இடப்பக்கம் அணைத்துக் கொண்டு பாலை யாழை வாசிப்பதில் வல்லவனாகிய பாணன், பாலைப் பண்ணில் சிறப்பான விருப்பம் தரும் பாடலை முறையறிந்து இசைக்க, இயங்குகின்ற இவ்வுலகில் வாழ, பரிசில் தருவோனை நாடி வறுமை தந்த மிகுதியான துன்பத்தோடு, அத்துயரம் வழிப்படுத்த நடந்து வந்த வருத்தம் தீர்ந்து இளைப்பாறி இருக்கும் பேரறிவு வாய்த்த இரவலனே!
        சொற்பொருள் விளக்கம் : பொன் – தங்கம், வார்த்து அன்ன – உருக்கிச் செய்ததுபோல, புரி – முருக்கி, யடங்கு – ஆழுவதும், நரம்பின் – நரம்பினை, இன்குரல் – இனியகுரல், சீறியாழ் – சிறிய யாழ், இடவயின் – இடதுபக்கம், தழீஇ – தழுவிக் கொண்டு, அணைத்துக் கொண்டு, இயங்கா வையத்து – இயங்குகின்ற இவ்வுலகில், வள்ளியோர் – பரிசில் தருவோர், புரவலர், நசைஇ – விரும்பி, துனி – வறுமை, கூர் – மிகுதியான, எவ்வமொடு – துன்பத்தோடு, துயர் – துயரம், ஆற்றுப்படுத்த – வழிப்படுத்த, முனிவு – வருத்தம், இகந்து – தீர்ந்து, இருந்த – இருக்கின்ற, முதுவாய் – பேரறிவு வாய்த்த, இரவல – இரவலனே! (இரப்போர், யாசிப்போர்).
        (தன்னைப் போன்ற பாணனையும் மதித்து, பேரறிவு வாய்த்தவனாக விளித்து, அப்பாணனின் வறுமைக்கு வடிகாலாய், தான் பரிசு பெற்று வந்த வள்ளலிடம் அவனையும் வழிப்படுத்தும் நோக்கில், மூவேந்தர் பெருமையினை விதந்து பின் கடையெழு வள்ளல்களின் சிறப்பினையும் கூறி, இவர்கள் அனைவரின் கொடைப்பண்பினையும் பெற்றுள்ள வள்ளல் ஒருவன் இருக்கின்றான் என்று, தான் பரிசில் பெற்று வந்த நல்லியக்கோடனின், வள்ளல் தன்மையைப் புகழுகின்றான். பாணன். வாருங்கள்... தொடர்ந்து பாணனின் வழிப்படுத்தும் பண்பினைப் பார்க்கலாம்).
சேர நாட்டின் வளமை
கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல்இலை மயிர்ப்புறம் தைவர
விளையா இளங்கள்நாற மெல்குபு பெயரா                      
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்              [41-46]
சொற்பொருள் விளக்கம் : கொழுமீன் – கொழுத்த மீன், வளப்பமான மீன், குறைய – துண்டுபடுமாறு, ஒதுங்கி – நடந்து, வள்இதழ் – வளப்பமான இதழ், கழுநீர் – செங்கழுநீர் பூக்கள், மேய்ந்த – உணவாகத் தின்ற, கயவாய் – பெரியவாய், எருமை – எருமை மாடு, பைங்கறி – பசுமையான மிளகுக் கொடிகள், நிவந்த – படர்ந்த, பலவின் – பலாமரத்தின், நீழல் – நிழலில், மஞ்சள் மெல் இலை – மஞ்சளின் மென்மையான இலையில், மயிர்ப்புறம் – மயிர் நிறைந்த முதுகுப்பகுதி, தைவர – தடவ, விளையா – முற்றாத, இளங்கள் – புதிய தேன், நாற – மணங்கமழ, மெல்குபு – மென்று, பெயரா – அசையிட்டு, குளவி – காட்டு மல்லிகை, பள்ளி – படுக்கையில், பாயல் கொள்ளும் – உறக்கம் கொள்ளும்.
குடபுலம் காவலர் மருமான் ஒன்னார்
வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த
எழுஉறழ் திணிதோள், இயல்தேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே; அதாஅன்று [47-50]
இயற்கைவளம் செறிந்த மேற்குதிசை நாட்டிற்குக் காவலன். சேரர் குடியிலே தோன்றியவன். பகைவர்களுக்கு உரிய வடதிசை இமயத்தில் வளைந்த வில் சின்னத்தைப் பொறித்தவன். கணையமரத்தை ஒத்த திண்ணிய தோளினை உடையவன். ஆற்றுநீரின் வளத்தினையும், கோட்டை வாசலையும் உடைய சேரனது தலைநகராகிய வஞ்சி நகரில் உனக்குக் கிடைக்கக்கூடிய பரிசுப் பொருட்களும் குறைவானதாகவே இருக்கும். அதுமட்டுமன்று,
        சொற்பொருள் விளக்கம் : குடபுலம் – மேற்கு திசை நாடு, காவலர் – காப்பவர், மருமான் – வழித் தோன்றல், ஒன்னார் – பகைவர், வடபுலம் – வட திசையிலுள்ள இமயமலை, வாங்குவில் – வளைந்த வில் (சேரனது சின்னம், முத்திசை, இலச்சனை) பொறித்த – பதித்த, எழு – கணைய மரம், உறழ் – ஒத்த, திணிதோள் – உறுதியான தோள், இயல்தேர் – செல்லுகின்ற தேர், குட்டுவன் – சேர மன்னன், வருபுனல் – ஆற்று நீர், வாயில் – வாசல், வஞ்சியும் – வஞ்சி மாநகரத்திலும், வறிதே – சிறியதே, (வஞ்சியில் கிடைக்கும் பரிசுப் பொருட்களும் குறைவானதே).
பாண்டிய நாட்டின் பெருமை
நறவுவாய் உறைக்கும் நாகுமுதிர் நுணவத்து
அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத
கைபுனை செப்பம் கடைந்த மார்பின்
செய்பூங் கண்ணி செவிமுதல் திருத்தி
நோன்பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த               [51-55]
கருத்துரை
தேனைச் சொரியும் பூக்களையும், மென்மையும் பக்குவமுமான தன்மையையும் பெற்றுள்ள நுணா மரத்திலிருந்து வெட்டப்பட்ட சிறிய மரத் துண்டுகளில், கூரிய இரும்பு உளிகொண்டு, திருத்தமுறச் செதுக்கிச் செய்திருக்கின்ற அணிகலனை அணிந்த மார்பினை உடையவர். வயலில் விளைந்த பூவினால் கோர்க்கப்பட்ட கண்ணி எனும் மாலையினை காதுவரை அணிந்தவர். இத்தகு உப்பு வணிகரின் பெரிய எருதுகளைப் பூட்டி இழுக்கின்ற வண்டியோடு வந்த,
        சொற்பொருள் விளக்கம் : நறவு – தேன், வாய் – இடம், நுனி – விளிம்பு, உறைக்கும் – சொரியும், நாகு – இளமை, மென்மை, முதிர் – பக்குவம், நுணவத்து – நுணாமரத்திலிருந்து, அறைவாய் – துண்டாக்கப்பட்ட பகுதி, வெட்டப்பட்ட பகுதி, குறுந்துணி – சிறிய துண்டு, அயில் உளி – இரும்பு உளி, பொருத – பொருந்த, கைபுனை – கையால் செய்யப்பட்ட, செப்பம் – திருத்தமுற, கடைந்த – செதுக்கிய (அணிகலன்) மார்பின் – மார்பில், செய் – வயல், பூங்கண்ணி – பூக்களால் கட்டப்பட்ட மாலை, செவிமுதல் – காதுமுதல், திருத்தி – அணிந்து, நோன்பகட்டு – வலிய எருது, உமணர் – உப்புவணிகர், ஒழுகையொடு வந்த – வண்டியோடு வந்த,
மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்
வாள்வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி
தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர்இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற                  
கிளர்பூண் புதல்வரொடு கிலிகிலி ஆடும்           [56-61]
கருத்துரை
 முதுகுப் பகுதியை மறைக்கும், கோதி ஒழுங்கு செய்யப்பட்டு, ஐந்து பிரிவாக அமைந்துள்ள கூந்தலையும் துன்புறும் இடையினையும் உடையவள் உப்பு வாணிச்சி (உப்பு வணிகரின் துணைவி).அவளின்  அணிகலன்கள் அணிந்துள்ள புதல்வரொடு, உப்பு வாணிகரின் மக்களைப் போன்ற குரங்கு, பெண்களின் பற்களைப் போன்றிருக்கும் கடலில் கிடைக்கும் முத்துக்களை, வாள்போலும் வாயினை உடைய கிளிஞ்சலின் வயிற்றில் வைத்துமூடி, கிலுகிலுப்பை விளையாடும்.
        சொற்பொருள் விளக்கம் : மகாஅர் – மக்கள், அன்ன – போன்ற (உவம உருபு), மந்தி – குரங்கு, மடவோர் – பெண்கள், நகாஅர் – பற்கள், அன்ன – உவம உருபு, நளிநீர் – பரந்த கடல் நீர், முத்தம் – முத்து, வாள்வாய் – வாளின் வாய் போன்றிருக்கும், எருந்தின் – கிளிஞ்சலின், வயிற்றகத்து – வயிற்றினுள், அடக்கி – மறைத்துமூடி, தோற்புறம் – முதுகுப் பகுதி, மறைக்கும் – மறைக்கின்ற, நல்கூர் – துன்பம், நுசுப்பு – இடை, உளர் – கோதி, இயல் – ஒழுங்கு, ஐம்பால் – ஐந்து பிரிவாக அமைந்துள்ள கூந்தல் (கூந்தல் அலங்காரம்), உமட்டியர் – உப்பு வாணிச்சி, ஈன்ற – பெற்ற, கிளர் – ஒளி, பூண் – அணிகலன், புதல்வரொடு – பிள்ளைகளோடு, கிலிகிலி – கிலு கிலுப்பை, ஆடும் – விளையாடும்.
தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான்
தென்புலம் காவலர் மருமான் ஒன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன்
தமிழ்நிலை பெற்ற தாங்குஅரு மரபின்                         
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று      [62-67]
அலைகடலை எல்லையாகக் கொண்ட கொற்கை நகருக்கு அரசனாகிய பாண்டியன், தெற்கிலுள்ள பாண்டிய நாடு முழுமையும் பாதுகாப்பவன். பாண்டியர்கள் மரபில் வந்தவன். பகைவரை வென்று அவர் நாட்டைத் தனதாக்கி முத்துமாலை சூட்டப்பெற்ற வெண்கொற்றக் குடையும், கண்ணுக்கினிய வேப்பம்பூ மாலையும் அணிந்தவன். விரைந்து செல்லும் தேர்ப்படையினை உடையவன். அப்பாண்டிய மன்னனின், தமிழ்மொழி நிலைபெற்ற பெருமையினையும், மகிழ்ச்சியான தெருக்களையும் உடைய மதுரையில் நீ பெறுகின்ற பரிசிலும் குறைவானதாகவே இருக்கும். அது மட்டுமன்று.
        சொற்பொருள் விளக்கம் :  தத்துநீர் – அலை கடல், வரைப்பு – எல்லை, கொற்கைக் கோமான் – கொற்கையின் அரசன், தென்புலம் – தென்பகுதி, காவலர் – காப்பவன், மருமான் – வழித்தோன்றல், ஒன்னார் – பகைவர், மண்மாறு கொண்ட – பகைவர் நாடுகளைத் தனதாக்கிக் கொண்ட, மாலை – முத்து மாலை, வெண்குடை – வெண் கொற்றக் குடை, கண்ணார்கண்ணி – கண்ணுக்கினிய (வேப்பம் பூ) மாலை, கடுந்தேர் – விரைந்து செல்லும் தேர், செழியன் – பாண்டியன், தமிழ்நிலை பெற்ற – தமிழ்மொழி நிலைபெற்றிருக்கும், தாங்கு அரு – பெருமை தாங்கி நிற்கும், மரபின் – பழமையான, மகிழ்நனை – மகிழ்ச்சி தோன்றுகின்ற, மறுகின் – தெருக்களையும் உடைய, மதுரையும் – மதுரை மாநகரமும், வறிதே – குறைவானதே (பெறுகின்ற பொருட்களும் குறைவானதாகவே இருக்கும்) அதா அன்று – அது மட்டுமன்று.
