பதிற்றுப்பத்தின் தனிச்சிறப்பு
(இரும்புக் கடலல்ல…இன்சுவைக் கரும்பு)
முகவுரை
எட்டுத்தொகையில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் சிறப்பினைச் செப்புகின்ற நூல். பதிற்றுப்பத்து என்றவுடன் சுவைப்பதற்கு அரிது என்ற வகையில் இரும்புக் கடல் என்பர். ஆனால் நவில்தொறும் நயம் காட்டும் சங்கச் செய்யுளின் தன்மை இதிலும் புதைந்து கிடத்தல் கண்கூடு. அதனினும் மேலாய் இந்நூலுக்கே உரிய தனிச் சிறப்புக்களும் உண்டு. இக்கட்டுரையில் இது குறித்து ஆராய்வோம்.
அமைப்பு
விற்கொடி ஏந்திய வஞ்சி மன்னர்களின் மாண்புகளைச் சொல்லும் வீறுபடை இலக்கியம் பதிற்றுப்பத்து. சோழர்களுக்கோ பாண்டியர்களுக்கோ இல்லாப் பெருஞ்சிறப்பு இப்பதிற்றுப்பத்தால் சேரர்களுக்குக் கிடைத்தது. சேர மன்னர்கள் பத்து பேரைத் தலைவர்களாகக் கொண்டு, ஒவ்வொரு பத்துப் பாடல்களிலும் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பன இடம்பெற்றுள்ளன. அதனோடு ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய பதிகம் ஒன்றும் அமைந்திருத்தல் இந்நூலில் காணப்படும் சிறப்பம்சமாகும். இந்நூலின் நான்காம் பத்து அந்நாதியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பொழுது நூலிலே முதற்பத்தும் இறுதிப்பத்தும் இல்லை. எட்டுப்பத்துக்களே உள்ளதால் எண்பது பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன.
தலைப்பு
பதிற்றுப்பத்தின் பாடல்களுக்குத் தக்க தலைப்புகள் அமைக்கப்பட்டிருத்தல் அவற்றின் தனிச்சிறப்பு. பாடலின் மையக் கருத்தை உயிர் நாடியை உணர்த்தும் வகையில், பாடலுள் பயின்ற சிறந்த சொல்லே தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பாடலின் தலைப்பைப் பார்த்த உடனேயே பாடலின் திரண்ட கருத்தை அல்லது குறிக்கோளை ஓரளவு ஊகித்துக் கொள்ள முடிகிறது. ஏனைய இலக்கியங்களை முழுதும் படித்தாலன்றி, பார்த்த மாத்திரத்தில் பொருள் உணர்ந்து கொள்ள முடியாது. இந்த முறையிலும் பதிற்றுப்பத்து எளிமையானது.
தலைப்புகள் வழிகாட்டிகளாக இருப்பதோடன்றி எழில் சான்ற இன்சொற்களாக அமைந்து, பாட்டைப் படிக்கத் தூண்டுனவாகவும் உள்ளன.
பூத்த நெய்தல், கூந்தல் விறலியர், வெண்மை மகளிர், கமழ்குரற்துழாய், சுடர் வீ வேங்கை, நன்னுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை, சிறு செங்குவளை, அருவி ஆம்பல், செம்புனல், துவராக் கூந்தல் போன்றவை சொல்லழகிற்குச் சான்று பகவர்வன. “பேர் எழில் வாழ்க்கை” எத்தகைய எழில்சால் செஞ்சொல்! நினைந்து மகிழத்தக்க சொல்லினிமையும் பொருள் நலமும் உடைய சொல்!
ஒலிநயம்
பல பாக்கள் மிகச் சிறு சிறு அடிகளாக வஞ்சி சீர் போல அமைந்து எளிமையோடு கூட ஒலிநயமும் பொருந்தி இன்பம் அளிக்கின்றன.
களிறு கடைஇய தாள்,
மா உடற்றிய வடிம்பு
சமம் ததைந்த வேல்
கல் அலைத்த தோள்,
வில் அலைத்த நல்வலத்து
இதுவா கற்றற்கு அரிது, சுவையற்றது!
