Search This Blog

Sunday, August 15, 2010

எப்போது...?

தன் இயல்பைக் காட்ட
மரமும் செடியும் கொடியும்
தயங்கவில்லை!
பெண்ணே!
நீ மட்டும்
உன் திறமை, உன் ஆசை, உன் வெறுப்பைக்
காட்டத் தயங்குவதேன்?
ஈரறிவு உயிர்களுக்குள்ள
இயல்பான வெளிப்பாடு
உன்னிடமிருந்து வெளிப்படுவது
எப்போது?

Saturday, August 14, 2010

சுதந்திரம்...?

சுதந்திரம் பெற்றுவிட்டோம்- எவண்
சுதந்திரம் பெற்றுக்கொண்டோம் என்பதைத்
தெரிந்துகொண்டால் சுகம்
பிறந்திடும் இந்தநாட்டில்-அந்நாளில்
எப்படியும் சுதந்திரத்தைத்
தப்பிடாது பெறவேண்டும்
என்று பலர் சபதமிட்டு
ஆயிரம்பேர் சிறையும் பட்டு -அதில்
பல பேர் உயிரும் விட்டு
ஒன்றுபட்டு உழைத்துயிரை
மண்ணுக்கு ஈந்ததனால்
கண்டோம் இச்சுதந்திரத்தை!
பெற்ற சுதந்திரத்தைப்
பேணிக் காப்பது நம் கடன்!
கடனாற்றத் துடிக்கும் எம்
காளைகளுக்கு
வங்காளக் கவியின் வாசகங்கள்
தூணாக இருக்கட்டும்!
Where the mind is without fear and the head is held high:
Where knowledge is free,
Where the world has not broken up into fragments by narrow domestic walls,
Where words come out from the depth of truth,
Where tireless striving stretches it arms towards perfection,
Where the mind is led forward by thee into everwiding thought and action,
Into that heaven of freedom my father let my country awake.
இந்தத் தெளிந்த சிந்தனையோடும்
அறிவாற்றலோடும்,
உலையாத முயற்சியோடும்
நலமோடு வாழ்ந்து
வளமோடு வாழ வைப்போம்
இந்தியாவை!

Sunday, August 8, 2010

உன்னை உணர்ந்து கொள்

உன்னை உணர்ந்து கொள்-நண்பனே
உலகினைப் புரிந்து கொள்
கனவுகளைச் சுமந்துக்
கல்லறைக்கு வழிதேடியவர்கள்-இன்று
நனவுகளைச் சுமந்துக்
கல் அறையில் வாழ்கிறார்கள்!
முன்னவர் நடந்து போன பாதைகள்-நம்
வன்மைக்கு வழிகாட்டி!
வளமைக்குத் திசைகாட்டி!-நண்பனே
காயங்கள் எல்லாம் உன்
காயத்தைப் பண்படுத்தத்தான்!
பட்டங்கள் பெற்றதெல்லாம்-உங்கள்
பசிக்கு உணவாகவில்லையா?
கஷ்டங்கள் பட்டதெல்லாம்-உந்தன்
களிப்புக்கு வழிதேடவில்லையா?
தோல்விகள் கண்டதெல்லாம்-உங்கள்
வெற்றிக்குத் துணை போகவில்லையா?
துன்பங்கள் வருவதெல்லாம்-உம்மைத்
தூய்மையாக்கத் தான்!
காயங்களெல்லாம் நண்பனே –உன்
காயத்தைப் பண்படுத்தத்தான்!
நல்லதென்றும் தீயதென்றும்
நானிலத்தி்ல் அறியாது
கள்ளமற்ற உள்ளத்தோடு
கடமைகள் செய்ததுண்டா?
பாசத்தை வெளிவேடத்தைப்
பகுத்து அறியாது
பாலெல்லாம் வெண்மையென்று
பாரித்த பான்மையுண்டா?
சருகுகள் உதிர்வதெல்லாம்
வசந்தத்தின் வரவுக்காக!
காரி்யம் முடியும் வரை
கலகலப்பாய் பேசுகின்ற
காரியவாதிகளை-நன்
மேதைகளாய் மதித்ததுண்டா?
அன்பதற்காய் அலைபாய்ந்து-வீண்
வம்பதனை விலையாகப் பெற்றதுண்டா?
காயங்களெல்லாம் நண்பனே- உன்
காயத்தைப் பண்படுத்தத்தான்!
கோலங்கள் மாறினாலும் கொண்ட
குறியதனில் தப்பாது வாழ்ந்துவிடு!
சருகுகள் உதிர்வதெல்லாம்
வசந்தத்தின் வரவுக்காக!
உன்னை உணர்ந்து கொள்!-நண்பனே
உலகினைப் புரிந்து கொள்!
உடம்பதனை வளர்த்துக் கொள்-
உழைப்பதனைப் பெருக்கிக் கொள்!
நன்றென்ற செயல்கள் உன்னால்
நானிலத்தில் மலரட்டும்!
அன்பதனைப் பெருக்கிக் கொள்!
வன்பதனைத் தவிர்த்துக் கொள்!
நன்றியினை மறவாதே!
அன்றதனை நினையாதே!
எழுச்சியான உள்ளத்தோடு –உன்
வளர்ச்சிக்கு வித்திடு!
உன்னை உணர்ந்து கொள் –நண்பனே
உலகினைப் புரிந்து கொள்!

