Search This Blog

Monday, June 13, 2011

பதிற்றுப்பத்தின் தனிச்சிறப்பு


பதிற்றுப்பத்தின் தனிச்சிறப்பு
(இரும்புக் கடலல்ல…இன்சுவைக் கரும்பு)
முகவுரை
எட்டுத்தொகையில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் சிறப்பினைச் செப்புகின்ற நூல். பதிற்றுப்பத்து என்றவுடன் சுவைப்பதற்கு அரிது என்ற வகையில் இரும்புக் கடல் என்பர். ஆனால் நவில்தொறும் நயம் காட்டும் சங்கச் செய்யுளின் தன்மை இதிலும் புதைந்து கிடத்தல் கண்கூடு. அதனினும் மேலாய் இந்நூலுக்கே உரிய தனிச் சிறப்புக்களும் உண்டு. இக்கட்டுரையில் இது குறித்து ஆராய்வோம்.
அமைப்பு
விற்கொடி ஏந்திய வஞ்சி மன்னர்களின் மாண்புகளைச் சொல்லும் வீறுபடை இலக்கியம் பதிற்றுப்பத்து. சோழர்களுக்கோ பாண்டியர்களுக்கோ இல்லாப் பெருஞ்சிறப்பு இப்பதிற்றுப்பத்தால் சேரர்களுக்குக் கிடைத்தது. சேர மன்னர்கள் பத்து பேரைத் தலைவர்களாகக் கொண்டு, ஒவ்வொரு பத்துப் பாடல்களிலும் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பன இடம்பெற்றுள்ளன. அதனோடு ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய பதிகம் ஒன்றும் அமைந்திருத்தல் இந்நூலில் காணப்படும் சிறப்பம்சமாகும். இந்நூலின் நான்காம் பத்து அந்நாதியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பொழுது நூலிலே முதற்பத்தும் இறுதிப்பத்தும் இல்லை. எட்டுப்பத்துக்களே உள்ளதால் எண்பது பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன.
தலைப்பு
        பதிற்றுப்பத்தின் பாடல்களுக்குத் தக்க தலைப்புகள் அமைக்கப்பட்டிருத்தல் அவற்றின் தனிச்சிறப்பு. பாடலின் மையக் கருத்தை உயிர் நாடியை உணர்த்தும் வகையில், பாடலுள் பயின்ற சிறந்த சொல்லே தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பாடலின் தலைப்பைப் பார்த்த உடனேயே பாடலின் திரண்ட கருத்தை அல்லது குறிக்கோளை ஓரளவு ஊகித்துக் கொள்ள முடிகிறது. ஏனைய இலக்கியங்களை முழுதும் படித்தாலன்றி, பார்த்த மாத்திரத்தில் பொருள் உணர்ந்து கொள்ள முடியாது. இந்த முறையிலும் பதிற்றுப்பத்து எளிமையானது.
        தலைப்புகள் வழிகாட்டிகளாக இருப்பதோடன்றி எழில் சான்ற இன்சொற்களாக அமைந்து, பாட்டைப் படிக்கத் தூண்டுனவாகவும் உள்ளன.
        பூத்த நெய்தல், கூந்தல் விறலியர், வெண்மை மகளிர், கமழ்குரற்துழாய், சுடர் வீ வேங்கை, நன்னுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை, சிறு செங்குவளை, அருவி ஆம்பல், செம்புனல், துவராக் கூந்தல் போன்றவை சொல்லழகிற்குச் சான்று பகவர்வன. “பேர் எழில் வாழ்க்கை” எத்தகைய எழில்சால் செஞ்சொல்! நினைந்து மகிழத்தக்க சொல்லினிமையும் பொருள் நலமும் உடைய சொல்!
ஒலிநயம்
        பல பாக்கள் மிகச் சிறு சிறு அடிகளாக வஞ்சி சீர் போல அமைந்து எளிமையோடு கூட ஒலிநயமும் பொருந்தி இன்பம் அளிக்கின்றன.
        களிறு கடைஇய தாள்,
        மா உடற்றிய வடிம்பு
        சமம் ததைந்த வேல்
        கல் அலைத்த தோள்,
        வில் அலைத்த நல்வலத்து
        இதுவா கற்றற்கு அரிது, சுவையற்றது!
        உயிர் போற்றலையெ செருவத்தானே
        கொடை போற்றலையே இரவலர் நடுவண்
        பெரியோர் பேணிச் சிறியோரை அளித்தி