சோழநாட்டின் பெருமை
நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் துணை ஆர் கோதை
ஓவத்துஅன்ன உண்துறை மருங்கில்                           
கோவத்து அன்ன கொங்குசேர்பு உறைத்தலின்            [68-71]
நல்ல நீரினைப் பெற்றப் பொய்கையின் கரையிலே நெருக்கமாகப் படர்ந்து நின்ற கடம்ப மரத்தில், அழகிய மாலை போன்று கொத்துக் கொத்தாக மலர்கள் பூத்துக் கிடக்கும். அம்மலர்கள் அந்நீர்த் துறையின் பக்கத்தில், இந்திர கோபம் (மழைக் காலத்தில் வரும் பட்டுப்பூச்சி) போன்ற பூந்தாதுக்களை ஒரு சேர உதிர்த்திருந்தமை ஓவியம்போலக் காட்சியளித்தது.
        சொற்பொருள் விளக்கம் : நறுநீர் – நல்ல நீர், பொய்கை – நீர் நிலை, அடை (சொல்லைச் சிறப்பிக்கும் சொல்) கரை – கரையிலே, நிவந்த – படர்ந்த, துறுநீர் – செறிவாக, கடம்பின் – கடம்ப மரத்தின், துணை – கொத்தாக, ஆர் – அழகிய, கோதைபூ மாலை, ஓவத்து அன்ன – ஓவியம் போன்று, உண்துறை – உண்ணுகின்ற நீருள்ள நீர்த்துறை, மருங்கில் – பக்கத்தில், கோவத்து அன்ன – இந்திரகோபம் (மழைக்காலத்தில் வாழும் பட்டுப்பூச்சி) போன்று, கொங்குசேர்பு – பூந்தாதினை ஒரு சேர, உறைத்தலின் – உதிர்த்தமை,
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
ஆசுஇல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை                       
ஏம இன்துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும்.                  [72-77]
        வளர்கின்ற மார்பினைப் போன்ற வளப்பமான தாமரை மலரின் மொட்டுகள் விரிய, அத்தெய்வத் தாமரை மலர், ஒளி பொருந்திய முகமாக மலர்ந்திருந்தது. குற்றமில்லாத அழகிய உள்ளங்கையில் சிவந்த நிறம் பொருந்தி இருப்பது போன்று, சிவந்த இதழ்கள் நிறைந்த அத்தாமரை மலரின் நடுவிடத்தில், இன்பம் தரும் இனிய துணையைத் தழுவி, சிறகினை அசைத்து, அழகிய வண்டு காமரம் என்ற பண்ணினைப் பாடும்.
சொற்பொருள் விளக்கம் : வருமுலை அன்ன – வளர்கின்ற முலைபோன்ற, வண்முகை – வளமையான மொட்டுகள், உடைந்து – விரிந்து, திருமுகம் – ஒளிபொருந்தியமுகம், அவிழ்ந்த – மலர்ந்த, தெய்வத்தாமரை – தாமரை மலரில் இலக்குமி வாசம் செய்கிறாள் என்பது பற்றி தெய்வம் தாமரை  என்றனர். ஆசு இல் – குற்றமில்லாத, அங்கை – உள்ளங்கை, அரக்கு – சிவப்பு நிறம், செந்நிறம், சாதிலிங்கம், தோய்ந்தன்ன – பொருந்தி இருப்பது போல், சேயிதழ் – சிவந்த இதழ், பொதிந்த – நிறைந்த, செம்பொற் கொட்டை – சிவந்த பொன்னிறமான நடுவிடம், ஏமம் – இன்பம், இன்துணை – இனிய துணை, தழீஇ – தழுவி, இறகு உளர்ந்து – சிறகினை அசைத்து, காமரு – அழகிய, தும்பி – வண்டு, காமரம் – ஒரு வகைப் பண், செப்பும் – பாடும்,
தண்பணை தழீஇய தளரா இருக்கை
குணபுலம் காவலர் மருமான் ஒன்னார்
ஓங்குஎயிற் கதவம் உருமுச்சுவல் சொறியும்                   
தூங்குஎயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே; அதாஅன்று  [78-83]
குளிர்ச்சியான மருத நிலத்தைச் சார்ந்த சோர்வில்லாத (உழைப்பிலே ஈடுபட்டிருக்கும் மக்களைக் கொண்ட) ஊர்கள் விளங்கும் கிழக்குத் திசை நாட்டைக் காத்து வருபவன். சோழ மன்னர்களின் வழித்தோன்றல். இவன் நாட்டுக் குதிரைகள், பகைவர் நாட்டு உயர்ந்த மதிற்சுவரின் கதவுகளில், தனது கழுத்து மயிரை இடிமுழக்கம் போன்று தேய்க்கும். மன்னனோ பகைவர்களின் தூங்கு எயிலை அழித்த பெருமையினைப் பெற்ற சோழர் குலத்தில் தோன்றியவன். தொடி அணிந்த கைகளை உடையவன். இத்தகைய மன்னன் ஆட்சி செய்கின்ற சோழ நாட்டைவிட்டுக் குடிமக்கள் பெயராமல் மனஉறுதியோடு இருப்பதற்குக் காரணமான உறந்தை என்ற ஊரில் நீ பெறுகின்ற பரிசுப் பொருட்களும் குறைவானதாகவே இருக்கும் அது மட்டுமன்று.
(முன்னொரு காலத்தில் நல்லவர்களைத் துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொங்கும் மதிலைச் சோழ மன்னனொருவன் அழித்ததால், தூங்கெயில் எறிந்த பெருமையினைச் சோழர் குலம் பெற்றது என்பர்.  தூங்குஎயில் மூன்றெறிந்த சோழன் (சிலம்பு 5 ; 29) ஒன்னார் உட்கும் கடுந்திறல் தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் (புறம் 39, 5-6) என்பன போன்ற இலக்கிய வரிகளாலும் இச்செய்தியினை அறியலாம்)
சொற்பொருள் விளக்கம் : தண்பணை – மருத நிலம் (வயலும் வயல்சார்ந்த இடமும்) தழீஇய – சார்ந்த, தளரா – சோர்வில்லாத, இருக்கை – ஊர்கள், குணபுலம் – கிழக்கு திசை நாடு, காவலர் – காப்பவன், மருமான் – வழித்தோன்றல், ஒன்னார் – பகைவர், ஓங்கு எயில் – உயர்ந்த மதிற்சுவர், கதவம் – கதவு, உருமு – இடி, சுவல் – குதிரையின் கழுத்து மயிர், சொறியும் – தேய்க்கும், தூங்கு எயில் – தொங்குகின்ற மதில், எறிந்த – அழித்த, தொடி விளங்கு – தொடி அணிந்த, தடக்கை – பெருமை பொருந்திய கைகள், நல்லிசை – நல்ல புகழ், நாடா – நாடியவன், நற்றேர் – நல்ல தேர்ப்படை, செம்பியன் – சோழன், ஓடாப் புட்கை – பெயராத மனவுறுதி, உறந்தையும் – உறந்தை நகரத்திலும், வறிதே – (நீ பெறுகின்ற பரிசுப்பொருட்கள்) குறைவானதே. அது மட்டுமன்று.
கடையெழு வள்ளல்களின் சிறப்பு
பேகன்
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய                          
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்                     [84-87]
மழை ஓயாது பெய்யும் வளமிக்க மலைச் சாரலில், காட்டில் திரிந்த மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தவனும், ஆற்றலும் அழகும் நிறைந்தவனும், ஆவியர் குடியில் தோன்றியவனும், பெரிய மலை நாட்டுக்குத் தலைவனுமாகிய பேகனும்.
சொற்பொருள் விளக்கம் : வானம் – மழை, வாய்த்த – நன்கமைதல், வளமலைக்கவான் – வளமானமலை அடிவாரம், வளமான மலைச்சாரல், கானமஞ்ஞைக்கு – காட்டிலுள்ள மயிலுக்கு, கலிங்கம் – ஆடை, நல்கிய – கொடுத்த, அருந்திறல் – அரிய ஆற்றல், அணங்கின் – அழகினையும் உடைய, ஆவியர் – வேளாளர், வேடர், பெருங்கல் நாடன் – பெரிய மலைநாட்டுக்குத் தலைவன்.
பாரி
...............சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்;            [87 – 91]
வண்டுகள் வந்து தேனை உண்ணுமாறு மணம் வீசும் மலர்களை உதிர்க்கின்ற புன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், சிறிய பூக்களைப் பூக்கின்ற முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரைக் கொடுத்தவனும், ஒலிக்கின்ற அருவி வீழும் மலைச் சாரலில் அமைந்துள்ள பறம்புமலைக்கு அரசனுமாகிய பாரியும்.
சொற்பொருள் விளக்கம் : சுரும்பு – வண்டுகள், உண – உண்ண, நறுவீ – மணம் வீசும் மலர்கள், உறைக்கும் – உதிர்க்கும், நாக – புன்னை மரங்கள், நெடுவழி – நெடிய வழியில், சிறுவீ – சிறிய மலர், முல்லைக்கு – முல்லைக் கொடிக்கு, பெருந்தேர் – பெரிய தேரினை, நல்கிய –கொடுத்த, பிறங்கு – ஒலிக்கும், வெள்ளருவி – வெண்மையான அருவி நீர், வீழும் – விழுகின்ற, சாரல் – மலைச்சாரல், பறம்பின் கோமான் பாரியும் – பறம்பு மலைக்குத் தலைவனாகிய பாரியும்,
காரி
...........................  கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரியும்                         [91-95]
தன்னை நாடி வந்த இரவலருக்கு, ஒலிக்கின்ற மணியும் வெண்மையான தலையாட்டமும் அணிந்த குதிரையோடு, உலகத்தவர் கேட்டு வியக்க அன்பு நிறைந்த சொற்களையும் கொடுத்தவன். பகைவர் கண்டு அஞ்சுகின்ற சினத்தீ விளங்கும் ஒளி வீசும் நீண்ட வேலினை உடையவன். வீரக்கழலும், வளையும் அணிந்துள்ள பெரிய கைகளை உடையவனுமாகிய காரியும்,
சொற்பொருள் விளக்கம் : கறங்குமணி, வால்உளை – வெண்மையான தலையாட்டம், புரவியொடு – குதிரையொடு, வையகம் மருள – உலகத்தவர் கேட்டு வியக்க, ஈர நல்மொழி – அன்புடை நல்ல சொற்கள், இரவலர்க்கு – யாசிப்பவர்க்கு, ஈந்த – வழங்கிய, அழல் – சினத்தீ, திகழ்ந்து – விளங்கி, இமைக்கும் – ஒளிவீசும், அஞ்சுவரு – அஞ்சத்தக்க, நெடுவேல் – நீண்டவேல், கழல்தொடி – காலிலே அணியக்கூடிய வீரக்கழலும், கையிலே அணிந்துள்ள தொடியும் (வளை), தடக்கை – பெருமை பொருந்திய கை.
