Search This Blog

Saturday, January 1, 2011

கொற்கை .


                           கொற்கை          
         பழம் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய கொற்கை, சிதம்பரனார் மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் நெடுஞ்சாலைகளில் வாழவல்லான் என்ற கிராமத்திற்கு மூன்று கிலோ மீட்டர்கள் கிழக்கிலும், உமரிக்காடு கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர்கள் வடக்கிலும் கொற்கை அமைந்துள்ளது. "நீர்வளம் மிகுந்த சிற்றூராக உள்ளது. நெல், வாழை, வெற்றிலை ஆகிய நன்செய்ப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. பழைமையான அக்கசாலை ஈசுவரமுடையார் கோவில் உள்ளது. ஊரின் ஆரம்பத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் வன்னிமரம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. தெற்கு நோக்கி புத்தர் சிலை ஒன்றும் வன்னி மரத்தினடியில் காணப்படுகினற்து."(கோ.வே. பெருமாள், பொருநை வளம், ப. 85)
        கொற்கையை "மதுரோதய நல்லூர் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன." (சோமலே, திருநெல்வேலி மாவட்டம், ப. 254)
        பொற்கை என்று கொற்கை செப்பேட்டுப் பிரதியில் இடம்பெற்றுள்ளமை அறியப்பட்டது. கடைச் சங்கக் காலத்தில் விளங்கிய பாண்டிய மன்னர்களுள் ஒருவர் பொற்கைப் பாண்டியன். கண்ணகி முன் தோன்றிய மதுராபுரித் தெய்வம், பாண்டியர்களின் செங்கோல் பெருமையைக் கூறும்போது, பொற்கைப் பாண்டியன் பெருமையை (சிலம்பு. 23: 49-53) எடுத்துரைத்துள்ளது.
        கி.பி. 130 வரை கொற்கை பாண்டியரின் தலைநகராக இருந்த செய்தியை, தாலமி என்ற அயல்நாட்டுப் பயணி குறிப்பிட்டுள்ளார். கொற்கை பாண்டியர்களின் தலைநகரா இருந்த பொழுது, கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தியப் பொற்கைப் பாண்டியனின் செங்கோல் திறத்தைப் பாராட்டுமுகமாக தலைநகர் பொற்கை என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கொள்ளலாம்.
"மார்க்கோபோலோ என்ற பயணி மற்றும் கிரேக்கர்களின் குறிப்புகளிலிருந்து கொற்கைத் துறைமுகத்தைப் பற்றி அறிந்து கொண்டு கால்டுவெல் அரசின் உதவியுடன் அதை அகழ்வாராய்ச்சி செய்து இப்போதுள்ள நில மட்டத்துக்கு எட்டு அடி கீழே தான் பழங்கால கொற்கைத் துறைமுகம் கடலில் புதையுண்டது. எஞ்சியவை தாமிரபரணி ஆற்றில் புதையுண்டு போயிருக்கக்கூடும் என்றும் கண்டறிந்தார்." (வரதராஜன், தமிழ்த்தொண்டாற்றிய சான்றோர்கள் (இலக்கியம், இதழ்கள், பதிப்பகம்), ப. 10.
        கொற்கை கடற்றுறைப் பட்டினம் என்றவாறு, இலக்கியங்களும், வெளிநாட்டு குறிப்புக்களும் கூறுகின்றன.
        உகுவாய் நிலத்த
        துயர்மணல் மேல் ஏறி
        நகுவாய் முத்தீன் றசைந்த
        சங்கம் - புகுவான்
        திரை வரவு பார்த்திருக்கும்
        தென் கொற்கைக் கோமான்      (முத்தொள்ளாயிரம்.81)