இனிமையும் எளிமையும் கருத்துப் புலப்பாடும் செறிந்து காண்டற்கரிய இவ்வினிய இலக்கியம் சுவை இல்லாதது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளல் இயலுமா?
பொருள் நயம்
        சொல் நயம் மட்டுமன்றி, பொருள் நயம் காணக்கூடிய இடங்களும் ஒன்றல்ல. இரண்டல்ல. மிகப்பல, பேரியாற்றைக் குறிக்கும்போது புலவர் “நின் மலைப் பிறந்து நின் கடல் மண்டும்” என்கிறார். பேரியாறு மிக நீண்டது. அதன் தோற்றமும் முடிவும் கூறியதால் அவன் நாட்டின் விரிந்த பரப்பளவும் பெறப்பட்டது. மலையும் கடலும் நதியும் கூறியவற்றால் அவன் நானிலத்தையும் ஆண்டமை உணர்த்தினார். எல்லா ஆறுகளுமே மலையில் தோன்றி கடலில் கலப்பனதாம். பொன்னியும் வைகையும் சோழ பாண்டிய மன்னர்களுக்கு உரியவை என்றாலும் அவை சென்று சேரும் கடல்கள் அம்மன்னர்கட்கு உரிமையாக்கப்பட்டதில்லை. இங்கே நின் கடல் என்றே கூறும் நயம் உணர்தற்பாற்று. கடலையும் கட்டி ஆண்ட குடியினரல்லவா சேரர்!
        தெய்வங்களுக்கு விருந்தளிக்கும் வேள்வியைப் போன்றே மக்களுக்கு உணவளிக்கும் விருந்தினையும் வேள்வி என்றே குறிப்பிட்டிருக்கின்றனர்.
        விரும்புமெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி
        கடல் ஒலி கொண்டு செழுநகர் வரைப்பின்
        நடுவண் எழுந்த ஆடு நெய் ஆவுதி
தெய்வங்களும் மக்களும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நயம் வியத்தற்குரியது.
உவமை நயம்
        இலக்கிய சுவையைக் கூட்டும் உவமை நயம் பதிற்றுப்பத்தினும் உண்டு.
        ஓவத்தன்ன வினைபுனை நல்இல்
        பாவை அன்ன நல்லோள் கணவன்
        பொன்னின் அன்ன பூவின் சிறியலை
        நிலவின் அன்ன வெள்வேல் பாடினி
இறுதியிலும் கூட, மன்னனை வாழ்த்தும் அழகு, பதிற்றுப்பத்து நூலின் இனிமையை ஒருவாறு நமக்குச் சொல்லும் பெற்றியன.
        நின்தாள் திங்கள் அனைய ஆக! திங்கள்
        யாண்டு ஓரனைய ஆக! யாண்டே
        ஊழி அனைய ஆக! ஊழி
        வெள்ள வரம்பின் ஆக!
இயற்கைப் பின்னணி
        சொல் அழகு மட்டுமல்ல. இயற்கை அழகையும் இனிதாகப் படம்பிடித்துக் காட்டும் இனிய இலக்கியமும் கூட.
        மருது இமிழ்ந்து ஓங்கிய நளியிரும் பரப்பின்
        மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை
நந்து நாரையொடு செவ்வரி உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழல் மருள் பூவின் தாமரை வளைமகள்
குருஅது மலர்ந்த ஆம்பல்
பறவைகள் தங்கி ஒலி எழுப்பும் நீண்டு நெடிது வளர்ந்திருக்கும்
மரங்கள். அங்கே நீர்த்துறையோடு கூடிய மணற்பரப்பு. அதில் விளையாட்டு மகளிரால் சிதைபட்டுக் கிடக்கும் காஞ்சி மரம். கூடவே முள் முருங்கை மரங்களும் உண்டு. அம்முள் முருங்கை மரங்களிலிருந்து உதிர்ந்த சிவந்த பூக்களால் நீர்த்துறையின்  அடைகரை, நெருப்பை ஓத்து விளங்கியது. அக்கரையிலே சங்கும் நாரைகளும் பிறிதொரு வகை செவ்வரி நாரைகளும் திரிந்தன. இதனை அடுத்து இருக்கும் விளைநிலங்களில் நெருப்பை ஒத்த தாமரை மலர்களும் வளையல் அணிந்த மகளிரால் பறிக்கப் பெறாத அல்லிப் பூக்களும் மலர்ந்திருந்தன. எத்தகைய எழில் ஓவியம்! இத்தகைய சொற்சித்திரங்கள் இந்நூலில் மிகப் பல!