ஆய் அண்டிரன்
............... நிழல்திகழ்                     
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்                       [95-99]
ஒளிவீசும் நீலமணியைத் தன்னகத்தே கொண்ட நாகம் தனக்குக் கொடுத்த ஆடையினை, ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள இறைவனுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தவன். வில்லைத் தாங்கிய, சந்தனம் பூசி உலர்ந்த வலிமை மிக்க தோளினை உடையவனும், அன்பான மொழிகளைப் பேசியவனுமாகிய ஆய் அண்டிரனும்,
சொற்பொருள் விளக்கம் : நிழல் – ஒளி, திகழ் – விளங்கும், நீல நாகம் – நீலமணியைத் தன்னகத்தே கொண்ட நாகம், நல்கிய – கொடுத்த, கலிங்கம் – ஆடை, ஆல் அமர் செல்வற்கு – ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள சிவனுக்கு, அமர்ந்தனன் – மகிழ்ச்சியுடன், கொடுத்த – வழங்கிய, சாவம் – வலி, தாங்கிய – ஏந்திய, சாந்து பலர் – சந்தனம் பூசி உலர்ந்த, திணிதோள் – திண்ணிய தோள், ஆர்வ நன்மொழி ஆயும் – அன்பான நல்ல மொழி பேசிய ஆய் அண்டிரனும்,
அதிகன்
............................. மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி                                     
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும்                  [99-103]
மேகம் தங்கும் மலையில் மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரலில் அழகிய நெல்லி மரத்தில் அமிழ்தாக விளைந்த இனிய நெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்தவன். பகைவரை அழிப்பதற்கு உறுதியோடு எழுந்த சினத்தீயும், ஒளி மிக்க நெடிய வேலும் ஆரவாரமிக்க கடல் போன்ற படையும் கொண்டவனுமாகிய அதிகனும்,
சொற்பொருள் விளக்கம் : மால் – மேகம், வரை – மலை, கமழ்பூஞ்சாரல் – மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரல், கவினிய – அழகிய, நெல்லி – நெல்லி மரத்தில், அமிழ்து விளை – அமிழ்தாக விளைந்த, தீம்கனி – இனிய கனி, ஔவைக்கு – ஔவைப்பிராட்டிக்கு, ஈந்த – வழங்கிய, உரவுச்சினம் – உறுதியோடு எழுந்த சினம், கனலும் – சினத்தீயும், ஒளி திகழ் – ஒளிமிக்க, நெடுவேல் – நெடிய வேலும், அரவக்கடல்தானை அதிகனும் – ஆரவாரம் மிக்க கடல் போன்ற படையினையுடைய அதிகனும்,
நள்ளி
............................... கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை                   
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும்;                           [103-107]
தன்னிடம் இருக்கும் பொருளை மறைக்காது அன்பு காட்டுவோர் மனம் மகிழுமாறு, அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கான பொருளைக் குறைவின்றிக் கொடுத்தவன். போர் செய்வதில் வல்லவன். மழை விழுவதற்குக் காரணமான, காற்று தங்குகின்ற நெடிய குவடுகளைக் கொண்ட பெருமை பொருந்திய மலைநாட்டுக்குத் தலைவனாகிய நள்ளியும்,
சொற்பொருள் விளக்கம் : கரவாது – மறைக்காது, நட்டோர் – அன்பு காட்டுவோர், உவப்ப – மகிழ, நடைப்பரிகாரம் – வாழ்க்கை நடத்துவதற்கான பொருள், மட்டாது – குறைவிலாது, கொடுத்த – வழங்கிய, முனை விளங்கு தடக்கை – போர் செய்கின்ற பெருமை பொருந்திய கைகள், துளிமழை பொழியும் – மழைத்துளி விழுவதற்குக் காரணமான, வளிதுஞ்சு – காற்று தங்கும், நெடுங்கோட்டு – நீண்டகுவடுகள், நளிமலை நாடன் நள்ளியும் – பெருமை பொருந்திய மலைநாட்டுக்குத் தலைவனாகிய நள்ளியும்,
ஓரி
.......................... நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த                          
ஓரிக்குதிரை ஓரியும்                                  [107-111]
நெருக்கமான கிளைகளில், நறுமணம் வீசும் அரும்புகளைக் கொண்டுள்ள இளமையான உயர்ந்த புன்னை மரங்களையுடைய சிறிய மலைகளைக் கொண்ட நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்கு அளித்தவன். காரி என்னும் குதிரையில் ஏறிவரும் காரி என்ற வள்ளலோடு போரிட்டவன். பிடரிமயிர் அமைந்த குதிரையினை உடையவன். இத்தகைய ஓரியும்,
சொற்பொருள் விளக்கம் : நளிசினை – நெருக்கமான கிளை, நறும்போது – நறுமணம் வீசும் அரும்பு, கஞலிய – விளங்கிய, நாகு – இளமை, முதிர் – உயர்ந்த, நாகத்து – புன்னை மரத்தை, குறும்பொறை – சிறிய மலை, நல்நாடு – நல்லநாடு, கோடியர்க்கு – கூத்தருக்கு, ஈந்த – வழங்கிய, காரக்குதிரை – காரி என்னும் குதிரையினையுடைய, காரியொடு – காரி என்ற வள்ளலொடு, மலைந்த – போரிட்ட, ஓரிக் குதிரை – பிடரிமயிரினையுடைய குதிரை,
......................... என ஆங்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்           [111-112]
என்று பிறருக்குக் கொடுக்கும் தன்மையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட ஏழு வள்ளல்களும், தமக்கு எதிராக எழுகின்ற போரினை வென்ற கணைய மரத்தை ஒத்த தோளமைந்தவர்கள்.
சொற்பொருள் விளக்கம் : என ஆங்கு – என அக்காலத்து (சிறப்பாகச் சொல்லப்பட்ட) எழுசமம் – எதிராக எழுகின்ற போர், கடந்த – வென்ற, எழு – கணைய மரம், கடந்த – வென்ற, எழு – கணை மரம், உறழ் – ஏத்த, திணி தோள் – திண்ணிய தோள்.
நல்லியக்கோடனின் ஈகைச்சிறப்பு
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோன்றாள்         [113-115]
அவ்வள்ளல்கள் எழுவரும் மேற்கொண்ட கொடையாகிய பாரத்தை, விரிந்த கடலை வேலியாகக் கொண்ட பரந்த இந்த உலகம் விளங்கும்படி, தான் ஒருவனே தாங்கிய திண்ணிய வலிய காலை உடையவன்.
சொற்பொருள் விளக்கம் : எழுவர் பூண்ட – கடையெழு வள்ளல்கள் மேற்கொண்ட, ஈகை – வள்ளன்மை, கொடை, செந்நுகம் – செம்மையான பாரம், விரிகடல் – விரிந்த கடல், வேலி – வேலியாக, வியலகம் – பரந்த உலகம், விளங்க – விளங்குமாறு, ஒரு தான் தாங்கிய – தான் ஒருவனே தாங்கிய, உரனுடை நோன்தாள் – திண்ணிய வலிய கால்.
நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறைஆடு மகளிர்க்குத் தோட்புணை ஆகிய
பொருபுனல் தரூஉம், போக்கறு மரபின்
தொல்மா இலங்கைக் கருவொரு பெயரிய
நல்மா இலங்கை மன்ன ருள்ளும்                                     
மறுஇன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறுபுலித் துப்பின், ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்புஇருந்த கழல்தயங்கு திருந்துஅடி
பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை
பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை                   [116-125]
மணம் வீசும் மலர்களையுடைய புன்னை, அகில் சந்தனம் ஆகிய மரங்களின் கட்டைகளை நீர்த் துறையிலே நீராடுகின்ற மகளிருக்குத் தெப்பமாக நீர்ப்பெருக்குக் கொணர்ந்து தருகின்ற குற்றமில்லாத பழமையான புகழினையுடைய, தொன்மையான பெரிய இலங்கையின் பெயரைத் தான் கருவிலே தோன்றிய போதே பெற்று, நல் இலங்கை நாட்டை ஆண்ட மன்னருள்ளும் குறையின்றி விளங்கிய குற்றமில்லாதவன். குறி தப்பாது வாளேந்தி வெற்றி பெற்ற வீரன். வலிமையில் புலியினைப் போன்றவன். ஓவியர் குடியிலே பிறந்தவன். பெருமைக்கு உரியவன். யானையைச் செலுத்தியதால் உண்டான தழும்புடைய வீரக்கழல் ஒளிவீசுகின்ற திருந்திய அடியினை உடையவன். பெண் யானைக் கூட்டங்களை இரவலருக்குப் பரிசாகக் கொடுத்த மழை போலும் கைகளை உடையவன். பல வாத்தியங்களை இசைக்கும் கூத்தர்களைப் பாதுகாப்பவன். பெரும் புகழினை உடையவன்.
சொற்பொருள் விளக்கம் : நறுவீ நாகமும் – மணம் வீசும் மலர்களையுடைய புன்னை மரமும், அகிலும், ஆரமும் – அகிலும், சந்தனக்கட்டைகளும், துறை ஆடு – நீர்த்துறையிலே நீராடுகின்ற, மகளிர்க்கு – பெண்களுக்கு, தோட்புணை ஆகிய – தெப்பமாக, பொருபுனல் – நீர்ப்பெருக்கு, தரூஉம் – கொணர்ந்து தரும், போக்கறு – குற்றமில்லாத, மரபின் – பழமையான, தொல்மா இலங்கை -  தொன்மையான பெரிய இலங்கை, கருவொடு பெயரிய – கருவில் தோன்றிய போதே பெற்ற, நல்மா இலங்கை – நல்ல இலங்கை, மன்னருள்ளும் – மன்னர்களுள்ளும், மறுஇன்றி – குறையின்றி, விளங்கிய – விளங்கிய, வடுஇல் – குற்றமில்லாத, வாய்வாள் – குறி தப்பாத வாள், உறுபுலி துப்பின் – புலி ஒத்த வலிமையன், ஓவியர் பெருமகன் – ஓவியர் குடியிலே பிறந்த பெருமைக்குரியவன், களிற்றுத் தழும்பு இருந்த கழல் – யானையைச் செலுத்தியதால் உண்டான தழும்பு இருந்த கால்களில் கழல், தயங்கு – ஒளி வீசும், திருந்து அடி – திருந்திய அடி, பிடிக்கணம் – பெண் யானைக் கூட்டம், சிதறும் – வாரி இறைக்கும், பெயல் மழைத் தடக்கை – மேகங்களால் பெறுகின்ற மழைபோன்று வழங்கும் பெருமை பொருந்திய கைகள், பல்இயம் – பல வாத்தியம், கோடியர் – கூத்தர், புரவலன் – பாதுகாப்பவன், பேர் இசை – பெரும் புகழ்.
பரிசு பெற்ற பாணன்
மன்னனைப் பாடிச் சென்ற முறை
நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு
தாங்கரு மரபின் தன்னும், தந்தை
வான்பொரு நெடுவரை வளனும் பாடி
முன்நாள் சென்றனம் ஆக                              [126-129]
நலங்கள் தாங்கள் விரும்பியதைப் பெறுகின்ற நோக்கோடு பெருமை தாங்கி நிற்கும் பரம்பரையில் வந்த நல்லியக்கோடனையும், அவன் தந்தையின் விண்ணை முட்டும் வளத்தையும் பாடி, சில நாட்களுக்கு முன்னால் அவனிடம் சென்றோம். அதனால்,
சொற்பொருள் விளக்கம் : நயந்த – விரும்பியதை, கொள்கையொடு – பெறுகின்ற, தாங்கு அரு – பெருமை தாங்கி நிற்கும், மரபின் – பரம்பரையில், தன்னும் – நல்லியக்கோடனையும், தந்தை – அவனது தந்தை, வான்பொரு – விண்ணை முட்டும், நெடுவரை – நீண்ட மலை, வளனும் பாடி – வளமையும் பாடி, முன்நாள் – சில நாட்களுக்கு முன்னர், சென்றனம் – சென்றோம், ஆக – அதனால்,
நல்லியக்கோடனைக் காணுமுன்
இருந்த வறுமைநிலை
....................  இந்நாள்                                   
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை                         
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்        [130-132]
விழிக்காத கண்களையும், வளைந்த காதுகளையும் உடைய நாய்க்குட்டி, தனது பால் மடியில் வாய்வைத்தும் பால் அருந்த முடியாது (குட்டிக்குக்கூட பாலில்லாத வற்றிய முலையுடைய நாய்) வருந்தும் நிலையினைச் சகியாது, அண்மையில் குட்டிகளை ஈன்ற தாய் நாய் குரைத்துக்கொண்டிருந்த ஏழ்மையான அடுக்களை.
சொற்பொருள் விளக்கம் : இந்நாள் – காண்பதற்கு முன்னால் உள்ள நாட்களில், திறவாக்கண்ண – விழிக்காத கண்ணையும், சாய் செவி – சாய்ந்த செவி, குருளை – குட்டி, கறவா – தாயின் மடியிலிருந்து பாலைப் பெறாத, பால் முலை – பால் கொடுக்கும் முலை, கவர்தல் – அருந்துதல், நோனாது – சகியாது, ஆற்றாது, புனிற்று நாய் – அண்மையில் குட்டிகளை ஈன்ற நாய், குரைக்கும் – ஓசை எழுப்பும், ஆரவாரிக்கும், புல்லென் – ஏழ்மையான, அட்டில் – அடுக்களை (சமையலறை)
காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்                       
வளைக்கை கிணைமகள் வள்உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன்மிசையும்
அழிபசி வருத்தம் வீட............                            [133-140]
அடுக்களையின் கூரைக்கழிகள் இற்று வீழ்ந்து கிடக்கும். பழைய சுவரில் கரையான் கூட்டம் அரித்துச் சேர்த்த புழுதியில் உள்துளையிட்டு காளான் பூத்திருக்கும். இத்தகைய ஏழ்மையான வீட்டில் பசியால் வருந்தி மெலிந்த ஒடுங்கிய வயிறினையும், வளையணிந்த கைகளையுமுடைய கிணைப் பறை கொட்டும் பாணனின் துணைவி, கூர்மையான நகத்தினால் கிள்ளிய குப்பைக் கீரையை, உப்பின்றி வேக வைத்து அதை மற்றையோர் பார்த்து விட்டால் நகைப்பிற்கு உள்ளாகிவிடுமோ என்று நாணி, வாசல் கதவை அடைத்துத் தன் பெரிய சுற்றத்தோடு சேர்ந்து உடனே உண்ணும் கொடிய உயிரை அழிக்கும் பசித்துன்பம் நீங்குமாறு.