உயிர் போற்றலையெ செருவத்தானே
கொடை போற்றலையே இரவலர் நடுவண்
பெரியோர் பேணிச் சிறியோரை அளித்தி
இனிமையும் எளிமையும் கருத்துப் புலப்பாடும் செறிந்து காண்டற்கரிய இவ்வினிய இலக்கியம் சுவை இல்லாதது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளல் இயலுமா?
பொருள் நயம்
சொல் நயம் மட்டுமன்றி, பொருள் நயம் காணக்கூடிய இடங்களும் ஒன்றல்ல. இரண்டல்ல. மிகப்பல, பேரியாற்றைக் குறிக்கும்போது புலவர் “நின் மலைப் பிறந்து நின் கடல் மண்டும்” என்கிறார். பேரியாறு மிக நீண்டது. அதன் தோற்றமும் முடிவும் கூறியதால் அவன் நாட்டின் விரிந்த பரப்பளவும் பெறப்பட்டது. மலையும் கடலும் நதியும் கூறியவற்றால் அவன் நானிலத்தையும் ஆண்டமை உணர்த்தினார். எல்லா ஆறுகளுமே மலையில் தோன்றி கடலில் கலப்பனதாம். பொன்னியும் வைகையும் சோழ பாண்டிய மன்னர்களுக்கு உரியவை என்றாலும் அவை சென்று சேரும் கடல்கள் அம்மன்னர்கட்கு உரிமையாக்கப்பட்டதில்லை. இங்கே நின் கடல் என்றே கூறும் நயம் உணர்தற்பாற்று. கடலையும் கட்டி ஆண்ட குடியினரல்லவா சேரர்!
தெய்வங்களுக்கு விருந்தளிக்கும் வேள்வியைப் போன்றே மக்களுக்கு உணவளிக்கும் விருந்தினையும் வேள்வி என்றே குறிப்பிட்டிருக்கின்றனர்.
விரும்புமெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி
கடல் ஒலி கொண்டு செழுநகர் வரைப்பின்
நடுவண் எழுந்த ஆடு நெய் ஆவுதி
தெய்வங்களும் மக்களும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நயம் வியத்தற்குரியது.
உவமை நயம்
இலக்கிய சுவையைக் கூட்டும் உவமை நயம் பதிற்றுப்பத்தினும் உண்டு.
ஓவத்தன்ன வினைபுனை நல்இல்
பாவை அன்ன நல்லோள் கணவன்
பொன்னின் அன்ன பூவின் சிறியலை
நிலவின் அன்ன வெள்வேல் பாடினி
இறுதியிலும் கூட, மன்னனை வாழ்த்தும் அழகு, பதிற்றுப்பத்து நூலின் இனிமையை ஒருவாறு நமக்குச் சொல்லும் பெற்றியன.
நின்தாள் திங்கள் அனைய ஆக! திங்கள்
யாண்டு ஓரனைய ஆக! யாண்டே
ஊழி அனைய ஆக! ஊழி
வெள்ள வரம்பின் ஆக!
இயற்கைப் பின்னணி
சொல் அழகு மட்டுமல்ல. இயற்கை அழகையும் இனிதாகப் படம்பிடித்துக் காட்டும் இனிய இலக்கியமும் கூட.
மருது இமிழ்ந்து ஓங்கிய நளியிரும் பரப்பின்
மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை
நந்து நாரையொடு செவ்வரி உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழல் மருள் பூவின் தாமரை வளைமகள்
குருஅது மலர்ந்த ஆம்பல்
பறவைகள் தங்கி ஒலி எழுப்பும் நீண்டு நெடிது வளர்ந்திருக்கும்
மரங்கள். அங்கே நீர்த்துறையோடு கூடிய மணற்பரப்பு. அதில் விளையாட்டு மகளிரால் சிதைபட்டுக் கிடக்கும் காஞ்சி மரம். கூடவே முள் முருங்கை மரங்களும் உண்டு. அம்முள் முருங்கை மரங்களிலிருந்து உதிர்ந்த சிவந்த பூக்களால் நீர்த்துறையின் அடைகரை, நெருப்பை ஓத்து விளங்கியது. அக்கரையிலே சங்கும் நாரைகளும் பிறிதொரு வகை செவ்வரி நாரைகளும் திரிந்தன. இதனை அடுத்து இருக்கும் விளைநிலங்களில் நெருப்பை ஒத்த தாமரை மலர்களும் வளையல் அணிந்த மகளிரால் பறிக்கப் பெறாத அல்லிப் பூக்களும் மலர்ந்திருந்தன. எத்தகைய எழில் ஓவியம்! இத்தகைய சொற்சித்திரங்கள் இந்நூலில் மிகப் பல!