        இவை மட்டுமல்ல. இயற்கைப் பின்னணியில் பழந்தமிழரின் இன்ப வாழ்வையும் காணலாம்.
        அவல் எற உலக்கை வாழைச் சேர்த்தி
        வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
        முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த
        தடந்தாள் நாரை இரிய: அயிரைக்
        கொழுமீன் ஆர் கைய மரம்தொறும் குழாஅலின்
        வெண்கை மகளிர் வெண் குருகு ஒப்பும்
வளையல் அணிந்த மகளிர். அவல் இடித்துக் கொண்டிருக்கிறார்கள்! அவல் இடிக்கும் உலக்கையை வாழை மரத்திலே சார்த்தி விட்டு, வள்ளைப் பூவைப் பறிக்கிறார்கள். இவர்களைப் பார்த்தவுடன் வயலிலே பரந்து மேய்ந்து கொண்டிருக்கிற நாரை அஞ்சி நீங்குகின்றது. எனினும் அவை வயலிலுள்ள அயிரை மீனைப் பிடிப்பதற்காக மரங்கள்தோறும் தங்கியிருக்கின்றது. அப்பறவைகளை வளையல் அணியாத சிறு பெண்கள் ஓட்டுவர்.
        தமிழ் நிலத்து மக்களின் இயல்பான வாழ்வை எளிய தமிழ்ச் சொற்களில் தந்த இதுவா இரும்புக்கடல்? தீம்சுவை அவலும் தேம்படு கதலியுமல்லவா?
நடைச் சிறப்பு
        சொல்லுகின்ற பொருளுக்கு ஏற்ப நடையும் மாறும் என்பர். இனிய எளிய செய்திக்கு ஏற்ப மென்னடை பயில்வது இயல்பு. கொடுமையைச் சித்தரிக்கும் போதும் ஒரு பாட்டு இனிதாக இருக்குமானால் அதன் சிறப்பிற்கு அதைவிடச் சிறந்த உரைகல் எது?
        தொல்பசி உழந்த பழங்கண் வீழ
        எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
        பைஊண் பெய்த வெண்ணெல் வெண்சோறு
        நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
        நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன.
        நிலம்தின் சிதாஅர் களைந்த பின்றை
        நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ
        …………………………………
        வசையில் மகளிர் வயங்கிழை அணிய
        …………………………………….
        நுகர்தற்கு இனிது.
வறுமை நிலை எவ்வளவு தெளிவாகச் சுட்டப்படுகிறது.
        அடுத்து அதனைப் போக்கும் அருஞ்செயலும் சிறப்பாகக் கூறப்படுகிறது. இரண்டையும் ஒருசேரக் காணும் போது புலவரின் சொல்லாற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வறுமையின் கொடுமையையும் வள்ளன்மையின் பெருமையினையும் இதனினும் தெளிவாகவும் எளிமையாகவும் இனிதாகவும் எப்படிக் கூற முடியும்?
இதனினும் எளிய நடையில் அமைந்த பாக்களும் இதில் உள.
அட்டு ஆனானே. குட்டுவன் அடுதொறும்
பெற்று ஆனாரே. பரிசிலர் களிறே
வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்
சொரி கரை கவரும் செய் வழிபு உராலின்
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல்,
நல் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.
உரைநடை போலத் தான் இருக்கிறது. அமைப்பிலோ, நடையிலோ, சொல்லிலோ, பொருளிலோ, எதிலேனும் வன்மை புலப்படுகிறதா?
        பதிற்றுப்பத்தின் முதல் ஈறாக எண்பது பாடல்களிலும் எளிமை மேம்பட்டு, இனிமை விரவி இருக்கக் காணலாம். தோண்டச் சுரக்கும் மணற்கேணியேயன்றி. இரும்புக் கடலன்று பதிற்றுப்பத்து. கரும்பின் புறமும்கூடக் கடுமையானதுதான். வலிந்து சுவைத்தால்தான் இன்பம் பயக்கும். அத்தகையதுதான் பதிற்றுப்பத்தும் எனலாம்