சொற்பொருள் விளக்கம் : காழ்சோர் – கழி இற்று கோல் இற்று, முதுசுவர் – பழைய சுவர், கணம் – கூட்டம், சிதல் – கரையான், அரித்த – அரித்த, பூழி – புழுதி, பூத்த – தோன்றியுள்ள, புகழ் – உள்துளை, காளாம்பி – காளான், ஒல்குபசி – வருத்துகின்ற பசி, உழந்த – வருந்த, ஒழுங்கு – சுருங்கி, நுண்மருங்கில் – மெலிந்த வயிறும், வளைக்கை – வளையணிந்த கை, கிணைமகள் – விறலியர் (கிணைமருதப் பறை, உடுக்கை), வள்உகிர் – கூர்மையான நகம், குறைத்த – பறித்த, குப்பை வேளை – குப்பையில் விளைந்த கீரை, உப்பிலி – உப்பில்லாது, வெந்த – வேகவைத்ததை, மடவோர் – (புறங்கூறும்) அறியாமையுடையோர், காட்சி – கண்ணுறல், நாணி – வெட்கமடைந்து, கடையடைத்து – வாயிலை அடைத்து, இரும்பேர் – பெரிய, ஒக்கலொடு – சுற்றத்தோடு, ஒருங்கு – முழுவதும், உடன் – உடனே, மிசையும் – உண்ணும், அழிபசி – (உயிரை) அழிக்கும்பசி, வருத்தம் – துன்பம், வீட – நீங்க)
நல்லியக்கோடனின் வறுமை போக்கிய வள்ளன்மை
...................... பொழிகவுள்                                       
தறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கின்
சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி
யாம் அவண் நின்றும் வருதும்.                 [140-143]
மதநீர் ஒழுகும் கன்னங்களும், கொல்லுகின்ற வலிமையும், இரு பக்கங்களும் மணிகள் அசைந்தாடும் சிறிய கண்களையுமுடைய யானையோடு பெரிய தேரினையும் பெற்று அவனிடமிருந்து நாங்கள் வருகின்றோம்.
சொற்பொருள் விளக்கம் : பொழிகவுள் – மதநீர் ஒழுகும் கன்னம், தறுகண் – கொல்லுகை, பூட்கை – வலிமை, தயங்குமணி – அசைகின்ற மணி, மருங்கின் – பக்கத்தில், சிறுகண் யானையோடு – சிறிய கண்களையுடைய யானையோடு, பெருந்தேர் – பெரிய தேர், எய்தி – அடைந்து, பெற்று, அவண் நின்றும் – அவ்விடமிருந்து (நல்லியக்கோடன் அரண்மனையிலிருந்து) வருதும் – வந்து கொண்டிருக்கிறோம்.
பாணனின் ஆற்றுப்படுத்தும் பண்பு
........................... நீயிரும்
இவண்நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்        [143-145]
நீங்களும் உங்களோடு இங்கே அன்புடன் இருக்கின்ற சுற்றத்தாருடன் நிறைவான உள்ளத்தோடு நல்லியக்கோடனிடம் செல்வீர்கள் என்றால்,
சொற்பொருள் விளக்கம் : நீயிரும் – நீங்களும், இவண் – இவ்விடம், இங்கே, நயந்து இருந்த – அன்புடன் இருக்கின்ற, இரும்பேர் ஒக்கல் – பெரிய சுற்றத்தினர், செம்மல் – உயர்ந்த நிறைவான, உள்ளமொடு – உள்ளத்துடன், செல்குவீர் ஆயின் – செல்வீர்கள் என்றால்.
எயிற்பட்டினத்திற்குச் செல்லும் வழியும்
பரதவர் தரும் விருந்தும்
அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடல்உலாய் நிமிர்தர                     
பாடல் சான்ற நெய்த நெடுவழி
மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவின் பட்டினம் படரின்              [146-153]
அலைநீர் மோதுகின்ற கரையிலுள்ள தாழை, வெள்ளைநிறத்து அன்னம் போல் பூக்களைப் பூத்திருக்கும். செருந்தி மலர்கள் பூத்த முதல் நாளில் பொன்னை ஒத்து திகழும். நீலமணியோ என மனத்தடுமாற்றம் கொள்ளும் வகையில் ஒளிமிக்க பூக்களை நீர் முள்ளி முதற் சூலில் பூத்திருக்கும். நீண்ட அடிமரத்தையுடைய புன்னை மரம் முத்துக்களைச் சேமித்து வைத்திருப்பது போல் அரும்புகளைப் பெற்றிருக்கும் இத்தகைய கடற்கரை வெண்மணலில் கடல்நீர் பரவி ஏறுகின்ற, புகழ் விளங்கும் நெய்தல் நிலத்து நீண்ட வழியில் நடந்தால் நீல மணி போன்ற நீர் வளம் நிறைந்த ஊர்களும், மதிலால் சூழப்பட்ட குளிர்ந்த நீரினையுடைய குளங்களையும் கொண்ட எயிற்பட்டினத்தை அடைவீர். அங்குச் சென்றால்.
சொற்பொருள் விளக்கம் : அலைநீர் – கடலலை, தாழை – தாழை, அன்னம் பூப்பவும் – அன்னம் போல் பூக்கவும், தலைநாள் – முதல் நாள், செருந்தி – செருந்தி மலர், தமனியம் – பொன், மருட்டவும் – ஒத்திருக்கவும், கடுஞ்சூல் – முதற்சூல், முண்டகம் – நீர் முள்ளி, கதிர் மணி – ஒளிவீசும் நீல மணி, அலவும் – மனத்தடுமாற்றம், நெடுங்கால் – நீண்ட அடிமரம், புன்னை – புன்னை மரம், நித்திலம் – முத்து, வைப்பவும் – சேமித்து வைத்திருப்பது போல் இருக்கவும், கானல் – கடற்கரை, வெண்மணல் – வெண்மையான மணலில், கடல் உலாய் – கடல் நீர்ப்பரவி, நிமிர்தர – உயர்கின்ற, பாடல் சான்ற – புகழ்விளங்கும், நெய்தல் நெடுவழி – நெய்தல் நிலத்து (கடலும் கடலம் சார்ந்த இடமும்) நீண்ட வழியில், மணிநீர் – நீலமணி போலும் நீர் நிறைந்த ஊர், மதிலோடு – மதிலால், பெயரிய – நிரம்பிய, பனிநீர் – குளிர்ந்த நீர், படுவின் – குளத்தின், பட்டினம் – கடற்கரையை ஒட்டியுள்ள ஊர், படரின் – சென்றால்,
ஓங்குநிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரை மரவிறகின்                     
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்
மதி ஏக்கறூஉம் மாசுஅறு திருமுகத்து
நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்                     
தளைஅவிழ் தெரியல் தகையோற் பாடி
அறல்குழல் பாணி தூங்கி யவரொடு
வறல்குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர்            [154-163]
உயர்ந்த ஒட்டகம் படுத்து உறங்குவதுபோல் கிடக்கின்ற கடல் கொண்டு வந்து ஒதுக்கிய மணம் வீசும் அகில் மரக்கட்டைகளை விறகாக்கி, கரும்புகை எழச் செந்தீயினை மூட்டி, நீண்ட தோள்களையும், நிலவு இவர்களின் முகத்தைப் போல மாசு மறுவற்ற திருமுகம் தமக்கு இல்லையே என்று ஏக்கம் கொள்ளும் அழகிய திருமுகத்தையும் கூர்மையான வேல் போலும் கண்களையும் உடைய நெய்தல் நில மகளிர், காய்ச்சித் தூசு நீக்கி வடிகட்டித் தந்த பழைய கள்ளைப் பரதவர் உண்ணக் கொடுப்பர்.
கிளைகளில் பூக்கள் மலர்ந்திருக்கும் பூந்தோட்டங்களையுடைய கிடங்கில் என்னும் ஊருக்குச் சென்று அரசனும், மொட்டுகள் மலர்ந்த பூமாலையைச் சூடியப் பெருமைக்குரியவனுமாகிய நல்லியக்கோடனின் புகழினை நீவீர் பாட, குழலிசையின் வரையறுத்த தாளத்திற்கு ஏற்ப விறலி ஆட, உலர்ந்த குழல் மீன் கறியை மனைதொறும் உமக்குத் தருவர். நீவீர் பெற்று மகிழ்வீர்.
சொற்பொருள் விளக்கம் : ஓங்குநிலை – உயர்ந்து விளங்கும், ஒட்டகம் – ஒட்டகம், துயில் மடிந்தன்ன – உறங்கிக் கிடப்பதுபோல, வீங்கு திரை – பருத்து எழுகின்ற அலை, கொணர்ந்த – கொண்டு வந்த, விரை – மணம், மர விறகின் – மரக்கட்டைகளை விறகாக்கி, கரும்புகை – கருமையான புகை எழ, செந்தீ – செந்நிறமுடைய தீ, மாட்டி – கொளுத்தி, பெருந்தோள் – பெரிய தோள், மதி – நிலவு, ஏக்கறூஉம் – ஏக்கம் கொள்ளும், மாசுஅறு – குற்றமில்லாத, திருமுகத்து – அழகிய முகத்தை, நுதிவேல் – கூர்மையானவேல், நோக்கின் – கண்களின், நுளைமகள் – நெய்தல் நில மகளிர், அரித்த – காய்ச்சி வடிகட்டிய, தூசு நீக்கிய, பழம்படு – பழைய கள், பரதவர் – நெய்தல் நில ஆடவர், மடுப்ப – உண்ணக் கொடுப்பர், கிளைமலர் – கிளைகளில் இருக்கும் மலர், படப்பை – பூந்தோட்டம், கிடங்கில் கோமான் – கிடங்கில் என்னும் ஊருக்கு அரசன், தளை அவிழ் – மொட்டு அவிழ்ந்த, தெரியல் – பூ மாலை, தகையோன் பாடி – பெருமைக்குரிய வனைப்பாடி, அறல் – வரையறைக்குட்பட்ட, குழல் – குழல் (இன்னிசை எழுப்பும் கருவி), பாணி – தாளம், தூங்கி – ஆடி, அவரொடு – விறலியொடு, வறல் – உலர்ந்த, குழல் – ஒரு வகை மீன், சூட்டின் – குறைச்சிக்கறியோடு, பெறுகுவீர் – பெற்று உண்பீர்.
வேலூர் செல்லும் வழியும்
எயினர் தரும் விருந்தும்
பைந்நனை அவரை பவழம் கோப்பவும்
கருநனைக் காயா கணமயில் அவிழவும்                       
கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்
கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்
முல்லை சான்ற முல்லைஅம் புறவின்
விடர்கால் அருவி வியன் மலைமூழ்கிச்                       
சுடர்கால் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வேல் நுனியின் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூர் எய்தின்           [164-173]
அவரைக்கொடியிலுள்ள பசுமையான மொட்டுகள், பவளம் கோத்தது போன்று பூத்திருக்கும். கருநிறக் காயா மலரின் அரும்பு, மயில்கள் கூட்டமாக இருப்பதுபோல் மலர்ந்திருக்கும். செழுமையாக வளர்ந்துள்ள முசுண்டைக் கொடியில், பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிபோல பூக்கள் பூத்திருக்கும். செழிப்புடன் கொத்தாகப் பூத்திருக்கும் காந்தள் மலர் கைவிரலைப் போல் மலர்ந்திருக்கும். இத்தகைய வீட்டின் பின்புறக் கொல்லையிலுள்ள நீண்ட வழியில் இந்திர கோபப்பூச்சி (பட்டுப்பூச்சி) ஊர்ந்து செல்லும். மலைப்பிளவுகளில் அருவி வீழும். அம்மலையின் பின்னே சூரியன் மறைகின்ற மாலைக்காலத்தில், ஆற்றலுடைய வேலின் நுனி போன்று முல்லை நிலத்துப் பெருமைக்குச் சான்றாக விளங்கும் முல்லை மலர் பூத்திருக்கின்ற சிறிய குளத்தைக் கொண்டதும், பெருமை பொருந்தியதும், வேலினால் வெற்றியைப் பெற்றதுமாகிய வேலூரைச் சேர்ந்தால்,
சொற்பொருள் விளக்கம் : பைந்நனை – பசுமையான மொட்டு, அவரை – அவரைக் கொடி, பவழம் கோப்பவும் – பவளத்தைக் கோத்தது போன்று (பூக்களைப் பூத்திருக்கவும்), கருநனை – கரிய மொட்டு, காயா – காயாமலர், கணமயில் – மயில் கூட்டம், அவிழவும் – மலரவும், கொழுங்கொடி – செழுமையான கொடி, முசுண்டை – முசுண்டைக்கொடி, கொட்டம் கொள்ளவும் – ஓலையால் செய்யப்பட்ட பெட்டிபோல (பூக்களைப் பூத்திருக்கவும்), செழுங்குலை – செழிப்புடன் கொத்தாக, காந்தள் – காந்தள் மலர், கைவிரல் பூப்பவும் – கைவிரல் போல் மலர்ந்திருக்கவும், கொல்லை – வீட்டின் பின்புறம், நெடுவழி – நீண்ட வழியில், கோபம் – இந்திர கோபம் (பட்டுப்பூச்சி), ஊரவும் – ஊர்ந்து செல்லவும், முல்லை சான்ற முல்லை அம்புறவின் – முல்லைமலர் பூத்திருக்கும் முல்லை நிலமாகிய அழகிய காட்டில், விடர்கால் அருவி – மலைப் பிளவுகளில் உள்ள அருவி, வியன் மலை – பெருமை பொருந்திய மலை, மூழ்கி – மறைந்து, சுடர்கால் மாறிய – சூரியன் மறைகின்ற, நுனியின் – ஆற்றலுடைய வேலின் நுனி போன்று, பூத்த கேணி – பூக்களைப் பூத்திருக்கும் சிறுகுளம், விறல்வேல் – பெருமையுடைய வேல், வெற்றியையுடைய வேல், வென்றி – வெற்றி பெற்ற, வேலூர் எய்தின் – வேலூரை அடைந்தால்.