Tuesday, August 3, 2010

சங்கத்தமிழ்

சங்கத்தமிழ்
புறநானூறு
சங்ககால இலக்கியங்கள் தமிழனின் உயா்ச் சொத்து.உயிர்ச் சத்து. புறநானூற்றிலே ஒவ்வொரு பாடலைப் படிக்கின்ற போதும் காவலனும் கவிஞனும் ஒட்டி உறவாடிய உண்மை அன்பும், உயர்வு தாழ்வின்றி உவப்போடு பழகிய உயர் நட்பும் ஊன்றிப் படிப்பவரை ஒரு கணம் வியந்து பார்க்கச் செய்வது உண்மை. சரி… இப்புலவர்கள் மன்னர்கள் உவந்து அளித்த பொன்னையும் பொருளையும் பேணிப் பாதுகாத்து வறுமையில்லாது வாழ்ந்தார்களா என்றால் அதுவுமில்லை.கலைக்குக் கிடைத்த செல்வத்தைக் குறையா விருப்பமொடு வேண்டியோர்க்குக் கொடுத்து உளம் மகிழ்ந்தனர். உயர் வாழ்வு வாழ்ந்தனர்.
காலங்கள் சென்றுவிட்டன. எனினும் சங்கப் புலவர்களின் உலகத்து உண்மை நிலை உணர்ந்த மாட்சியும், உணர்ச்சியால் ஒத்த உயர் நட்பும் உவப்பில் ஆழ்த்துகின்றன. அந்த மகிழ்ச்சியின் சிறு துளிகளே இவை.
புறநானூற்றிலே இருக்கின்ற நானூறு பாடல்களையும் தொடர்ந்து எழுதலாம் என்ற என் எண்ணத்தின் விளைவே இன்றைய தொடக்கம் புறநானூற்றிலே இருபத்தியெட்டு பாடல்கள் ,கபிலரின் பாடல்கள். அவரின் புறநானூற்றுப் பாடல்களின் திறத்தினைச் சுவைப்பதற்கு முன் அவரைப் பற்றி சில செய்திகளைப் பார்ப்போம்.
கபிலரைப் பற்றி…
சங்க காலப் புலவர்களி்ல் தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் கபிலர். அருளும், அன்பும்,உளத் தூய்மையும், வாய்மையும், பாட்டியற்றும் வன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர். அறவோராய், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய் விளங்கியவர். சங்கப் புலவர்களின் பொய் புகலா செந்நாவால் போற்றிப் புகழப்பட்டவர்.
”உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன்” என்று நக்கீரனாரும்
”அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் ” என்று பதிற்றுப்பத்தில்(85) பெருங்குன்றூர்கிழாரும்,
தாழாது
”செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” என்று புறநானூற்றில்(53) பொருந்திலிளங்கீரனாரும்,
”நிலமிசைப் பிறந்த மக்கட் கெல்லாம்
புலனழுக் கற்ற அந்தணாளன்
இரந்துசெல் மாக்கட்கு இனி இடனின்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்” (புறம். 127),
”பொய்யா நாவிற் கபிலன்” என்று(புறம்.174)மாறோக்கத்து நப்பசலையாரும் போற்றியுள்ளனர்.
எவ்வுயிர்க்கும் தண்மை கொண்டு ஒழுகிய அந்தணராகிய இவர், பறம்பு மலை பாரியின் முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த அன்புள்ளத்தைக் கேள்வியுற்றால் சும்மா இருப்பாரா ? பறம்பு நாடு சென்று பாரியைக் கண்டார். உளங்கொண்ட உற்ற நண்பரானார். பறம்பு நாட்டின் மலை வளம் கண்டு வனப்பில் ஆழ்ந்து குறிஞ்சித் திணைப் பாடல்களைக் கொஞ்சும் தமிழி்ல் குழைத்துத் தந்தார். ”குறிஞ்சிக்கோர் கபிலர்” என்று புகழும் அளவிற்கு மலை வளம் அவரின் பாடல்களில் மலையளவு நுழைந்தது.
பாரியின் வளமை போன காலத்தும் உற்ற துணையாக இருந்து, அவரின் நற்செயல்களை எண்ணி எண்ணிச் செம்மாந்து நின்ற உண்மை நண்பர். பாரியைப் பற்றி மூவேந்தர்களிடமும் கபிலர் கூறிய சொற்கள் , இடுக்கண் உடையுழி ஊற்றுக்கோலாய் இருந்த தகைமையினை விளம்புவன.
கடந்து அடுதானை மூவரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தன் பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினீர் செலினே. (புறம். 110)