Sunday, May 15, 2011

குறிஞ்சிப்பாட்டு மூலமும் எளிய உரையும்(208-261 வரிகள்)


ஆணை தந்து ஆற்றுவித்தான் தலைவன்
--------------  ---------------     பிறங்குமலை
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி,
அம்தீம் தெள்நீர் குடித்தலின் நெஞ்சமர்ந்து
அருவிடர் அமைந்த களிறுதரு புணர்ச்சி
வான்உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூமலி சோலை அப்பகல் கழிப்பி,    (208-214)      
(-ள்பெரிய மலையில் மிகவுயர்ந்த இடத்தே உறைந்துள்ள (முருகனை) கடவுளை வாயால் வாழ்த்தி கை தொழுது, தலைவியின் இன்பத்தைப் பெறுவதற்கான சூளுரையை உண்மையாகவே தெரிவித்து அழகிய அருவி நீரைக் குடித்தான். இதனால் தலைவியின் நெஞ்சம் தலைவனோடு பொருந்தியது. தலைவனுக்கும் தலைவிக்கும் அரிய காட்டிடையே களிற்றால்  நடந்த கூட்டத்தினால், வானத்தினைத் தமக்கே இருப்பிடமாகக் கொண்ட தேவர்களும் மிக்கு விரும்புகின்ற பூக்கள் நிறைந்த சோலையில், அன்றைய பகல் பொழுது முழுவதும் கழித்தோம்.
சொற்பொருள் விளக்கம்: பிறங்குமலைபெரிய மலையின், மீமிசைமிக உயர்ந்த இடத்தே, கடவுள் இறையாகிய முருகனை, வாழ்த்திவாயால் வாழ்த்தி, கைதொழுதுகையால் தொழுது, ஏம் உறு வஞ்சினம் – (தலைவி) இன்பத்தைப் பெறுவதற்கான சூளுரையை, வாய்மையின் உண்மையாகவே, தேற்றி - தெரிவித்து, அம் தீம்அழகிய இனிய, தெள்நீர் தெளிந்த நீர், குடித்தலின் அவன் குடித்தமையால், நெஞ்சு அமர்ந்து – (தலைவியின்) நெஞ்சம் (அவனிடம்) பொருந்தியது, அருவிடர் அமைந்த அரிய காட்டிடையே அமைந்த, களிறு தரு புணர்ச்சி களிற்றால் நடந்த கூட்டத்தினால், (தலைவனும் தலைவியும் சேர்ந்த சூழல்), வான் உரி உறையுள் வானத்தினை தமக்குரிய இருப்பிடமாகக் கொண்ட, வயங்கியோர் தேவர்களும், அவாவும் மிக்கு விரும்பும், மிக்க ஆசை கொள்ளும், பூமலி  சோலை பூக்கள் நிறைந்த சோலையில், அப்பகல் அன்றைய பகல் பொழுது, கழிப்பி கழித்தோம்,
  
 வந்தது மாலைக் காலம்!

எல்லை செல்ல ஏழ்ஊர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கல்சேர்பு மறைய,
மான்கணம் மரமுதல் தெவிட்ட, ஆன்கணம்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதர,
ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்குஇரும் பெண்ணை அகமடல் அகவப்,
பாம்புமணி உமிழப், பல்வயின் கோவலர்
ஆம்பல்அம் தீம்குழல் தெள்விளி பயிற்ற,
ஆம்பல் ஆய்இதழ் கூம்புவிட, வளமனைப்
பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயரக், கானவர்
விண்தோய் பணவைமிசை ஞெகிழி பொத்த,
வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்புக் கானம்
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,
சினைஇய வேந்தன் செல்சமம் கடுப்பத்
 துனைஇய மாலை துன்னுதல் காணூஉ    (215-230)