முருகன் கையில் வலியினை உடைத்தாகிய வேலின் நுதி போலே கேணி பூக்கப்பட்ட, வெற்றியையுடைய வேலாலே வெற்றியை உடைய வேலூரைச் சேரின் என்றது. நல்லியக்கோடன் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வழிபட்ட வழி, அவன் இக்கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை எறியென்று கனவிற் கூறி, அதிற் பூவைத் தன் வேலாக நிருமித்ததொரு கதை கூறிற்று. இதனானே வேலூர் என்று பெயராயிற்று என்பதாம் பத்துப்பாட்டு, நச்சினார்க்கினியர் உரை பக்கம் 119.
உறுவெயிற்கு உலைஇய உருப்புஅவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனி சில்வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்          [174-177]
மிக்க வெயில் வருத்துவதால், ஒளிரும் வெப்பத்திற்காக குடிசையின் உள்ளேயே இருக்கின்ற எயிற்றியர், (பாலைநில மகளிர்) இனிய மாந்தளிர் போலும் மேனியும், சில வளையல்களையும் அணிந்த தோழியர்க் கூட்டத்துடன் இருந்து, இனிய புளியிட்டுச் சமைத்த கறியோடு சூடான சோற்றினை, காட்டுப் பசுவின் இறைச்சியோடு தர நிறைவாகப் பெற்று உண்பீர்.
சொற்பொருள் விளக்கம் : உறுவெயிற்கு – மிக்க வெயிலுக்கு, உலைஇய – வருந்திய, உருப்பு – வெப்பம், அவிர் – ஒளிரும், விளங்கும், குரம்பை – குடிசை, எயிற்றியர் – பாலை நில மகளிர், அட்ட –  சமைத்த, இன்புளி – இனிய புளியிட்டு, வெஞ்சோறு – சூடான சோற்றினை, தேமா மேனி – இனிய மாந்தளிர் போலும் மேனி, சில்வளை – சில வளையல்கள், ஆயமொடு – தோழியரோடு, ஆமான் – காட்டுப் பசு, சூட்டின் – இறைச்சியின், அமைவர – நிறைவாக, பெறுகுவிர் – பெற்று உண்பீர்.
ஆமூர் வளமும் உழத்தியரின் உபசரிப்பும்
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி
நிலைஅரும் குட்டம் நோக்கி, நெடிது இருந்து           
புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்உகிர் கிழித்த வடுஆழ் பாசடை
முள்அரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்
மதிசேர் அரவின் மானத் தோன்றும்
மருதம் சான்ற மருதத் தண்பணை
அந்தண அருகா அருங்கடி வியன்நகர்
அம்தண் கிடங்கின், அவன்ஆமூர் எய்தின் [178-188]
அன்றலர்ந்த மணம் வீசும் மலர்களால் பூ மாலை தொடுத்திருப்பது போன்று தோற்றமளிக்கும் கிளைகளையும், குட்டையான அடி மரத்தையும் உடைய காஞ்சி மரத்தின் கிளைகளில் ஏறி, வறண்டகாலத்தும் நீர்வற்றாது நிலை பெற்ற அருமையான குளத்தை நோக்கி, நீண்ட நேரம் காத்திருந்து புலால் நாற்றம் வீசும் மீன்களை எடுத்த, பொன்நிற வாயுடைய மீன் கொத்திப் பறவை (கிச்சிலிப்பறவை)யின் நகம் கிழித்த வடு பதிந்துள்ள, பசுமையான இலைகளையும், முள்ளுடன் கூடிய தண்டினையும் கொண்ட குவிந்த வெண் தாமரை, விரிகின்ற வைகறைப் பொழுதில், அம்மலரிலுள்ள தேனை உண்பதற்காக, நீல நிறமும் சிவந்த கண்களுமுடைய ஆண் வண்டு வந்து அமர்வது, வெண்மதியைக் கவரும் கருநாகம் போன்று காட்சியளிக்கும். மருத நில வளத்திற்குச் சான்றாகத் திகழும் மருத நிலத்து குளிர்ச்சியான வயல்களும், அழகிய குளிர்ந்த நீரினைக் கொண்ட அகழியும் அந்தணர்கள் நீங்காதிருக்கும் அரிய காவலையுமுடைய, பெருமை படைத்த நகரமாகிய நல்லியக்கோடனின் ஆமூரைச் சென்றடைந்தால்.
சொற்பொருள் விளக்கம் : நறும்பூங்கோதை – மணம்வீசும் பூமாலை, தொடுத்த – தொடுத்திருத்தல், கட்டியிருத்தல், நாட்சினை – அன்றலர்ந்த மலர்களை உடைய கிளை, குறுங்கால் – குறுகிய அடிமரம், காஞ்சிக் கொம்பர் ஏறி – காஞ்சி மரத்தின் மரக்கிளைகளில் ஏறி, நிலை அரும்குட்டம் – வறண்ட காலத்தும் நீர் நிலைபெற்ற அருமையான குளம், நோக்கி – பார்த்து, நெடிது இருந்து – நீண்ட நேரம், காத்திருந்து புலவு – புலால் நாற்றம் வீசும், கயலெடுத்த – மீன்களையெடுத்த, பொன்வாய் – பொன்நிற வாயுடைய, மணிச்சிரல் – மீன்கொத்திப் பறவை, வள்உகிர் – கூரிய நகம், கிழித்த வடுஆழ் – கிழித்த வடு பதிந்துள்ள, பாசடை – பசுமையான இலை, முள் அரைத்தாமரை – முள்ளுடன் கூடிய தண்டினைக் கொண்ட தாமரை, முகிழ் – குவிந்த, விரி – விரிகின்ற, நாட்போது – வைகறைப்பொழுது, கொங்கு – தேன், கவர் – உண்ணவரும், நீலச் செங்கட் சேவல் – நீல நிறமும் சிவந்த கண்களும் உடைய ஆண் வண்டுகள், மதிசேர் – வெண்மதியைக் கவரும், அரவின் – கருநாகத்தின், மானத் தோன்றும் – ஒப்பக் காட்சியளிக்கும், மருதம் சான்ற – மருத நில வளத்திற்குச் சான்றாக விளங்கும்,  மருதத் தண்பணை – மருத நிலத்துக் குளிர்ச்சியான வயல்களும், அந்தணர் அருகா – அந்தணர் நீங்காதிருக்கும், அருங்கடி – அரிய நகரம், அம்தண் கிடங்கின் – அழகிய குளிர்ந்த நீரினைக் கொண்ட அகழியும், அவன் ஆமூர் – அவனது (நல்லியக்கோடன்) ஆமூர், எய்தின் – சென்றடைந்தால்.
வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின்
உரன்கெழு நோன்பகட்டு உழவர் தங்கை                       
பிடிக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
இருங்கா உலக்கை இரும்புமுகம் தேய்த்த
அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்.  [189-195]
வெற்றியைத் தரும் (உழவுத்தொழில்) பாரத்தை இழுத்து நடக்கும் (ஏர் உழுதல்) திண்ணிய கழுத்தினையுடைய ஊக்கம் மிகுந்த வலிய எருதுகளை வைத்திருக்கும் உழவரின் தங்கையான, பிடியினது துதிக்கையினை ஒத்தப் பின்னல் தொங்குகின்ற (கூந்தல்) சிறிய முதுகினையும், வளையணிந்த கைகளையுமுடைய பெண், தன் மக்களைத் துணையாகக்கொண்டு உம்மைத் தடுத்து இரும்பாலான உலக்கையின் பூண் தேயுமாறு நன்றாக குற்றிய அரிசியைக் கொண்டு சமைத்த வெண்மையான சோற்றினைப் பிளந்த காலினையுடைய நண்டின் கறியோடு கலந்து சோற்றுக்கட்டியாகத் தர, நீவீர் உண்பீர்.
சொற்பொருள் விளக்கம் : வலம்பட – வெற்றியைத் தருவதற்கு, நடக்கும் – இழுத்து நடக்கும், வலிபுணர் எருத்தின் – வலிமையான கழுத்தினைக் கொண்ட, உரன்கெழு நோன்பகட்டு – ஊக்கம் மிகுந்த வலிய எருது, உழவர் – உழவர், தங்கை – தங்கையர், பிடிக்கை அன்ன – பெண் யானையின் துதிக்கை போன்ற, பின்னு வீழ் சிறுபுறத்து – பின்னல் தொங்குகின்ற சிறிய முதுகுப்புறத்தையும், தொடிக்கை – வளையணிந்த கை, மகடூஉ – பெண், மகமுறை – மக்களைத் துணையாகக் கொண்டு, தடுப்ப – தடுத்து, இருங்காழ் – இரும்பாலான கம்பு, உலக்கை – நெல்குற்றுவதற்குப் பயன்படுவது இரும்பு முகம் தேய்த்த இரும்பினாலான பூண் தேயுமாறு, அவைப்பு – குற்றிய, மாண் அரிசி – நன்றாகக் குற்றிய அரிசி, அமலை – சோற்றுக்கட்டி, வெண்சோறு – வெண்மையான அரிசிச் சோறு, கவைத்தாள் – விளவுபட்ட கால், அலவன் – நண்டு, கலவையொடு – கலந்து, பெறுகுவிர் – பெற்று உண்பீர்.
நல்லியக்கோடனின் ஊர்ச்சிறப்பும்
அதன் அண்மையும்
எறிமறிந் தன்ன நாவின் இலங்குஎயிற்றுக்
கருமறிக் காதின் கவைஅடிப் பேய்மகள்
நிணன்உண்டு சிரித்த தோற்றம் போல
பிணன்உகைத்துச் சிவந்த பேர்உகிர், பணைத்தாள்
அண்ணல் யானை அருவிதுகள் அவிப்ப                       
நீறுஅடங்கு தெருவின் அவன்சாறு அயர்மூதூர்
சேய்த்தும் அன்று; சிறிது நணியதுவே                   [196-202]
தீப்பிழம்பு சாய்ந்தாற் போன்ற நாக்கும், விளங்கும் பற்களும், கரிய ஆட்டின் குட்டிகளை அணிகலனாக அணிந்துள்ள செவிகளும், பிளவுபட்ட அடிகளும் கொண்ட பெண்பேய் ஊனைத் தின்று சிரிக்கின்ற தோற்றம் போல, பிணங்களைக் காலால் மிதித்துச் சிவந்த பெரிய நகங்களைக் கொண்ட தலைமைத் தன்மை பொருந்திய யானைகள் மதநீரினை அருவி போலச் சொரிந்தன. அந்நீரினால் தெருக்களில் எழுந்த புழுதியானது அடங்கியது. இவ்வாறு தெருக்களில் புழுதி அடங்கிய விழாக்கள் நடைபெறும் பழமையான ஊர் நல்லியக்கோடனின் ஊர். அவ்வூரும் ஆமூரிலிருந்து தூரமல்ல. சிறிது அண்மையிலேதான் உள்ளது.
சொற்பொருள் விளக்கம் : எறி – தீப்பிழம்பு, மறிந்தன்ன – திருப்புதல் அன்ன, சாய்ந்தாற்போல், நாவின் – நாக்கில், இலங்கு எயிற்று – விளங்கும் பற்களும், கருமறிக் காதின் – கரிய ஆட்டுக்குட்டிகளை அணிகலனாக அணிந்துள்ள செவிகளும், கவைஅடி – பிளவுபட்ட அடிகளும், பேய்மகள் – பெண்பேய், நிணன் உண்டு – ஊனைத் தின்று, சிரித்த தோற்றம்போல – சிரிக்கின்ற தோற்றத்தைப் போல, பிணன் உகைத்து – பிணங்களைக் காலால் மிதித்து, சிவந்த பேர் உகிர் – சிவந்த பெரிய நகங்கள், பணைத்தாள் – பெருமை பொருந்திய கால்கள், அண்ணல் யானை – தலைமைத் தன்மை பெற்றுள்ள யானை, அருவி – மதநீர் அருவி, துகள் – புழுதி, அவிப்ப – அடங்க, நீறு – புழுதி, அடங்கு – அடங்கிய, தெருவின் – தெருவினையுடைய, அவன் – நல்லியக்கோடன், சாறு அயர் மூதூர் – விழாக் கொண்டாடப்படும் பழமையான ஊர், சேய்த்தும் அன்று – தொலைவுமன்று, தூரமுமன்று, சிறிது நனியதுவே – சிறிது அண்மையிலேதான் உள்ளது.
