உன்னை உணர்ந்து கொள்-நண்பனே
உலகினைப் புரிந்து கொள்
கனவுகளைச் சுமந்துக்
கல்லறைக்கு வழிதேடியவர்கள்-இன்று
நனவுகளைச் சுமந்துக்
கல் அறையில் வாழ்கிறார்கள்!
முன்னவர் நடந்து போன பாதைகள்-நம்
வன்மைக்கு வழிகாட்டி!
வளமைக்குத் திசைகாட்டி!-நண்பனே
காயங்கள் எல்லாம் உன்
காயத்தைப் பண்படுத்தத்தான்!
பட்டங்கள் பெற்றதெல்லாம்-உங்கள்
பசிக்கு உணவாகவில்லையா?
கஷ்டங்கள் பட்டதெல்லாம்-உந்தன்
களிப்புக்கு வழிதேடவில்லையா?
தோல்விகள் கண்டதெல்லாம்-உங்கள்
வெற்றிக்குத் துணை போகவில்லையா?
துன்பங்கள் வருவதெல்லாம்-உம்மைத்
தூய்மையாக்கத் தான்!
காயங்களெல்லாம் நண்பனே –உன்
காயத்தைப் பண்படுத்தத்தான்!
நல்லதென்றும் தீயதென்றும்
நானிலத்தி்ல் அறியாது
கள்ளமற்ற உள்ளத்தோடு
கடமைகள் செய்ததுண்டா?
பாசத்தை வெளிவேடத்தைப்
பகுத்து அறியாது
பாலெல்லாம் வெண்மையென்று
பாரித்த பான்மையுண்டா?
சருகுகள் உதிர்வதெல்லாம்
வசந்தத்தின் வரவுக்காக!
காரி்யம் முடியும் வரை
கலகலப்பாய் பேசுகின்ற
காரியவாதிகளை-நன்
மேதைகளாய் மதித்ததுண்டா?
அன்பதற்காய் அலைபாய்ந்து-வீண்
வம்பதனை விலையாகப் பெற்றதுண்டா?
காயங்களெல்லாம் நண்பனே- உன்
காயத்தைப் பண்படுத்தத்தான்!
கோலங்கள் மாறினாலும் கொண்ட
குறியதனில் தப்பாது வாழ்ந்துவிடு!
சருகுகள் உதிர்வதெல்லாம்
வசந்தத்தின் வரவுக்காக!
உன்னை உணர்ந்து கொள்!-நண்பனே
உலகினைப் புரிந்து கொள்!
உடம்பதனை வளர்த்துக் கொள்-
உழைப்பதனைப் பெருக்கிக் கொள்!
நன்றென்ற செயல்கள் உன்னால்
நானிலத்தில் மலரட்டும்!
அன்பதனைப் பெருக்கிக் கொள்!
வன்பதனைத் தவிர்த்துக் கொள்!
நன்றியினை மறவாதே!
அன்றதனை நினையாதே!
எழுச்சியான உள்ளத்தோடு –உன்
வளர்ச்சிக்கு வித்திடு!
உன்னை உணர்ந்து கொள் –நண்பனே
உலகினைப் புரிந்து கொள்!
No comments:
Post a Comment