(-ள்) பகல்பொழுது முடியுமாறு, ஏழு குதிரைகள் பூட்டிய தேரினைச் செலுத்தி, பல கதிர்களையுடைய ஞாயிறு மலையைச் சேர்ந்து மறைந்தது. மான் கூட்டம் மரத்தினடியில் வந்து நின்றன. பசுவின் கூட்டம் தன் கன்றுகளை அழைக்கும் குரலை எழுப்பி, தொழுவிடம் நிறையுமாறு புகுந்தன. ஊதுகின்ற கொம்பு போன்று ஓசை எழுப்பும் வளைந்த வாயினையுடைய அன்றில் உயர்ந்த கரிய பனைமரத்தின் உள்மடலிலிருந்து தன் பெடையை அழைத்தது ; பாம்பு மாணிக்க மணியினை உமிழ்ந்தது. பல இடங்களிலும் இடையர்கள் ஆம்பல் பண்ணின் தெளிந்த இசையினைப் பழக்கிக் கொண்டிருந்தனர். ஆம்பல் மலரின் அழகிய அரும்புகளின் இதழ் விரிந்தது. வளமான இல்லங்களில் பூ வேலைப்பாடமைந்த வளையல் அணிந்த பெண்கள், விளக்கின் திரியில் ஒளியினை ஏற்றினர். அந்தணர்கள் தம் அந்திநேரத்துக் கடமைகளைச் செய்தனர். வேட்டுவர் வானத்தைத் தீ்ண்டுகின்ற பரணிடத்தே தீப்பந்தத்தில் நெருப்பூட்டினர். பெரிய மலையினை முகில் சூழ்ந்து கருமை நிறமானது. காட்டில் பறவையினங்கள் எழுப்புகின்ற ஒலி, எதிரொலியாக ஒலித்தது. சினம் கொண்ட வேந்தன், போருக்கு விரைந்து செல்லுவதைப் போல விரைந்து வருகின்ற மாலைப்பொழுது நெருங்கி வந்தது.அது கண்டு.,

சொற்பொருள் விளக்கம்: எல்லை செல்லபகல் பொழுதின் ஒளி முடிய, ஏழ் ஊர்பு இறைஞ்சிஏழு குதிரைகளைப் பூட்டிய தேரினை செலுத்தி, பல் கதிர் மண்டிலம்பல கதிர்களையுடைய ஞாயிறு, கல் சேர்பு மறையமலையைச் சேர்ந்து மறைய, மான்கணம்மான் கூட்டம், மரம் முதல்மரத்தடியில்வந்து, தெவிட்டகூடி நிற்க, ஆன்கணம்பசுவின் கூட்டம், கன்றுதன் கன்றுகளை, பயிர்அழைக்கும், குரலகுரலை எழுப்ப, மன்று நிறை புகுதரபசுவின் தொழுவிடம் நிறையுமாறு புகுந்தனவாய், ஏங்குஒலிக்கும், ஒங்கு வயிர் இசையஊதுகின்ற கொம்பு போன்று ஓசை எழுப்பும் (வயிர்ஒருவகை துளைக்கருவி), கொடுவாய் அன்றில்வளைந்த வாயினையுடைய அன்றில், ஓங்கு இரும் பெண்ணை உயர்ந்த கரிய பனை மரத்தில், அக மடல் அகவஉள்மடலிலே இருந்து தம் பெடையை அழைக்க, பாம்பு மணி உமிழபாம்பு மாணிக்க மணியை உமிழ (கக்க), பல்வயின்பல இடங்கள்தோறும், கோவலர்இடையர்கள், ஆம்பல் தீங்குழல்ஆம்பல் பண்ணினை இனிய குழலில், தெள் விளி பயிற்ற தெளிந்த இசையை பழக்கிக் கொண்டிருக்க, ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விடஆம்பல் மலரின் அழகிய அரும்புகளின் இதழ்விரிய, வளமனைவளமான இல்லங்களில், பூந்தொடி மகளிர்பூ வேலைப்பாடமைந்த வளையணிந்த பெண்கள், சுடர்தலைக் கொளுவி விளக்கின் திரியில் ஒளியினைக் கொளுத்தி (விளக்கேற்றல்), அந்தி அந்தணர் அயர அந்தி நேரத்துக் கடனை அந்தணர் செய்ய, கானவர்வேட்டுவர், விண்தோய் பணவை மிசை வானத்தைத் தீண்டுகின்ற தம் பரணிடத்தே, ஞெகிழி பொத்ததீக்கடைக்கோலில் (தீப்பந்தம்) நெருப்பூட்ட, வானம்முகில், மாமலை வாய்பெரிய மலையினை, சூழ்பு கறுப்பசூழ்ந்து கருமைநிறமாக, கானம்காடு, கல்லென்று இரட்டகல்லென்று மாறி மாறி (எதிரொலி) எழுப்ப, புள்ளினம் ஒலிப்பபறவை இனங்கள் குரல் கொடுக்க, சினை இய வேந்தன் சினம் கொண்ட வேந்தன், செல்சமம் கடுப்ப – (படை கொண்டு விரைந்து) போருக்குச் செல்லுதல் போன்று, துனைஇய மாலை விரைந்து வருகின்ற மாலைப்பொழுது, துன்னுதல் நெருங்குதல், காணூஉகண்டு,
    