நல்லியக்கோடனின் அரண்மனை வாயில்
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்
கடவுள் மால்வரை கண் விடுத்தன்ன
அடையாவாயில் அவன்அருங் கடைகுறுகி       [203-206]
இறைவன் வாழுகின்ற மேருமலை ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பது போல நல்லியக்கோடனின் அரண்மனையும், பாடிப்பரிசில் பெற வந்திருக்கும், பொருநர்க்கு (புகழ்ந்து பாடுவோர்) என்றாலும் புலவர்க்கு என்றாலும், அரிய வேதங்களை ஓதுகின்ற அந்தணர்க்கு என்றாலும் அடையாத வாயிலையுடையது. இவ்வாயிலை அணுகினால்.
சொற்பொருள் விளக்கம் : பொருநர் – புகழ்ந்து பாடுவோர், புலவர் – அறிஞர், அருமறை – அரிய வேதம், நாவின் – ஓதுகின்ற நாவினையுடைய, அந்தணர்க்கு என்றாலும் – அந்தணர்களுக்கு ஆயினும், கடவுள் – இறைவன், மால்வரை – மேகம் சூழ்ந்த மலை, கண் விடுத்தன்ன – கண்ணை விழித்துப் பார்ப்பது போல, அடையா வாயில் – அடையாத அரண்மனை வாயில் கதவு, அவன் – நல்லியக்கோடன், அருங்கடை – அரியது காவலையுடைய அரண்மனை வாயில், குறுகி – அணுகி,
சான்றோர் புகழ்தல்
செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த;    [207-209]
பிறர் தனக்குச் செய்த நன்மையினை உணர்ந்த தன்மையும் கீழோர் சேர்க்கை இன்மையும் இனிய முகத்தோடு இனிய மொழி பேசும் இயல்பும் என்று நல்லியக்கோடனின் மிகுதியான சிறப்புகளை அறிந்த சான்றோர் புகழ்ந்து கூறுவர்.
சொற்பொருள் விளக்கம் : செய்ந்நன்றி – செய்த நன்மை, அறிதல் – உணர்தல், சிற்றினம் – கீழோர் சேர்க்கை, இன்மையும் – இல்லாத தன்மையும், இன்முகம் – இனிய முகம், இனியன் ஆதலும் – இனிய மொழி பேசுவனாக இருத்தல், செறிந்து – மிகுதியாக, விளங்கு – விளங்குகின்ற, சிறப்பின் – சிறப்பினையுடைய, அறிந்தோர் – அறிந்தவர்கள், ஏத்த – புகழ்,
மறவர் போற்றல்
அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும்
ஆண்அணி புகுதலும் அழிபடை தாங்கலும்
வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்த;                       [210-212]
தன்னுடைய ஆற்றல் கண்டு அஞ்சுகின்றவர்களுக்கு அருள் செய்தலும், மிக்க கோபம் இல்லாத தன்மையும், வெற்றி பெறும் முனைப்போடு பகைவர் படைக்குள் புகுதலும், தன் படைத் தளர்வுறும் போது துணையாய் நின்று காத்தலும் ஆகிய நல்லியக்கோடனின் பண்பினை வாளிலும் மேலான எமனைப்போன்ற வீரமறவர் போற்றுவர்.
        சொற்பொருள் விளக்கம் : அஞ்சினர்க்கு – தன்னைக் கண்டு பயப்படுகிறவர்களுக்கு, அளித்தல் – அருள் செய்தல், வெஞ்சினம் – மிக்க கோபம், இன்மையும் – இல்லாத தன்மையும், ஆண்அணி புகுதல் – வெற்றி பெறும் முனைப்போடு பகைவர் படையுள் புகுதல், அழிபடை தாங்கலும் – தன்படைத் தளர்ச்சியுறும்போது துணையாய் நின்று காத்தலும், வாள்மீக் கூற்றத்து – வாளைவிட மேலான எமனைப் போன்ற, வயவர் – வீர மறவர், ஏத்த – போற்ற,


மகளிர் வாழ்த்தல்
கருதியது முடித்தலும் காமுறப் படுதலும்
ஒருவழிப் படாமையும் ஒடியது உணர்தலும்
அரிஏர் உண்கண் அரிவையர் ஏத்த.              [213-215]
நல்லியக்கோடனின், நினைத்ததை முடிக்கும் திறனையும் தாம் விரும்புபவர் தன்னை விரும்புமாறு அவர்கள் நடந்து கொள்வதும் விரும்பிய போதும் அவர்கள் (சொல்) வழி செல்லாமையும், மற்றவர் மனதில் உள்ள கருத்துக்களை உணர்ந்து நடத்தலுமாகிய இனிய பண்புகளைச் செவ்வரி படர்ந்த அழகிய மையுண்ட கண்களையுடைய பெண்கள் வாழ்த்தினர்.
சொற்பொருள் விளக்கம் : கருதியது முடித்தல் – நினைத்ததை முடிக்கும் திறமை, காமுறப்படுதல் – மற்றவர்களால் விரும்பப்படல், ஒருவழிப் படாமை – விரும்புபவரின் விருப்பப்படியே தானும் செல்லாத தன்மை, ஓடியது உணர்தல் – மற்றவர் எண்ணங்களை உணரும் திறன், அரிஏர் – செவ்வரி படர்ந்த அழகிய, உண்கண் – மையுண்ட கண், அரிவையர் – பெண்கள், ஏத்த – வாழ்த்த,
பரிசிலர் ஏத்தல்
அறிவுமடம் படுதலும் அறிவுநன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த.                      [216-218]
தன்னைவிட அறிவு குறைந்தவர்கள் முன்பு, தானும் அவர்களைப் போல் அறிவு குறைவுடையவனாகக் காட்டிக் கொண்டும், அறிவுடையோர் முன்பு தன்னையும் அவர்களைப்போல் அறிவுடையவனாக மெய்ப்பித்தும், தன்னை நாடி வரும் இரவலர்களின் சிறப்பறிந்து அவர்கள் தகுதிக்கு ஏற்ப பரிசில் வழங்கியும், எல்லையில்லாது வாரி வழங்கும் வள்ளல் தன்மை உடையவனாகவும் விளங்குகின்ற நல்லியக்கோடனின் பண்பு நலன்களை அவனிடம் பரிசில் பெற்று வாழும் பாணர் கூத்தர் போன்றோர் ஏத்துவர்.
சொற்பொருள் விளக்கம் : அறிவு மடம் படுதல் – அறியாமையுடையவனாகத் தாழ்த்திக் கொள்ளல், அறிவு நன்கு உடைமை – அறிவுடையவனாதல், வரிசை அறிதல் – பாடும் புலவர் தகுதியறிதல், வரையாது கொடுத்தலும் – எல்லையில்லாது கொடுத்தலும், வரையறை செய்து கொள்ளாது வழங்குதலும், பரிசில் வாழ்க்கை – பரிசு பெற்று வாழும் வாழ்க்கையுடையோர், பரிசிலர் – பரிசில் பெறுவோர், ஏத்த – வாழ்த்த,
நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி
பன்மீன் நடுவண் பால்மதி போல
இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி          [218-220]
விண்மீன்களுக்கு இடையே இருக்கும் முழு மதிபோல, மகிழ்ச்சியோடு அறிஞர், மறவர், பெண்கள், பரிசிலர் ஆகியோர் நடுவே வீற்றிருக்கும் நல்லியக்கோடனை அணுகுவீர். அணுகி.
சொற்பொருள் விளக்கம் : பல்மீன் – பலவாகிய விண்மீன்கள், நடுவண் – நடுவே, பால்மதிபோல – நிறைமதி போல, இன்நகை -  மகிழ்ச்சி, ஆயமொடு – அறிஞர் மறவர், பெண்கள் போன்ற பரிசிலர் கூட்டம், இருந்தோற் – இருக்கின்ற, வீற்றிருக்கும், குறுகி – அணுகி.
நல்லியக்கோடன் முன்னிலையில்
யாழ் வாசிக்கும் முறைமை
பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன
அம்கோடு செறிந்த அவிழ்ந்து வீங்குதிவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின், வாய்அமைத்து
வயிறுசேர்பு ஒழுகிய வகைஅமை அகளத்து
கானக் குமிழின் கனிநிறம் கடுப்ப
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்து
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின்
பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்விக்
கூடுகொள் இன்இயம் குரல்குரல் ஆக
நூல்நெறி மரபின் பண்ணி ஆனது                              [221-230]
பசுமையான கண்களையுடைய குரங்கு, பாம்பைப் பிடித்தது போல யாழின் தண்டோடு கூடிய நரம்புகளும் புடைத்துத் தோன்றும் வார்க்கட்டும் நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும், இறுகவேண்டிய இடத்தில் இறுகியும் அமைந்துள்ளது. வரிசையாக மணியை நிரலாக வைத்தது போல ஆணி வைத்து இணைத்த வாய் விளிம்புகளையும் கொண்டுள்ளது. அவ்யாழினைக் காட்டிலே கிடைக்கின்ற குமிழம் பழத்தின் நிறம் போன்றிருக்கும் கைவேலைப்பாடு அமைந்த தோலாலான உறையில் வைத்திருப்பாய். அதனை உறையிலிருந்து எடுத்து, தேனைப் பொழிந்து அமிழ்தால் நிரப்பி அள்ளித் தெளிப்பது போல, இன்னிசை கூட்டும் யாழின் முறுக்கேறிய நரம்பில், பாடும் வகையும் துறையும் முற்றும் உணர்ந்து, யாழின் நரம்பொலியும் குரலும் ஒன்றிக் கலக்க, இசைநூல் மரபுப்படி குறைவுபடாது இசைத்துப் பாடுவாயாக,
சொற்பொருள் விளக்கம் : பைங்கண் – பசுமையான கண், ஊகம் – குரங்கு, பாம்பு பிடித்தன்ன – பாம்பைப் பிடித்த போல, அம்கோடு – அழகிய தண்டு, செறிந்த – நெருங்கி, சேர்ந்துள்ள, அவிழ்ந்து வீங்கு – நெகிழவும், இறுகவும், திவவின் – வார்க்கட்டின், மணி நிரைத்தன்ன – மணிகளை நிரலாக வைத்ததுபோல, வனப்பின் – அழகின், வாய் அமைத்து – வாய் விளிம்புகள், வயிறு சேர்பு – வயிற்றை இணைத்தாற்போல், ஒழுகிய – வரிசையாக, வகைஅமை – கூறுபாட்டோடு அமைந்த, அகளத்து – குடப்பகுதி, கானக்குமிழின் – காட்டிலே கிடைக்கின்ற குமிழம், கனிநிறம் கடுப்ப – பழத்தின் நிறத்தினைப்போல, புகழ்வினை – கை வேலைப்பாடு, பொலிந்த – விளங்குகின்ற, பச்சையொடு – தோலான உறையொடு, தேம் பெய்து – தேனினைப் பொழிந்து, அமிழ்து பொதிந்து – அமிழ்தால் நிறைத்து, இயற்றும் – சொரியும், அடங்குபுரி நரம்பின் – முறுக்கேறிய நரம்பில், பாடுதுறை முற்றிய – பாடும் வகையும் துறையும் முற்றும், பயன்தெரி கேள்வி – பொருளைத் தெளிவாக உணர்ந்து, கூடுகொள் – உறையுள் இருக்கும், இன்இயம் – வாத்தியம், குரல்குரல் ஆக – யாழின் நரம்பொலியும் குரலும் ஒன்றிக்கலக்க, நூல்நெறி மரபின் – இசைநூல் மரபுப்படி, பண்ணி – இசைத்து, ஆனாது – குறைவு படாது.
