Search This Blog

Monday, January 31, 2011

கலித்தொகை

பாலைக்கலி(9)
பாடலை இயற்றியவர்- கலித்தொகையை முதலில் பதிப்பித்த(1887) சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களின் கருத்துப்படி இந்நூல் முழுமையும் இயற்றியவர்நல்லந்துவனார்
செவிலியின் வினவலும் அந்தணரின் வழிப்படுத்தும் பேச்சும்


எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைச் கொளைநடை அந்தணீர்! –
வெவ்இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ்இடை,     5
என்மகள் ஒருத்தியும், பிறள்மகன் ஒருவனும்,
தம்முளே புணர்ந்த தாம் அறிபுணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணீரோ? - பெரும!’
காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய        10
மாண் இழை மடவரல் தாயிர் நீர்போறிர்
பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,                   15
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே.
ஏழ்புணர் இன்இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே        20
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைப்பிரியா ஆறும் மற்று அதுவே.’

கருத்துரை
எறித்தலை தருகின்ற ஞாயிற்றின் வெம்மையைத் தாங்குவதற்காக ஏந்திய குடையின் நிழலில் உறியிலே வைத்த கமண்டலமும், புகழுக்குச் சான்றாக விளங்கும் முக்கோலையும் முறையாக தோளிலே வைத்துக் கொண்டு வேறு ஒன்றும் அறியாத நெஞ்சினராய், நீர் குறித்தவாறு ஏவல் செய்யும் ஐம்பொறிகளையும், உமக்கென்று கொள்கையினையும் ஒழுக்கத்தினையும் உடைய அந்தணீர்!
நீவீர் வெம்மையான காட்டிடத்தே செல்லுகின்றவர் என்பதால் உம்மைக் கேட்கின்றேன். இக்காட்டுவழியிலே என் மகள் ஒருத்தியும் வேறொருத்தி மகன் ஒருவனும் தமக்குள்ளே பிறரறியாதவாறு கூடினர். இப்பொழுது அவர்கள் கூடியதைப் பிறரும் அறிந்துவிட்டனர். அவர்கள் இருவரையும் நீவீர் கண்டீரோ?பெரும! என்றவுடன் அவரும்,
        “காணாமல் இருந்தேன் அல்லேன். கண்டேன். காட்டிடையே ஆண்மகனுக்குரிய அழகினையுடைய தலைவனோடு அரிய சுரத்தைக் கடந்து போகக் கருதிய மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிந்த மடப்பத்தையுடைய பெண்ணின் தாயா் போல்வீர்!
நறுமணப்பொருட்கள் விரவிய சந்தனம், உடம்பில் பூசிக் கொள்பவருக்குப் பயன் கொடுக்கிறதே தவிர, மலையிடத்து பிறந்திருந்தாலும் அச்சந்தனம் மலைக்கு என்ன செய்யும்? நினைத்துப் பார்த்தால் உம் மகளும் நுமக்கு அதைப் போன்றவளே!
சிறப்பான வெண்முத்தம் அணிவார்க்குப் பயன்படுகிறதே ஒழிய, கடல்நீரிலே பிறந்ததாயினும் நீருக்கு அவை என்ன செய்கின்றன? ஆராயுங்கால், நும் மகளும் உமக்கு அத்தன்மையானவளே!
ஏழுநரம்புகளால் கூட்டப்பட்ட இனிய இசை பாடுவோருக்கே பயனினைத் தருகின்றது. அது யாழுலே பிறந்திருந்தாலும் யாழுக்கு அது எதைச் செய்கின்றது? சிந்தித்துப் பார்க்கின் நும் மகளும் உமக்கு அதைப் போன்றவளே! என்பதால்,
மிக உயர்ந்த கற்பினையுடைய அப்பெண்ணுக்குத் துன்பத்தைத் தராதீர்! அவளோ, சிறந்தவன் பின்னே சென்றனள். அறத்திலிருந்து மாறுபடாது செல்லும் சிறந்த வழியும் அதுவேயாகும்.” என்றார்.

சொற்பொருள் விளக்கம்
எறித்தரு - எறித்தலை தருகின்ற, கதிர்தாங்கி- ஞாயிற்றின் வெம்மையைத் தாங்குவதற்காக, ஏந்திய குடை நீழல்- ஏந்திய குடையின் நிழலில்,உறித்தாழ்ந்த கரகமும்- உறியிலே வைத்த கமண்டலமும், உரைசான்ற முக்கோலும்- புகழுக்குச் சான்றாக விளங்கும் திரிதண்டமும்,நெறிப்படச்- முறையாக ,சுவல் அசைஇ- தோளிலே வைத்துக் கொண்டு , வேறு ஓரா நெஞ்சத்துக்- வேறு ஒன்றும் அறியாத நெஞ்சினராய்,குறிப்பு ஏவல் செயல்-ஐம்பொறிகளும் மனமுமாகிய ஆறின் தொகுதி, மாலைச்இயல்பு,கொளை-கொள்கை,நடை-ஒழுக்கம், அந்தணீர்! – அந்தணரே!வெவ்இடைச் செலல்- வெம்மையான காட்டிடத்தே செல்லுகின்றவர் மாலைஇயல்பு,ஒழுக்கத்தீர்-செல்லுதலை உடையீர்; இவ்இடை -இக்காட்டிடத்தே, என்மகள் ஒருத்தியும், பிறள்மகன் ஒருவனும்- என் மகளும் வேறொருத்தியின் மகனும், தம்முளேதமக்குள்ளே,புணர்ந்த-கூடின, தாம்அவர்களின் கூட்டம்,அறிபுணர்ச்சியர்-அயலாரும் அவர்களின் புணர்ச்சியை அறிந்தனர் ;அன்னார் இருவரைக் காணீரோ? – அவர்கள் இருவரையும் கண்டீரா?பெரும!-பெருமானே!,காணேம் அல்லேம்-பார்க்காமல் இருந்தேன் என்று மாறுபடவில்லை ; கண்டனம்-கண்டேன், கடத்திடை-காட்டிடையே;ஆண் எழில்-அழகிய ஆண்மகன், அண்ணலோடுதலைவனோடு,அருஞ்சுரம்-கடத்தற்கரிய காடு, முன்னிய-போகத் துணிந்த,மாண் இழை மடவரல்-மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண், தாயிர் -தாயர், நீர்போறிர்-போகின்றீர்  நீர்,பலஉறு நறுஞ்சாந்தம்- நறுமணப்பொருட்கள் விரவிய மணம் வீசும் சந்தனம், படுப்பவர்க்கு அல்லதை- பூசிக் கொள்பவருக்குப் பயன் கொடுக்கிறதே தவிர,மலையுளே பிறப்பினும்-மலையிலே பிறந்தாலும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?-மலைக்கு அவை என்ன செய்கின்றன? நினையுங்கால்-நினைத்துப் பார்த்தால், நும்மகள்உன் மகளும், நுமக்கும் ஆங்கு அனையளே-உனக்கு  அத்தன்மையளே,சீர்கெழு-சிறப்பான ஒளிவீசும், வெண்முத்தம்- வெண்மையான முத்து, அணிபவர்க்கு அல்லதை- அணிபவர்க்கு அல்லாமல், நீருளே பிறப்பினும்-கடல்நீரிலே பிறந்தாலும், நீர்க்கு அவைதாம்-நீருக்கு அவை தாம், என் செய்யும்-என்ன செய்ய முடியும்?தேருங்கால்-ஆய்ந்து தெளிந்தால், நும்மகள்-உன் மகளும்,  நுமக்கு-உனக்கு, ஆங்கு அனையளே-அத்தன்மையளே,ஏழ்புணர்ஏழு நரம்புகளால் கூட்டப்படும்,இன்இசைஇனிய இசை,முரல்பவர்க்கு அல்லதை-பாடுவோர்க்கு அல்லாது,யாழுளே பிறப்பினும்-யாழிடத்துப் பிறந்தாலும், யாழ்க்கு-யாழுக்கு, அவைதாம் என் செய்யும்?-அவை என்ன செய்கின்றன?சூழுங்கால்-ஆராய்ந்தால்,நும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே-உன் மகளும் உனக்கு அத்தன்மையானவளே,என ஆங்குஎன்றபடியால்,இறந்த-உயர்ந்த பொருளாகிய, கற்பினாட்கு- கற்பு வாழ்வை மேற்கொண்டவளுக்கு,(களவிலே தான் கண்டு நட்பு கொண்டவனோடு இல்லற வாழ்வையும் மேற்கொள்ளவதே அறம் என்று கருதினர் தமிழர். அதுவே கற்பு வாழ்வு என்றும் குறித்தனர்.) எவ்வம்துன்பம்,படரன்மின்-பெருக்காதீர், சிறந்தானைசிறந்த தலைவனை,வழிபடீஇச்-பின்பற்றி, சென்றனள்-சென்றிருக்கின்றாள்; அறம்இல்லறம், தலை- சிறந்த,பிரியா- வேறுபடாத,ஆறும்-(இல்லறத்தின்) இயல்பும் , மற்று அதுவே-மேலும் அதுவேயாம்.