           மன்றலில் மணப்பேன் என்று கூறிப் பிரிதல்
          நேர்இறை முன்கை பற்றி நுமர்தர
                       நாடுஅறி நன்மணம் அயர்கம், சில்நாள்
          கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீர்! என
          ஈர நல்மொழி தீரக் கூறி
                      துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்து
          துஞ்சா முழவின் மூதூர் வாயில்
                       உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன் (231-237)

(இள்)ஒளி வீசும் அணிகலன்களை உடையீர்!திருத்தமான விரல்களையுடைய முன்கையினைப் பற்றி, உன் சுற்றத்தார் என்னிடம் தர நாட்டிலுள்ளோர் அறியுமாறு நன்மை தருகின்ற மணத்தினைச் சில நாட்களிலே நான் நிகழ்த்துவேன். அதுவரை கலங்குதலைத் தவிர்ப்பீர்என்று எம் வருத்தம் தீரும் வகையில் நன்மொழி கூறினான். துணையைப் புணர்ந்த காளை போன்று எம்மொடு  வந்தான். முழவின் ஓசை அயராது கேட்டுக் கொண்டிருக்கும் நம் பழைமையான ஊரின் நீர்த்துறையில் எம்மை நிறுத்தி விட்டுச் சென்றான்
சொற்பொருள் விளக்கம்: நேர்இறை முன்கை பற்றி நேர் திருத்தம், இறைவிரல், முன்கை பற்றிமுன்கையினைப் பற்றி, நுமர்தரநும் சுற்றத்தார் எமக்குத் தர, நாடறி நாட்டினர் அறியுமாறு, நன்மணம் நன்மை தருகிற மனத்தினை, அயர்கம்நிகழ்த்துவேன், சில் நாள்சில நாட்களிலே, கலங்கல் கலங்குதலை, ஓம்புமின் தவிர்ப்பீர், இலங்கு இழையீர்ஒளிவீசும் அணிகலன்களையுடையார், எனஎன்று,  நன்மொழி – (எம் வருத்தம் தீரும்) நல்ல மொழியினை, தீரக் கூறிஎம் வருத்தம் தீருவதற்காகக் கூறி, துணை புணர் ஏற்றின் துணையைப் புணர்ந்த காளை போன்று, எம்மொடு வந்துஎம்மோடு கூட வந்து, துஞ்சா முழவின் மூதூர் முழவின் ஓசை குறையாத பழைமையான நம் ஊரின், வாயில்வாயில், உண்துறை பருகும் நீர் அமைந்த நீர்த்துறையின், நிறுத்துஎம்மை நிறுத்தி, பெயர்ந்தனன் போனான்.

                   தொடர்ந்தது தோன்றலின் உறவு!
                
                ----------------  --------------  அதற்கொண்டு
அன்றை அன்ன விருப்பொடு என்றும்
இரவரல் மாலையனே வருதொறும்
காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும்
நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும்
வேய்புரை மென்தோள் இன்துயில்
பெறாஅன் பெயரினும்  முனியல் உறாஅன்
இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின்
 தன்நிலை தீர்ந்தன்றும் இலனே ----------(237-245)

(-ள்)அந்த நாள் முதற்கொண்டு, முதல்நாள் தலைவியிடம் கொண்ட விருப்பத்தைப் போலவே விருப்பமுடையவன், ஆதலால், தொடர்ந்து எந்நாளும் இரவிலே வந்து தலைவியைப் பார்த்துச் செல்கின்றான். அவன் வரும்போது காவலர் விரைந்தாலும், சினத்தோடு நாய் குரைத்தாலும், நீ உறக்கத்திலிருந்து எழுந்தாலும், நிலவின் வெளிச்சம் மிகுந்திருந்தாலும், மூங்கிலைப் போன்ற மென்மையான தோளுடைய தலைவியின் மென்தோளில் இனிய துயிலைப் பெறாது போனாலும்  வெறுத்து வருத்தமுறான். அவன் இளமைப் பருவத்தைக் கடந்தவனும் அல்லன். செல்வத்தின் செருக்கால் தன் குடிக்குரிய நல் இயல்புகளிலிருந்து நீங்கியதும் இலன்.