மன்னனைப் புகழ்ந்து பாடும் தன்மை
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்
நீ சில மொழியா அளவை............                 [231-235]
பெரியோரைக் கண்டால் கூப்பும் கைகளை உடையவன் என்றும், இளையவர்களைக் காணின் அன்போடு ஆரத் தழுவிக் கொள்ளும் மலர்ந்த மார்பினை உடையவன் என்றும், தேர் ஏறி வரும் பகை அரசரை எதிர்த்துப் போரிடுதற்கு வெம்மையான வேலினை உடையவன் என்றும் நல்லியக்கோடனைப் புகழ்ந்து நீ சிலவற்றைக் கூறுவாயாக கூறிய அளவில்,
சொற்பொருள் விளக்கம் : முதுவோர் – அரசன் ஆசிரியன், தாய், தந்தை, முகிழ்த்த – கூப்பிய, இளையோர்க்கு – தன்னை விட வயதில் குறைந்தவர்கள், மலர்ந்த மார்பு – (அன்போடு ஆரத் தழுவும்) அகன்ற மார்பு, ஏரோர்க்கு – ஏரினை உழும் உழவர், நிழன்ற – நிழல்தரும், அருள் செய்யும், கோலினை – செங்கோலினை, எனவும் – உடையவன் என்றும், தேரோர்க்கு – தேர் ஏறிவரும் பகை அரசர்க்கு, அழன்ற – வெம்மை தரும், வேலினை எனவும் – வேலினை உடையவன் என்றும், நீ சில மொழியா – நீ சிலவற்றைக் கூறுவாயாக, அளவை – (கூறிய) அளவில்.
மன்னன் இரவலரை உபசரிக்கும் பாங்கு
..................மாசில்
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி
காஎரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்                        
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்          [235-241]
குற்றமில்லாத மூங்கிலின் பட்டையை உரித்தது போன்றிருக்கும் ஆடையினை உடுத்திக்கொள்ளவும், அடங்கிக் கிடக்கும் பாம்பு வெகுண்டு எழுவது போன்று அருந்தியவுடன் மயக்கத்தைத் தருகின்ற கள்ளை அருந்தவும் தருவான். அக்கினித் தேவன் பசியினைப் போக்க காண்டவ வனத்தைத் தீக்கிரையாக்கி அவனிடமிருந்து காண்டீபம் என்னும் வில்லையும், அழகிய வார்க்கட்டுடன் அமைந்த அம்புப் புட்டிலையும் பெற்ற, வில்லாற்றலில் சிறந்த புகழ் மிக்கவனாகிய அர்ச்சுனனுக்கு, மூத்தவனான வீமன் எழுதிய பாக சாத்திரம் என்ற மடை நூலில் (சமையல் நூல்) கூறப்பட்ட சமையல் முறைகளிலிருந்து மாறாமல் அமைக்கப்பட்ட பலவகையான உணவுகளை,
சொற்பொருள் விளக்கம் : மாசில் – குற்றமில்லாத, காம்பு – மூங்கில், சொலித்தல் – உரித்தல், அறுவை – ஆடை, உடீஇ – உடுத்திக்கொள்ள, பாம்பு வெகுண்டன்ன – பாம்பு வெகுண்டு எழுந்தாற் போல, தேறல் – கள், நல்கி – கொடுத்து, கா எரியூட்டிய – காட்டினைத் (காண்டவவனம்) தீக்கிரையாக்கிய, கணை – அம்பு, தூணி – அம்புப் புட்டில், பூவிரி கச்சை – அழகிய வார்க்கட்டு, புகழோன் – புகழ்மிக்கவன், தன்முன் – தனக்கு (அர்ச்சுனனுக்கு) மூத்தவன், பனிவரைமார்பன் – பனி படர்ந்த மலை போன்ற மார்பினையுடையவன், பயந்த – அளித்த, நுண்பொருள் – நுணுக்கமான பொருள், பனுவலின் – நூலின், வழாஅ – வழுவாது, மாறுபடாது, பல்வேறு அடிசில் – பலவகையான உணவுகள்.
வாள்நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளூம் தேற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான்நின்று ஊட்டி             [242-245]
ஒளி பொருந்திய வானத்தில், கோள்கள் சூழ இளங்கதிர் வீசும் சூரியனைப் பழித்துக் கூறும் வகையில் ஒளி வீசுகின்ற பொன்னால் செய்த கலத்தில் நீவிர் விரும்புகின்ற உணவினை இட்டு, குறைவிலாத விருப்பத்துடன் தானேமுன் நின்று உணவினைப் பரிமாறி உண்ணச் செய்வான்.
சொற்பொருள் விளக்கம் : வாள்நிற விசும்பு – ஒளிபொருந்திய வானம், கோள்மீன் சூழ்ந்த – கோள்கள் சூழ்ந்த, இளங்கதிர் ஞாயிறு – இளங்கதிரினை வீசும் சூரியன், எள்ளும் தேற்றத்து – உண்மையிலேயே பழித்துக்கூறும் வகையில், விளங்கு பொற்கலத்தில் – விளங்குகின்ற பொன்னால் செய்த கலத்தில், விரும்புவன – விரும்புவனவற்றை, பேணி – உபசரித்து, ஆனா விருப்பின் – குறைவிலாத விருப்பத்தோடு, தான் நின்று ஊட்டி – தானே முன் நின்று உண்ணச் செய்து.
நல்லியக்கோடன் அளிக்கும் பரிசுப் பொருட்கள்
திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புலம் அகற்றி
விறல்வேல் மன்னர் மன்எயில் முருக்கி
நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு            [246-249]
மிக்க வலிமையோடு போரிட்டு, வெற்றி பெற்றுப் பகைவர்களைத் தம் நாட்டை விட்டுப் போகச் செய்தவன். ஆற்றலுடைய வேலேந்திய மன்னரின் நிலைபெற்ற அரண்களை அழித்தவன். தன்னை விரும்பிப் பரிசில் பெற வந்தவர், பாணர் போன்றோரின் வறுமையினைப் போக்கியதோடு, தன்னுடைய படை வீரர்கள் பகையரசர்களிடமிருந்து பெற்று வந்த உயர்ந்த பொருட்களையும் வீரர்களுக்கு அளித்தவன்.
சொற்பொருள் விளக்கம் : திறல்சால் வென்றியோடு – வலிமையால் பெற்ற வெற்றியோடு, தெவ்வுப் புலம் – பகைவர்நாடு, அகற்றி – நீக்கி, விறல்வேல் மன்னர் – ஆற்றலுடைய வேலேந்திய மன்னா, மன் – நிலைபெற்ற, எயில்முருக்கி – அரண்களை அழித்து, நயவர் – தன்னை விரும்பி வந்தவர், பாணர் – பாணர் குலத்தோர், புன்கண் – வறுமை, துன்பம், தீர்த்தபின் – போக்கியதற்குப் பின், வயவர் – படைவீரர், வான்கேழ் – உயர்ந்த சிறப்புப் பொருந்திய, நிதியமொடு – பொன்மணி போன்றவை.
பருவ வானத்துப் பால்கதிர் பரப்பி                                    
உருவ வான்மதி ஊர்கொண் டாங்கு
கூர்உளி பொருத வடுஆழ் நோன்குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின் சேண்ஓங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி அவிழ்ந்த தோற்றம் போல                          
உள்அரக்கு எறிந்த உருக்குறு போர்வை
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
ஊர்ந்து பெயர் பெற்ற எழிநடைப் பாகரொடு              [250-258]
கார் காலத்து (மழைக்காலத்து) வானிலே தோன்றுகின்ற நிலவு, தன் வெண்கதிரினைப் பரப்பி தவழ்ந்து செல்வதுபோல, வட்டவடிவமாய் – கூரிய உளியினால் செதுக்கப்பட்ட சித்திரம் அமைந்த வலிமையான தேரின் நடுவிடத்தில், ஆரைக்கால்கள் சூழ்ந்த இரும்பு விளிம்பினைக் கொண்டதாகச் சக்கரம் விளங்கியது. அரும்புகள் உதிரும் முருக்க மரத்தின் உயர்ந்த கிளைகளிலே விளங்கும் பூங்கொத்துகள் மலர்ந்திருப்பதுபோல, சிவப்பு வண்ணத்தில் தேர்த்தட்டின் மேற்பரப்பும் அமைந்திருந்தது. இவ்வாறு அமையுமாறு தச்சர்களால் கை வண்ணம் சிறக்கச் செய்யப்பட்ட அழகிய நடையினையுடைய தேரினை அதனைச் செலுத்துவதில் புகழ்பெற்ற தேரோட்டியோடும் தருவான்.
சொற்பொருள் விளக்கம் : பருவ வானத்து – கார் காலத்து வானத்தில், பால்கதிர் – வெண்கதிர் பரப்பி பரவச் செய்தல், உருவ வான் மதி – அழகிய வானத்திலே இருக்கின்ற நிலவு, ஊர் கொண்டு ஆங்கு – தவழ்ந்து சென்றவாறு, கூர் உளி – கூர்மையான உளி, பொருத – பொருந்தி, வடு ஆழ் – வடு பதிந்துள்ள, வடு அழுந்தியுள்ள, செதுக்கப்பட்ட சித்திரம் அமைந்த, நோன்குறட்டு – வலிய தேரின் நடுவிடம், ஆரம் சூழ்ந்த – ஆரைக்கால் (தேரின் அச்சைச் சுற்றியுள்ள பகுதி) அயில் வாய் – இரும்பு விளிம்பு, நேமியொடு – தேர்ச்சக்கரத்தோடு, சிதர் – சிதறுதல், வீழ்தல், நனை – அரும்பு, முருக்கின் – முருக்க மரத்தின், சேண் – சேய்மை, ஓங்கு – உயர்ந்து, நெடுஞ்சினை – நீண்ட கிளைகளிலுள்ள அரும்பு, ததர் – கொத்து, பிணி – பின்னல், கட்டு, அவிழ்ந்த – மலர்ந்த, தோற்றம்போல – தோற்றத்தைப் போல, உள் – உள்ளிடம், அரக்கு – சிவப்பு, சாதிலிங்கம், எறிந்த – இட்டமைத்த, உருக்கு – இரும்பாலான, உறு – பொருந்துதல், போர்வை – தேர்த்தட்டின் மேற்பரப்பு, கருந்தொழில் வினைஞர் – தச்சுத்தொழில் செய்பவர், கைவினை – செய்தொழில், முற்றி – நிறைவேற்றி, ஊர்ந்து – தேரினில் ஏறிச் சென்று, பெயர் பெற்று – புகழ் பெற்ற, எழில்நடை – அழகிய நடை, பாகரொடு – தேரினைச் செலுத்துவோர்.
மாசெலவு ஒழிக்கும் மதனுடை நோன்தாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ              
அன்றே விடுக்குமவன் பரிசில்                  [259-261]
வலிமையான காலும், கூர்மையான முகமும் வாய்க்கப்பெற்ற குதிரையைவிட வேகமாக ஓடுகின்ற வெள்ளை எருதையும், பான்னோடு வழங்குவான். அனைத்துப் பரிசுகளையும் அன்றே கொடுத்து வழியனுப்பி வைப்பான்.
சொற்பொருள் விளக்கம் : மா – குதிரை, செலவு – ஓட்டம், ஒழிக்கும் – ஓடும், நோன்தாள் – வலியகால், வாள்முக – கூர்மையான முகம், பாண்டில் – வெள்ளை எருது, வலவனொடு – செலுத்தும் பாகனொடு, தரீஇ – தந்து, அன்றே – அந்நாளே, விடுக்கும் – அனுப்புவான், அவன் பரிசில் – அவன் கொடுக்கும் பரிசுப் பொருட்களையும்.
நல்லியக்கோடனின் புகழும் மாட்சியும்
..........................மென்தோள்
துகில்அணி அல்குல் துளங்குஇயல் மகளிர்
அகில்உண விரித்த அம்மென் கூந்தலின்
மணிமயில் கலாபம் மஞ்சுஇடைப் பரப்பி
துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு
எறிந்து உரும்இறந்து ஏற்றுஅருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான், கொய்தளிர்க் கண்ணி
செல்இசை நிலைஇய பண்பின்,
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே.                 [262-269]
மென்மையான தோளும், ஆடையணிந்த இடையும் அசைந்தாடும் நடையுமுடைய மகளிர், அகில் புகை ஊட்டுவதற்காக விரித்துப் போட்டிருக்கும் கூந்தலைப் போன்று, நீலமணி போன்ற நிறமுடைய மயில் தனது தோகையை விரித்து ஆடுவதற்குக் காரணமான, மழை மேகங்கள், வெண்மேகங்களுக்கிடையே பரவித் தவழ்ந்து செல்லும். இம்மழை மேகங்கள் மூங்கில்கள் விளையும் உயர்ந்த சிகரங்களை முட்டி இடி இடித்து வீழ்ந்து ஏறிச் செல்லுகின்ற பெருமை பொருந்திய மலையுச்சியினையுடைய மலை நாட்டுக்குத் தலைவன். நல்லியக்கோடன் அப்போது பறித்த இளந்தளிரினால் கட்டப்பட்ட மாலையினை அணிந்தவன். புகழ் நிலைத்து நிற்றற்குரிய பண்புகளால் சிறந்தவன். இத்தகைய நல்லியக்கோடனை விரும்பி நீவீர் சென்றால், (அன்றெ பரிசில் கொடுத்து அனுப்பி வைப்பான்) (அடி 261ஐ இயைத்துப் பொருள் கொள்க)
சொற்பொருள் விளக்கம் : மென்தோள் – மென்மையான தோள், துகில் அணி – ஆடை அணிந்த, அல்குல் – இடை, துளங்கு – அசைவு, இயல் – தன்மை, சாயல், மென்மை, மகளிர் – பெண்கள், அகில் உண விரித்த – அகில் புகையூட்ட விரித்த, அம் – அழகு, மென்கூந்தல் – மென்மையான கூந்தல், மணிமயில் – நீலமணி போன்ற நிறமுடைய மயில், கலாபம் – தோகை, மஞ்சு – மேகம், இடைப்பரப்பி – இடையே பரவி, துணி – தெளிந்த, மழை – கருமை மேகம், தவழும் – ஊர்ந்து செல்லும், துயல் – அசைதல், கழை – மூங்கில், நெடுங்கோட்டு – நீண்டு உயர்ந்த மலைச் சிகரம், எறிந்து – முட்டுதல், உரும் – இடி, இறந்த – வீழ்ந்த, ஏற்று – உயர்ந்து ஏறிச் சென்று, அரும் சென்னி – பெருமை பொருந்திய உச்சியினையுடைய, குறிஞ்சி கோமான் – மலை நாட்டுக்குத் தலைவன், கொய்தளிர் – பறித்த முளையிலை, பறித்த இளந்தளிர், கண்ணி – பூமாலை தலை மாலை, செல்இசை – உயர்ந்த புகழ், நிலைஇய பண்பின் – நிலைத்து நிற்றற்குரிய பண்புகள், நல்லியக்கோடனை – நல்லியக்கோடன் என்ற வள்ளலை, நயந்து – விரும்பி, நீர் – நீவீர், நீங்கள், செலினே – சென்றால்.