“நீங்கள் மூவரும் கூடி எதிர்த்து நின்றாலும் பாரியின் பறம்பு மலையினை வெற்றி கொள்ள முடியாது. பாரியின் நாடு முந்நூறு ஊர்களை உடையது. முந்நூறு ஊர்களையும் தன்னை நாடி வந்த பரிசிலர்களுக்கு அளித்து விட்டான். இப்போது நீங்களும் பாடி வந்தால் நானும் பாரியும் இருக்கின்றோம். நாங்கள் வாழும் குன்றும் இருக்கின்றது“ என்கிறார் கபிலர். மூவேந்தரின் சூழ்ச்சியினால் பாரி இறந்தபோதும், அவர் மகளிரைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டார். என்றாலும் , பாரியைப் பிரிந்து வாழ முடியாத நிலையில், பாரி மகளிரை அந்தணரிடம் அடைக்கலமாகக் கொடுத்து விட்டு, தானும் அவரோடு வருவதாகக் கூறி, உயிர் துறக்க முனைகிறார்.அப்போது பாடிய பாடலிது
மலை கெழு நாட! மா வண் பாரி
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ எற்
புலந்தனை யாகுவை- புரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி
இனையை ஆதலின், நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே ஆயினும்
இம்மை போலக் காட்டி, உம்மை
இடையில் காட்சி நின்னொடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே. (புறம்.236)
”பாரியே! நீ என்னோடு பழகிய நாட்களை வைத்து உன்னோடு நட்பு கொள்ளத் தகுதியில்லாதவன் என்று வெறுத்துவிட்டாயா? நீ இறந்த போது நானும் உடன் வருகிறேன் என்று கூற, நீ வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? உனக்கு ஏற்ற நண்பன் நானில்லையா? இருந்தாலும் , இங்கே எப்படி இடைவிடாது நின்னைக் கண்டு உன்னுடன் இருந்தேனோ, அதைப் போலவே மறுபிறப்பிலும் நான் உன்னோடு இருக்க , எனக்கு அருள்புரிவாயாக!” என்று ஆருயிர் நண்பனிடம் இறக்கும் தருவாயில் கூறிய பாடல் உண்மை நட்புக்கும் , நன்றி உணர்விற்கும் இலக்கணமாய் நிற்கும் பாடலாகும். பாடல் வரிகளில் கூட , உணர்விலே கலந்து விட்ட உண்மை நட்பின் உயிர்த் துடிப்பினைக் காணலாம். இதுவன்றோ நட்பு?
சங்கப்பாடல்களில் கபிலர் பாடியதாக இன்று கிடைப்பன,எட்டுத்தொகை நூல்களான நற்றிணையில் இருபது பாடல்கள், குறுந்தொகையி்ல் இருபத்தியொன்பது பாடல்கள், ஐங்குறுநூற்றில் நூறு பாடல்கள், பதிற்றுப்பத்தில் (7ஆம் பத்து) பத்துப் பாடல்கள், குறிஞ்சிக்கலியில் இருபத்தியொன்பது பாடல்கள், அகநானூற்றில் பதினெட்டு பாடல்கள் மற்றும் பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டும்(261 வரிகள்) ஆகும்.
மலையும் மலை சார்ந்து வளர்ந்த மரங்களும், மலர்ந்த மலர்களும் இத்துணையா? என்று நம்மை மலைக்க வைத்த கபிலரின் இயற்கை பற்றிய நுண்ணறிவை விஞ்சுதற்கும் ஒருவருண்டோ? மலை உள்ளளவும் தமிழ் உள்ளளவும் கபிலரும் வாழ்வார் என்பதைக் கூறுதலும் வேண்டுமோ?
இப்போது புறநானூற்றுப் பாடலுக்கு வருவோம்.புறநானூற்றில் எட்டாவது பாடல், கபிலரின் பாடல். இதோ பாடல்.
வையம் காவலர் வழி மொழிந்து ஒழுக,
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை,
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்ஙனம் ஒத்தியோ?- வீங்கு செலல் மண்டிலம்!
பொழுது என வரைதி.: புறக்கொடுத்து இறத்தி:
மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி
அகல் இரு விசும்பினானும்
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே.
இப்பாடலின் திணை- பாடாண் திணை. பாட்டிற்குரிய தலைவன் யாரோ அவரின் , புகழ், ஆற்றல், ஈகை, அருள் தன்மை போன்றவற்றைப் புகழ்ந்து