சொற்பொருள் விளக்கம்:
அதற்கொண்டுஅந்த நாள் முதற்கொண்டு, அன்றை அன்ன முதல்நாள் தலைவியிடம் கொண்ட விருப்பத்தைப் போலவே, என்றும் எந்நாளும், இரவரல் மாலையனே இரவில் வருகின்ற இயல்புடையவன், வருதொறும்வரும்போதெல்லாம், காவலர் கடுகினும் காவலர் விரைந்தாலும், கதநாய் குரைப்பினும்சினத்தோடு நாய் குரைத்தாலும்நீ துயில் எழினும் நீ உறக்கத்திலிருந்து எழுந்தாலும், நிலவு வெளிப்படினும்நிலவின் வெளிச்சம் மிகுந்திருப்பினும், வேய்புரை மென்தோள்மூங்கில் போன்ற மென்மையான தோள், இன்துயில் என்றும் பெறாஅன் இனிய துயிலை என்றும் பெறாது, பெயரினும் போனாலும், முனியல் உறாஅன்வெறுத்து வருந்தான், இளமையின் இகந்தன்றும் இலனே இளமைப் பருவத்தும் கடந்தவனும் அல்லன், வளமையில்செல்வத்தின் செருக்கால், தன் நிலை – (உயர்குடி பிறந்ததால் அவனுக்குரியதாகிய) இயல்புகளிலிருந்து, தீர்ந்தன்றும் இலன் நீங்கியதும் இல்லாதவன்.

                      தலைவியின் துயரம்

               ---------- ----------    ---------------   கொன்ஊர்
மாய வரவின் இயல்புநினைஇத் தேற்றி
 நீர்எறி மலரின் சாஅய்இதழ் சோரா
 ஈரிய கலுழுமிவள் பெரு மதர் மழைக்கண்
ஆகத்து அரிப்பனி உறைப்ப நாளும்
 வலைப்படு மஞ்ஞையின் நலம்செலச் சாஅய்
நினைத்தொறும் கலுழுமால் இவளே ---------- (245-251)       

(-ள்) அலர் போன்றவற்றால் அச்சம் தரக்கூடிய இவ்வூரில், இரவில் பிறரறியாது தலைவியைக் கூடுதற்குத் தலைவன் வரும் இயல்பினை(ஒழுக்கமன்று என) நினைத்துத் தெளிந்தாள். பின்னும் அவன் வரவில்லையானால், வேகமாக  நீர்த்துளி விழுகின்றபோது சோர்கின்ற மலரைப் போல இவளும் இமை சோர்ந்து ஈரமுடைய கண்களோடு அழுகின்றாள். இவளின் பெரிய செழித்த குளிர்ச்சியான கண்களிலிருந்து இடைவிடாது விழுகின்ற கண்ணீர்த் துளிகள் மார்பினிடத்து ஒழுகுகின்றது. ஒவ்வொரு நாளும் வலையில் அகப்பட்ட மயில் போல் தன்னுடைய நல்லழகு அழியுமாறு நினைக்குந்தொறும் அழுகின்றாள் இவள்.

 சொற்பொருள் விளக்கம்:
        கொன்ஊர் மாய வரவின் அலர் போன்றவற்றால் அச்சம் தரும் ஊரில் இரவின்கண் தலைவியைக் கூடுதற்கு வருகின்றமை, இயல்பு நினைகித் தேற்றி தன்மையை (ஒழுக்கமென்பது)போற்றி நினைத்து (இல்லறம் நடத்துவே நல்லொழுக்கம்) தெளிந்து, துணிந்து, தலைவன் வாய்மையால், நீர் எறி மலரின் மழை எறிந்து வீழ்கின்ற மலர் போல, சாஅய் அழகிழந்து, இதழ் சோரா இமை சோர்ந்து, ஈரிய ஈரமுடையாய், கலுழும் அழும், இவள் தலைவி, பெருமதர் மழைக்கண் பெரிய செழித்த குளிர்ச்சியான கண், ஆகத்து மார்பினிடத்து, அரிப்பனி உறைப்ப இடைவிட்டு விழுகின்ற கண்ணீர், துளி சிந்த, ஒழுக, நாளும் ஒவ்வொரு நாளும், வலைபடு மஞ்ஞையின் வலையில் அகப்பட்ட மயில்போல், நலம் செலச் தன்னலம் போகும்படி, சாஅய் நினைத்தலும் நுணுகி நினைக்குந்தொறும், கலுழுமால் இவளே அழுகின்றாள் இவளே.