சிறுபாணாற்றுப்படை
மூலம்
நிலமகளின் தோற்றம்

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
யணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று
கொல்கரை நறும்பொழில் குயில்குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடிபுடை நெறித்து                           5
கதுப்பு விரித்தன்ன காழ்அக நுணங்குஅறல்
பாலைநிலத்தின் வெம்மையும்
இளைப்பாறும் பாணனும்
அயில் உருப்பு அனையஆகி, ஐது நடந்து
வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம்பத வழிநாள்
காலை ஞாயிற்றுக் கதிர்கடா உறுப்ப                            10
பாலை நின்ற பாலை நெடுவழி
சுரன் முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ
பாணனொடு வரும் விறலியின் அழகு
ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண்டு அருளி
நெய்கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்புஎன
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன்                          15
மயில்மயில் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்குநாய் நாவின் நல்எழில் அசைஇ
வயங்குஇழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து
ஈர்ந்துநிலம் தோயும் இரும்பிடித் தடக்கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின்; குறங்குஎன                   20
மால்வரை ஒழுகிய வாழை; வாழைப்
பூஎனப் பொலிந்த ஓதி; ஓதி
நளிச்சினை வேங்கை நாள்மலர் நச்சி
களிச்சுரும் அரற்றும் சுணங்கின், சுணங்கு பிதிர்ந்து
யாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப்                        25
பூண்அகத்து ஒடுங்கிய வெம்முலை; முலைஎன
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன்சேறு இகுதரும் எயிற்றின்; எயிறுஎன
குல்லைஅம் புறவில் குவிமுகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின்; மெல்இயல்                           30
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
விறலியின் காலைத் தடவிவிடும் இளையர்
நடைமெலிந்து அசைஇய நன்மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவரப்
யாழ் வாசிக்கும் பாணனைச்
சந்திக்கின்றான் பரிசில் பெற்ற பாணன்
பொன் வார்த்துஅன்ன புரியடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ                            35
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க
இளைப்பாறும் பாணனை
வழிப்படுத்தும் பாணன்
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ
துனிகூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப
முனிவு இகந்துஇருந்த முதுவாய் இரவல!                       40
சேர நாட்டின் வளமை
கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல்இலை மயிர்ப்புறம் தைவர
விளையா இளங்கள்நாற மெல்குபு பெயரா                       45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்
குடபுலம் காவலர் மருமான் ஒன்னார்
வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த
எழுஉறழ் திணிதோள், இயல்தேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே; அதாஅன்று        50
பாண்டிய நாட்டின் பெருமை
நறவுவாய் உறைக்கும் நாகுமுதிர் நுணவத்து
அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத
கைபுனை செப்பம் கடைந்த மார்பின்
செய்பூங் கண்ணி செவிமுதல் திருத்தி
நோன்பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த                      55
மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்
வாள்வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி
தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர்இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற                  
கிளர்பூண் புதல்வரொடு கிலிகிலி ஆடும்                         60
தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான்
தென்புலம் காவலர் மருமான் ஒன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன்
தமிழ்நிலை பெற்ற தாங்குஅரு மரபின்                          65
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று
சோழநாட்டின் பெருமை
நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் துணை ஆர் கோதை
ஓவத்துஅன்ன உண்துறை மருங்கில்                           
கோவத்து அன்ன கொங்குசேர்பு உறைத்தலின்                   70     
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
ஆசுஇல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை                        75
ஏம இன்துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும்
தண்பணை தழீஇய தளரா இருக்கை
குணபுலம் காவலர் மருமான் ஒன்னார்
ஓங்குஎயிற் கதவம் உருமுச்சுவல் சொறியும்                    80
தூங்குஎயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே; அதாஅன்று
கடையெழு வள்ளல்களின் சிறப்பு
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய                           85

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்                                    90
பறம்பின் கோமான் பாரியும்; கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரியும் நிழல்திகழ்                      95
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும் மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி                                      100
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை                    105
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும்; நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த                           110
ஓரிக்குதிரை ஓரியும் என ஆங்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
நல்லியக்கோடனின் ஈகைச்சிறப்பு
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோன்றாள்                        115
நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறைஆடு மகளிர்க்குத் தோட்புணை ஆகிய
பொருபுனல் தரூஉம், போக்கறு மரபின்
தொல்மா இலங்கைக் கருவொரு பெயரிய
நல்மா இலங்கை மன்ன ருள்ளும்                                      120
மறுஇன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறுபுலித் துப்பின், ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்புஇருந்த கழல்தயங்கு திருந்துஅடி
பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை
பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை                          125
பரிசு பெற்ற பாணன்
மன்னனைப் பாடிச் சென்ற முறை
நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு
தாங்கரு மரபின் தன்னும், தந்தை
வான்பொரு நெடுவரை வளனும் பாடி
முன்நாள் சென்றனம் ஆக
நல்லியக்கோடனைக் காணுமுன்
இருந்த வறுமைநிலை
....................  இந்நாள்                                   
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை                          130
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்                        135
வளைக்கை கிணைமகள் வள்உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன்மிசையும்
அழிபசி வருத்தம் வீட............                                   
நல்லியக்கோடனின்
வறுமை போக்கிய வள்ளன்மை
...................... பொழிகவுள்                                        140
தறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கின்
சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி
யாம் அவண் நின்றும் வருதும்.
பாணனின் ஆற்றுப்படுத்தும் பண்பு
................. நீயிரும்
இவண்நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்
எயிற்பட்டினத்திற்குச் செல்லும் வழியும்
பரதவர் தரும் விருந்தும்
அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடல்உலாய் நிமிர்தர                      150
பாடல் சான்ற நெய்த நெடுவழி
மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவின் பட்டினம் படரின்
ஓங்குநிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரை மரவிறகின்                      155
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்
மதி ஏக்கறூஉம் மாசுஅறு திருமுகத்து
நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்                      160
தளைஅவிழ் தெரியல் தகையோற் பாடி
அறல்குழல் பாணி தூங்கி யவரொடு
வறல்குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர்
வேலூர் செல்லும் வழியும்
எயினர் தரும் விருந்தும்
பைந்நனை அவரை பவழம் கோப்பவும்
கருநனைக் காயா கணமயில் அவிழவும்                        165
கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்
கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்
முல்லை சான்ற முல்லைஅம் புறவின்
விடர்கால் அருவி வியன் மலைமூழ்கிச்                        170
சுடர்கால் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வேல் நுனியின் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூர் எய்தின்
உறுவெயிற்கு உலைஇய உருப்புஅவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு                         175


தேமா மேனி சில்வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்
ஆமூர் வளமும் உழத்தியரின் உபசரிப்பும்
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி
நிலைஅரும் குட்டம் நோக்கி, நெடிது இருந்து                    180
புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்உகிர் கிழித்த வடுஆழ் பாசடை
முள்அரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்
மதிசேர் அரவின் மானத் தோன்றும்                            185
மருதம் சான்ற மருதத் தண்பணை
அந்தண அருகா அருங்கடி வியன்நகர்
அம்தண் கிடங்கின், அவன்ஆமூர் எய்தின்
வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின்
உரன்கெழு நோன்பகட்டு உழவர் தங்கை                        190
பிடிக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
இருங்கா உலக்கை இரும்புமுகம் தேய்த்த
அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்.          195
நல்லியக்கோடனின் ஊர்ச்சிறப்பும்
அதன் அண்மையும்
எறிமறிந் தன்ன நாவின் இலங்குஎயிற்றுக்
கருமறிக் காதின் கவைஅடிப் பேய்மகள்
நிணன்உண்டு சிரித்த தோற்றம் போல
பிணன்உகைத்துச் சிவந்த பேர்உகிர், பணைத்தாள்
அண்ணல் யானை அருவிதுகள் அவிப்ப                        200
நீறுஅடங்கு தெருவின் அவன்சாறு அயர்மூதூர்
சேய்த்தும் அன்று; சிறிது நணியதுவே
நல்லியக்கோடனின் அரண்மனை வாயில்
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்
கடவுள் மால்வரை கண் விடுத்தன்ன
அடையாவாயில் அவன்அருங் கடைகுறுகி                      205
சான்றோர் புகழ்தல்
செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த;
மறவர் போற்றல்
அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும்
ஆண்அணி புகுதலும் அழிபடை தாங்கலும்
வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்த;
மகளிர் வாழ்த்தல்
கருதியது முடித்தலும் காமுறப் படுதலும்
ஒருவழிப் படாமையும் ஒடியது உணர்தலும்
அரிஏர் உண்கண் அரிவையர் ஏத்த.                             215
பரிசிலர் ஏத்தல்
அறிவுமடம் படுதலும் அறிவுநன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த.
நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி
பன்மீன் நடுவண் பால்மதி போல
இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி                        220
நல்லியக்கோடன் முன்னிலையில்
யாழ் வாசிக்கும் முறைமை
பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன
அம்கோடு செறிந்த அவிழ்ந்து வீங்குதிவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின், வாய்அமைத்து
வயிறுசேர்பு ஒழுகிய வகைஅமை அகளத்து
கானக் குமிழின் கனிநிறம் கடுப்ப                               225
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்து
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின்
பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்விக்
கூடுகொள் இன்இயம் குரல்குரல் ஆக
நூல்நெறி மரபின் பண்ணி ஆனது                                      230

மன்னனைப் புகழ்ந்து பாடும் தன்மை
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்.
நீ சில மொழியா அளவை............                                235
மன்னன் இரவலரை உபசரிக்கும் பாங்கு
..................மாசில்
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி
காஎரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்                         240
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்
வாள்நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளூம் தேற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான்நின்று ஊட்டி                            245
நல்லியக்கோடன் அளிக்கும் பரிசுப் பொருட்கள்
திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புலம் அகற்றி
விறல்வேல் மன்னர் மன்எயில் முருக்கி
நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
பருவ வானத்துப் பால்கதிர் பரப்பி                                     250
உருவ வான்மதி ஊர்கொண் டாங்கு
கூர்உளி பொருத வடுஆழ் நோன்குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின் சேண்ஓங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி அவிழ்ந்த தோற்றம் போல                           255
உள்அரக்கு எறிந்த உருக்குறு போர்வை
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
ஊர்ந்து பெயர் பெற்ற எழிநடைப் பாகரொடு
மாசெலவு ஒழிக்கும் மதனுடை நோன்தாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ              
அன்றே விடுக்குமவன் பரிசில் ..........                            260

நல்லியக்கோடனின் புகழும் மாட்சியும்
        ..........................மென்தோள்
துகில்அணி அல்குல் துளங்குஇயல் மகளிர்
அகில்உண விரித்த அம்மென் கூந்தலின்
மணிமயில் கலாபம் மஞ்சுஇடைப் பரப்பி
துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு                  265
எறிந்து உரும்இறந்து ஏற்றுஅருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான், கொய்தளிர்க் கண்ணி
செல்இசை நிலைஇய பண்பின்,
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே.                 269