இவை மட்டுமல்ல. இயற்கைப் பின்னணியில் பழந்தமிழரின் இன்ப வாழ்வையும் காணலாம்.
அவல் எற உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த
தடந்தாள் நாரை இரிய: அயிரைக்
கொழுமீன் ஆர் கைய மரம்தொறும் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண் குருகு ஒப்பும்
வளையல் அணிந்த மகளிர். அவல் இடித்துக் கொண்டிருக்கிறார்கள்! அவல் இடிக்கும் உலக்கையை வாழை மரத்திலே சார்த்தி விட்டு, வள்ளைப் பூவைப் பறிக்கிறார்கள். இவர்களைப் பார்த்தவுடன் வயலிலே பரந்து மேய்ந்து கொண்டிருக்கிற நாரை அஞ்சி நீங்குகின்றது. எனினும் அவை வயலிலுள்ள அயிரை மீனைப் பிடிப்பதற்காக மரங்கள்தோறும் தங்கியிருக்கின்றது. அப்பறவைகளை வளையல் அணியாத சிறு பெண்கள் ஓட்டுவர்.
தமிழ் நிலத்து மக்களின் இயல்பான வாழ்வை எளிய தமிழ்ச் சொற்களில் தந்த இதுவா இரும்புக்கடல்? தீம்சுவை அவலும் தேம்படு கதலியுமல்லவா?
நடைச் சிறப்பு
சொல்லுகின்ற பொருளுக்கு ஏற்ப நடையும் மாறும் என்பர். இனிய எளிய செய்திக்கு ஏற்ப மென்னடை பயில்வது இயல்பு. கொடுமையைச் சித்தரிக்கும் போதும் ஒரு பாட்டு இனிதாக இருக்குமானால் அதன் சிறப்பிற்கு அதைவிடச் சிறந்த உரைகல் எது?
தொல்பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
பைஊண் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன.
நிலம்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ
…………………………………
வசையில் மகளிர் வயங்கிழை அணிய
…………………………………….
நுகர்தற்கு இனிது.
வறுமை நிலை எவ்வளவு தெளிவாகச் சுட்டப்படுகிறது.
அடுத்து அதனைப் போக்கும் அருஞ்செயலும் சிறப்பாகக் கூறப்படுகிறது. இரண்டையும் ஒருசேரக் காணும் போது புலவரின் சொல்லாற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வறுமையின் கொடுமையையும் வள்ளன்மையின் பெருமையினையும் இதனினும் தெளிவாகவும் எளிமையாகவும் இனிதாகவும் எப்படிக் கூற முடியும்?
இதனினும் எளிய நடையில் அமைந்த பாக்களும் இதில் உள.
அட்டு ஆனானே. குட்டுவன் அடுதொறும்
பெற்று ஆனாரே. பரிசிலர் களிறே
வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்
சொரி கரை கவரும் செய் வழிபு உராலின்
பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல்,
நல் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.
உரைநடை போலத் தான் இருக்கிறது. அமைப்பிலோ, நடையிலோ, சொல்லிலோ, பொருளிலோ, எதிலேனும் வன்மை புலப்படுகிறதா?
பதிற்றுப்பத்தின் முதல் ஈறாக எண்பது பாடல்களிலும் எளிமை மேம்பட்டு, இனிமை விரவி இருக்கக் காணலாம். தோண்டச் சுரக்கும் மணற்கேணியேயன்றி. இரும்புக் கடலன்று பதிற்றுப்பத்து. கரும்பின் புறமும்கூடக் கடுமையானதுதான். வலிந்து சுவைத்தால்தான் இன்பம் பயக்கும். அத்தகையதுதான் பதிற்றுப்பத்தும் எனலாம்
நல்ல இலக்கியக் கட்டுரைகள். இதுபோன்ற வலைப்பதிவுதான் இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவை. அதை உணர்ந்து பல சங்க இலக்கியப்பதிவுகளை பதிவுசெய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். பதிவுகள் பலருக்குப் பயன்படட்டும்.
ReplyDeleteஅன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.
அலைபேசி: 9486265886