உரைப்பதாகும்.துறை-இயன்மொழி –தலைவனின் இயல்பினைப் புனைந்து கற்பனையாகக் கூறாது, அப்படியே கூறுவது இயன்மொழி.இப்பாடலில் ”ஒடுங்கா உள்ளத்து… சேரலாதன்” என்று மன்னனின் இயல்பினைக் கூறியுள்ளமையால் இயன்மொழியாயிற்று. கதிரவனோடு சேரலாதனை ஒப்பிட்டுள்ளதால் பூவைநிலை என்ற துறையும் ஆகும்.(பூவைநிலை என்பது தலைவனைத் தேவர்களோடு ஒப்பிட்டுக் கூறுவது.)
சரி.. பாட்டின் பொருளுக்கு வருவோம். விரைந்து செல்லும் கதிரவனே! நீ வருவது பகற்பொழுது என்று வரையறை வைத்துள்ளாய். நீ வந்தவுடன் புறங்காட்டி ஓடி விடுகிறாய். திசைகளில் மாறி மாறி வருகின்றாய். மலையிலே போய் ஒளிந்து கொள்கிறாய். அகன்ற வானத்திலே பல் கதிர் பரப்பி ஒளி வீசினாலும் பகற்பொழுது மட்டும் தானே இருக்கின்றாய்.
ஆனால் , எம் அரசனாகிய சேரலாதனோ உலகத்து அரசர்கள் அனைவராலும் போற்றி வணங்கப்படுகின்றான். இந்நிலவுலகம் முழுவதும் தான் ஒருவனே ஆள வேண்டும் என்ற இன்பத்தை விரும்புகின்றான். இப்பூமி அனைத்து அரசர்களுக்கும் பொதுவானது என்ற சொல்லைக் கூட பொறுக்க முடியாதவன்.தன் நாட்டைச் சிறிது என்று எண்ணி விரிவுபடுத்தும் முயற்சியுடையவன். சோம்பலில்லாத உள்ளம் படைத்தவன். பொருளைத் தனக்கென்று பாதுகாக்காது வேண்டியோருக்கு வழங்கும் கொடைத் தன்மை படைத்தவன். போர் எனின் புறங் கொடுக்காது போரிட்டு வெற்றியைப் பெறும் வல்லமை பெற்றவன். அப்படியிருக்க, நீ எப்படி சேரலாதனுக்கு ஒப்பாவாய்? உன்னால் ஒப்பாக முடியாது என்று கதிரவனிடம் பேசும் கபிலரின் குரலே இப்பாடல்.
சேரலாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டு யாரோ கூறியிருக்க வேண்டும்…அதைக் கேட்ட கபிலருக்குச் சொன்னவரிடம் நேரடியாக விளக்கம் சொல்ல முடியவில்லை போலும்! சில சமயம் நமக்கு ஏற்படும் சங்கடம் தான் கபிலருக்கும் ஏற்பட்டுள்ளது! பார்த்தார் கபிலர்… சரி யாரிடம் சொல்லலாம் … யாரிடமும் சொல்ல வேண்டாம். இருக்கவே இருக்கிறது கதிரவன்…கதிரவனே நீயே கேள். நீ எப்படி என் மன்னனோடு ஒப்பாவாய்? என்கிறார்.
சேரலாதனைப் பிற அரசர்கள் வந்து வணங்கிச் செல்வர். ஆனால் சூரியனோ பிற கோள்களின் வழியே செல்லும்.
உலகம் முழுதும் தான் ஒருவனே ஆட்சி செய்யும் விருப்பினை உடையவன் சேரலாதன். கதிரவனோ பகல் பொழுது மட்டும் ஆட்சி செய்பவன்.
சேரலாதன் கடந்து அடு தானையன். சூரியனோ நிலவுக்குப் புறம் கொடுத்து ஓடுபவன்.
கதிரவன் திசைகளில் மாறி மாறி வருபவன். மன்னனோ, மாறாத் தன்மையன்.
சூரியன் , தன் கதிர்களை மலையிடத்து மறைப்பான். ஆனால் சேரலாதனோ, தன் பொருளை மறைக்காது வழங்கும் ஈகையுடையவன்.
இயற்கையை விஞ்சும் இனிய இயல்பினை உடையவன் சேரமான் என்பதைக் கூறும் கபிலரின் மொழிகள் , காலங்கள் கடந்தும் கருப்பஞ்சாறாய் இனிக்கிறதன்றோ?
புறநானூற்றின் இப்பாடலுக்கு அமெரிக்கத் தமிழறிஞா் ஐயா ஜார்ஜ் கார்ட் அவர்கள் வழங்கியுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு இதோ
Kings who protect the earth praise him and obey him.
He desires his pleasures and will not bear to share domination.
He is driven by the thought that he rules too little land.
His will is unrelenting! He is endlessly generous!
Circle of the sun eternally in movement! How you fail to resemble
Ceralatan with his army that strikes always in open battle!
You only appear in the day! You turn your back to the moon
And leave! You advance from various directions! You vanish
Behind your mountain and hide there till dawn
When glowing you spread your many rays through the enormous sky!
என்றுமுள செந்தமிழின் இனிமையை இன்னும் சுவைப்போம் தொடர்ந்து,,,