கொற்கை - தலைநகர்
        கொற்கையில் பழம்பாண்டியர்களின் ஆட்சி கி.மு. 500 முதல் கி.பி. 300 வரை இருந்திருக்கலாம் என்றும், பின்னர் தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்பதும் வரலாற்று அறிஞர்களின் கருத்து. அக்கருத்துக்கு அரண் அமைப்பது போல,
        "பாண்டியரின் நுழைவாயில் எனும் பொருளில் 'பாண்டிய கபாடம்' என அழைக்கப்பட்ட கொற்கை பாண்டிய தலைநகராம் பெருமையைப் பறித்துக்கொண்டு பாண்டிய தலைநகர் அண்மையில் மாற்றப்பட்டுள்ளது" (கா. கோவிந்தன் தமிழ் பண்பாடு, பக். 170-171) என்று கி.பி. 130ல் இந்தியா வந்தபோது தாலமி என்ற அயல்நாட்டு பயணி குறிப்பிட்டுள்ளார். எனவே கி.பி. 130 வரை கொற்கையே தலைநகராக இருந்து வந்துள்ளமை தெரிகிறது.
        "இராம இராவணப் போர் நடந்தது கி.மு. 6000இல்; மகாபாரதச் சண்டை நடந்தது கி.மு. 3105இல். வால்மீகியார் இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் தன் சேனைகளை விளித்து, சீதையைத் தேட விட்டபோது, தென்னாட்டில் பல இடங்களைப் பற்றிச் சொன்ன பின் வானரர்களே, மலைய மலைக்கு அப்பால் பொன் மயமானதும், முத்து மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், திவ்வியமானதும், தகுதியோடு கூடியதும் ஆகிய பாண்டியர்கள் கபாடத்தைப் பார்ப்பீர்கள் என்று கூறுகின்றான். (கிட்: 43-13)" (திருமந்திரமணி, துடிசை கிழார், அ. சிதம்பரனார், கால வரையறையுடன் தமிழ்ச் சங்கங்களின் வரலாறு, ப. 72)
        இதனை வைத்துப் பார்க்குமிடத்தும், இராமாயணக் காலத்தில், கபாடபுரம் சிறந்த நிலையில் பாண்டியர் தலைநகராக விளங்கியமை தெரிய வருகிறது.
தமிழ்ச்சங்கம்
        "கி.மு. 2500ம் ஆண்டில் உக்கிரப் பெருவழுதியால் நிறுவப்பெற்று அகத்தியராலும், பிற தமிழ்ப் புலவர்களாலும் தமிழ் ஆய்வு செய்யப்பட்ட இடைச்சங்கம் எழுந்தது கொற்கையில்தான்" (இராகவன் அருணாசல கவிராயர், கோநகர் கொற்கை, ப. 36)
        கடலின் வாயிலாக அமைந்த ஊர் என்பதால் கபாடபுரம் என்று அழைக்கப்பட்டது, அழிந்துபட்ட கொற்கையின் ஒரு பகுதியே என்பது தெளிவாகிறது.
வாணிபம்
        இடைச்சங்கம் இருந்து தமிழை வளர்த்த கொற்கை மாநகர், தலைநகராக, துறைமுகமாக விளங்கி தமிழகத்தின் வளம்கொழிக்கும் பூமியாக இருந்திருக்கிறது. பல நாட்டோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்தமை அறிகிறோம். கொற்கையின் முத்துக்கள் உலக அரங்கில் சிறந்து விளங்கின.
        "ஏறத்தாழ 1500 இல் வாழ்ந்து வந்த அத்தினீய அரசர்கள் கடல் வாணிக உறவால் பாண்டியர்களை மதித்து போற்றிமைக்கு அறிகுறியாக 'பாண்டியோன்' என்ற சூட்டிக் கொண்டனர். கி.மு. 25ஆம் ஆண்டில் உரோமப் பெருநாட்டை ஆண்ட (அகஸ்டஸ்) மன்னனது அவைக்கு பாண்டியன் பல அன்பளிப்புப் பொருட்களைத் தூதர் மூலம் அனுப்பி வைத்தான் என்று ஸ்டிராபோ என்ற அறிஞர் குறித்து வைத்துள்ளார்" (எஸ். கணபதி ராமன், பொருநை நாடு, பக். 81-82)