அவன் வரும் வழி இடர்கள் வாட்டியது இவளை!
               
------------   ------------------  -----------------  கங்குல்
அளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும்
புழற்கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
 உருமும்,சூரும், இரைதேர் அரவமும்,
ஒடுங்குஇருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும்
கொடுந்தாள் முதலையும் இடங்கரும், கராமும்
நூழிலும், இழுக்கும், ஊழ்அடி முட்டமும்
பழுவும் பாந்தளும் உளப்படப் பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர்
 குழுமலை விடரகம் உடையவால் எனவே.251-261)

(-ள்)இரவில் குகையில் மறைந்து வாழும் புலியும் ஆளியும் கரடிகளும் உள்ளே துளையுள்ள கொம்புகளையுடைய காட்டு மான்களில் ஆண் மானும் களிறும் வலிமையால் கொல்லும் கொடுமையான கடுஞ்சினத்தோடு கூடிய வருத்தும் தெய்வங்களும் இரவில் இரையைத் தேடுகின்ற பாம்புகளும் தங்கிய கருமையான நீர்நிலையில் வாழும் வளைந்த கால்களையுடைய முதலையும் இடங்கர்களும்  கராங்களும் வழிப்பறி செய்வோர் கொன்று குவிக்கின்ற இடங்களும் வழுக்கலான இடங்களும் வருகின்ற பாதையின் முடிவானது செல்லுதற்கு வேறு வழியின்றி முட்டுகின்ற பாதைகளும் பேய்களும் மலைப்பாம்பும் உள்ளிட்ட பிற விலங்குகளும் அகப்பட்டாரைத் தப்பவிடாமல் துன்புறுத்தும் பிறவும் தலைவன் வரும் வழியில் உள்ள கூட்டமான மலைகளின் உட்பகுதியில் இருக்கின்றன என்பதால் இவள்(தலைவி) அழுகின்றாள்.

சொற்பொருள் விளக்கம்:

கங்குல் – இரவில், அளை – குகை, செறி – மறைந்திருக்கும், உழுவையும் – புலியும், ஆளியும் – (ஒரு வகை விலங்கு), உளியமும் – கரடிகளும், புழற் கோட்டு – உள்ளே துளையுள்ள கொம்பு , ஆமான் – காட்டு மான், புகல்வியும் – ஏறு, ஆண்மானும், களிறும் – ஆண் யானையும், வலியின் தப்பும் – வலிமையால் கொல்லும், வன்கண் வெஞ்சினத்து உருமும் சூரும்– கொடுமையான கடும் சினத்தோடு கூடிய வருத்தும் தெய்வங்களும், இரைதேர் அரவமும்- இரவில் இரையைத் தேடுகின்ற பாம்பும்,  ஒடுங்கு – தங்கிய, இரும் – கருமையான, குட்டத்து – நீர் நிலையில், கொடுந்தாள் – வளைந்த கால், முதலையும் இடங்கரும் கராமும் – முதலையும், இடங்கர்களும், கராங்களும், நூழிலும் – (வழிப்பறி செய்வோன்) குவிக்கின்ற இடங்களும்,  இழுக்கும் – வழுக்குகின்ற இடங்களும், ஊழ்அடி முட்டமும் – முடிவு முட்டும் வழிகளும், பழுவும் – பேய்களும், பாந்தளும் – மலைப்பாம்பும், உளப்படப் பிறவும் – இவை உள்ளிட்ட பிற விலங்குகளும், வழுவின் வழாஅ விழுமம் – அகப்பட்டாரைத் தப்பவிடாமல் துன்புறுத்தும் (பிறவற்றையும்), அவர் – தலைவன், குழு மலை – கூட்டமான மலைகளிடத்தே, விடரகம் – மலையின் உட்பகுதிகள், உடையவால் – உடையனவாய் இருக்கும்