Sunday, August 1, 2010

அன்பிற்கும் உண்டோ...?

விளையாட்டாய் ஓடி வந்து
பக்கத்தில் நின்று
ஓரத்தில் கிடந்த வைக்கோலை
ஒரு கை எடுத்து
வாய் அருகில் கொடுத்துவிட்டு
புண்ணாக்குத் தண்ணீரைக்
குடிக்க வைத்தச்
சின்னச் சின்னப் பொழுதுகளை
நினைத்துப் பார்த்து...
மாட்டுத் தரகர் வந்து
கை மீது துணி போட்டு
காசு பேசி உன்னைக்
கூட்டிப் போக வந்தபோது
அழுதழுது தீர்த்தாயே தோழீ!
ஆண்டுகள் நாற்பது கடந்துவிட்டன...
இன்று
என் கையால்
வகை வகையாய் கறி சமைத்து
உண்டு களித்துவிட்டுச் சென்றவர்கள்
உதிர்த்துவிட்ட வார்த்தைகளைக் கேட்டபோது
கண்ணீரைக் காட்டிய
உன் முகம் மட்டும்
வந்து போகிறது அவ்வப்போது!

கோடு

பெண்ணினமே!
விழிப்போடு செயல்படு!
கவர்ச்சியாய் வந்து மயக்கும்
கயவர்களும் இருக்கிறார்கள்
என்பதற்காகத்தான்
சீதை மாயமானைப்
பார்த்த கதை!
சின்னப்பெண்ணே!
சீதைக்கு வந்த கதி
உனக்கும் வரும் !
கோடு போட
இலட்சுமணர்கள் வேண்டாம்!
நீயே போட்டுக் கொள்!
தைரியக் கோடு!