        "கிளாடியசு, நீரோ (கி.பி. 54-68) போன்றவர்களோடும், பிற மன்னர்களோடும் அரச தூதுவர்களைப் பரிமாறிக்கொண்டு வணிகம் செய்தனர்."(இராகவன் அருணாசல கவிராயர், கோநகர் கொற்கை, ப. 36)
        "முத்துக்களும் பல வகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப்பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும் (மதுரைக்காஞ்சி 321-323) மது வகைகளும் (புறம்.56) கண்ணாடிச் சாமான்களும் கொற்கை பெருந்துறையில் வந்திறங்கின" (டி.வி. சதாசிவபண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, ப. 159)
        கொற்கையின் முத்துக்கள் மரக்கலமேறி கடல் கடந்து சென்று பிற நாட்டு மன்னர்கள் முடியிலும், மாதர்கள் அணியிலும் இடம்பெற்றன என்பதை நூலாசிரியர்கள் குறிப்பிட்டள்ளனர்.
வெளிநாட்டார் வருகை
        "கொற்கை, தொண்டி முதலான கடற்றுறைப் பட்டினங்களில் ஆண்டுதோறும் பதினாயிரம் குதிரைகள் வந்திறங்கின என்று 'வாசப்' எனும் ஆசிரியர் கூறியுள்ளமையாலும், 'மார்க்கோபோலோ' என்பார், பாண்டியர்கள் குதிரைகள் வாங்குவதில் பெரும்பொருளைச் செலவிட்டு வந்தனர் என்று குறித்துள்ளமையாலும் பாண்டியர்களிடத்து சிறந்த குதிரைப்படை அந்நாளில் இருந்தது" (டி.வி. சதாசிவபண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, பக். 158-159) என்ற செய்தியும் பெறப்பட்டுள்ளது.
        "கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியர் தமது அர்த்த சாஸ்த்திரத்தில் கொற்கையைப் புகழ்ந்து கூறுகிறார்" (எஸ். கணபதிராமன், பொருநை நாடு, பக். 83)
        கி.பி. 50இல் தமிழகம் வந்த பெரிப்புளூஸ் என்ற நூலாசிரியர் கொல்கை என்று கொற்கையைக் குறிப்பிடுகிறார்.
        கி.பி. 130ஆம் ஆண்டில் வந்த 'தாலமி' என்ற நிலநூல் ஆசிரியரும், கொற்கையைக் கொல்கை என்றும், கொற்கை விளங்கும் கடற்கரையைக் கொல்கைக் குடா என்றும் கூறியுள்ளார்.
        கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கோபோலோ காயல் துறைமுகத்தில் முத்துக்குளிப்பதைக் குறிப்பிட்டள்ளார். "காயல் துறைமுகத்திற்கு ஆர்ம்ஸ் இஸ்தி, ஏடன் முதலிய அரேபிய நாடுகளிலிருந்து வணிகர்கள் வந்த வண்ணமாகவும் கொணர்ந்து குவித்த வண்ணமாகவும் இருக்கிறார்கள்" (எஸ். கணபதிராமன், (பொருநை நாடு, ப. 89) என்றும் குறிப்பிட்டள்ளார்.
கொற்கை
        கொற்கை அன்று பெரும் துறைமுகமாகவும், வளம் கொழிக்கும் பூமியாகவும், பாண்டியர்களின் தலைநகரமாகவும், பல நாட்டவர் வருகை தந்த பழம்பதியாகவும் இருந்து வந்துள்ளமை தெரியலாகிறது.
        கொற்கையின் அலை வீசும் அழகும், அங்கே முத்துக்கள் கிடைக்கும் பான்மையினையும் ஆட்சி செய்த பாண்டியர்களையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
        'மறப்போர் பாண்டிய ரறத்திற் காக்கும்
        கொற்கையம் பெருந்தறை முத்து'                       (அகம் 27. 9-10)
       
        'சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தம்'      (அகம் 201. 3-5)
       
        'முத்துப்பட பரப்பின் கொற்கை முன்துறை'              (நற்றிணை 23-6)
       
        'நாரரி நறவின் மகிழ்தொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை'(அகம். 296 8-10)
        'இருங்கழி சேயிறா வினப்புள் ளாரும்
        கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை'  (ஐங்குறு. 188. 1-2)
என்றும்,
        'அலங்கிதழ் நெய்தார் கொற்கை முன்றுறை
        இலங்குழுத் துறைக்கு மெயிறு கெழு துவர்வாய்' (ஐங்குறு. 185. 1-2)
என்றும் கடற்கரையின் பரப்பை ஐங்குறுநூறு பாடுகின்றது.
        'திரைதந்த ஈர்ங்கதிர் முத்தம்
        கவர்நடைப் புரவி கல்வடு தபுக்கும்’
        நற்றேர் வழுதி கொற்கை'               (அகம். 130. 10-11)
        'கலிகெழு கொற்கை'                    (அகம். 350-13)
        'கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு'    (சிலம்பு. 14. 180)
என்றும் கொற்கைப் பெருந்துறை இலக்கியங்களில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.
அஃதன்றி,
        'இப்பி யீன்ற இட்ட
        எறிகதிர் நித்திலம்
        கொற்கையே யல்ல
        படுவது - கொற்கைக்
        குருதிவேல் மாறன்
        குளிர்சாந்தகலம்
        கருதியார் கண்ணும்
        படும்'                  (முத்தொள்ளாயிரம். 68)
        கொற்கைக் கரையில் மட்டுமா முத்துக்கள் பிறக்கும்? கொற்கையை ஆளும் பாண்டியனின் மார்பைத் தழுவ எண்ணும் பெண்களது கண்களிலும் பிறக்கும் என்ற பொருளமைந்த பாடல், கொற்கை முத்துக்கள் கிடைக்கும் இடம் என்பதைச் சுட்டியுள்ளது. அங்கே ஆண்ட பாண்டிய மன்னர்கள்.
        'கொற்கைக் கோமான் தென்புலம்'                (சிறுபாணாற்றுப்படை. 62-63)
        'நற்றேர் வழுதி கொற்கை'                              (அகநானூறு. 130;11)
        "விறல் போர்ப் பாண்டியன், புகழ்மலி
        சிறப்பின் கொற்கை"                                   (அகநானூறு 201; 3-5)
        "பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்"      (மணிமேகலை 13;84)
        "கொற்கை கொண்கன்"                          (சிலம்பு. 23;11)
என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
கொற்கை முத்துக்களின் சிறப்பை,
        'பல்லரண் கடந்த பசும்பூப் பாண்டின்
        மல்குநீர் வரைப்பிற்கொற்கை முன்றுறை
        ஊதை யீட்டிய வுயர் மண லடைகரை
        ஒத வெண்டிரை யுதைத்த முத்தம்'
                              (தொல். களவு. நூ. 11. நச். உரை மேற்கோள்)
        'பொரையன் செழியன் பூந்தார் வளவன்
        கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை
        பாவை முத்தம் ஆயிதழ் குவளை'      
                                      (யா.வி.சூ. 15 மேற்கோள்)
        தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரையில் களவியல் 11ஆவது நூற்பாவிற்கு மேற்கோளாகவும், யாப்பெருங்கல விருத்தி சூத்திரம் 15இன் மேற்கோளாகவும் காட்டிய பாடல்களில் கூறப்பட்டுள்ளமையும் கொற்கையின் சிறப்பை அறிவிக்கின்றன.
        'வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வழி'         (சிலம்பு. 20; 30)
        'பொற்றேர் செழியன் மதுரை மாநகர்க்கு
        உற்றதும் எல்லாம் ஒழிவின்றி உணர்ந்து'                (சிலம்பு. 27; 83-84)
        'கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்'    (சிலம்பு. 27; 127)
என்பதாலும் கொற்கைப் பதியில் பாண்டியர்கள் ஆட்சி செய்தமை பற்றி இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
        செழிப்புடன் இருந்த பாண்டிய நாட்டை ஆட்சி செய்த குலசேர பாண்டியன் கி.பி. 1310ஆம் ஆண்டில் தன் மகனால் கொலை செய்யப்பட்ட செய்தியினையும் மகமதிய ஆசிரியர் வாசப்பின் குறிப்பினால் (Wassaf in Elliot and Dowson Vol.iii p. 53 and p. 54) அறியப்படுகிறது. (சதாசிவபண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, ப. 127) சுந்தர பாண்டியன் ஆட்சி செலுத்திய காலத்தில்,
        "செத்துங்கெட்டுப்போய் அலைந்து ஊரு வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழாயிருக்கிற அளவிலே (S.I.I.Vol.VIII.No.247) என வரும் கல்வெட்டுப் பகுதி" (66) செய்தியால் சுந்தரபாண்டியன் காலத்தில் இஸ்லாமியரின் கலகத்தாலும், வெள்ளத்தாலும் அழிவு நேர்ந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
        வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவினால் கொற்கைத் துறைமுகத்தின் பெருமைகள் அழிந்தன.
இன்று கடலுக்கு பத்து கிலோமீட்டர்களுக்கு அப்பால் கொற்கை அமைந்துள்ளது. பழைய கொற்கை நகர் கடலுக்கடியில் பத்தடி தூரத்தில் புதையுண்டு கிடக்கிறது என்பதை டாக்டர் கால்டுவெல் அவர்கள், அகழ்வாராய்ச்சிகள் மூலம் எடுத்துரைத்துள்ளார். நிலத்தைத் தோண்டும் போது அடியில் ஊர்ப்புதையுண்டு கிடப்பதற்கான சான்றாக பொருட்கள் கிடைக்கின்றன என்று  ஊர்  மக்கள் கூறுகின்றனர்.


1 comment:

  1. மிகவும் பயனுள்ள பகிர்வே

    தொடர்ந்து பதியுங்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete