Search This Blog

Tuesday, May 10, 2011

குறிஞ்சிப்பாட்டு அறிமுகம்


குறிஞ்சிப்பாட்டுஅறிமுகம்
        கோல்குறிஞ்சி என்று கொண்டாடப்படும் குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டுள் எட்டாவதாய் அமைந்த நூல். ஆனால் 216 வரிகளுக்குள் எட்டாத சுவையையெல்லாம் எட்ட வைக்கும் நூல். கன்னியும் காளையும் சந்திக்கும் போழ்தில் யாதொரு முன்னறிவிப்புமின்றி ஆரம்பமாகும் அகவாழ்வினையும் அதனை அறவாழ்வாய் மாற்றத் துடிக்கும் தோழியின் உணர்வு துடிப்பினையும் வெளிப்படுத்தும் நூல். பத்துப்பாட்டுள், குறிஞ்சியும் முல்லையும் பாட்டென்று அமைந்தாலும் தொல்பழந் தமிழர்களின் தொன்மை நாகரிகம் முகிழ்த்த குறிஞ்சியே முதலில் வைத்து எண்ணத்தக்கதாய் அமைந்த நூல். அகப்பொருளை மட்டுமே அடிநாதமாக முழுமையாகக் கொண்ட நூல், குறிஞ்சிப்பாட்டுத்தான் என்று சொன்னால் ஐயமும் எழுமோ! ஏனெனில், அது கபிலர் வாய்மொழிந்த (களவு) காதல் மொழியல்லவா? இதனைக் கரத்தற்கும் இடனுண்டோ?
                தமிழ்ச் சான்றோர் அகவாழ்வு நெறிகளைக் களவென்றும் கற்பென்றும் இரு கூறுபடுத்துவர். பிறர் அறியா நிலையில் தலைவன் தலைவியைக் காதலித்தல் களவு என்றும், இருவரும் இல்லற வாழ்வை மேற்கொண்டு வாழ்தல் கற்பென்றும் மொழிவர். தமிழ் மண்ணில் மலர்ந்த அன்புக் காதல் வாழ்வின் அளப்பரிய ஆற்றலை ஆரிய அரசனுக்குக் கபிலர் அறியத்தரும் முயற்சியே குறிஞ்சிப்பாட்டு. தமிழரல்லாத ஆரிய அரசனுக்குத் தமிழரின் களவுமணம் வடமொழி கந்தருவ மணத்திலிருந்து மாறுபட்டது; மறுவில்லாதது; இது அன்பு வாழ்க்கை மட்டுமல்ல; அறவாழ்க்கையும் கூட என்று மொழிவதே குறிஞ்சிப்பாட்டு. களவிலே கலந்த தலைவன் தலைவி வாழ்க்கையைக் கற்பு மணமாக மாற்றும் முயற்சியே குறிஞ்சிப்பாட்டு; நடந்தவை கூறி நடப்பவை நல்லதாக அமைய அறம் நாடும் தோழியின் அக நாட்டமே குறிஞ்சிப்பாட்டு. கட்டமைப்பும், சொல் வளமும், பொருள் நயமும் செறிந்த இப்பாட்டைப் படிப்பவர் நவில்தொறும் நவில்தொறும் இன்புறுதல் இயல்பு.
                குறிஞ்சிப்பாட்டு கூறும் மலர்களின் மணத்தினைப்போல தலைவனும் தலைவியும் களவிலே கலப்பதும், கலந்தவனோடு காலமெல்லாம் அறம் பேணும் இல்வாழ்வு வாழ்தலும் எம் தமிழ்ப் பண்பாட்டின் மணம் மாறா மண் வாசனை என்று சொல்லாமல் சொல்லும் கபிலரின் வாய்மொழிக்குத்தான் ஈடுஇணை வேறெதுவும் உண்டோ?


கபிலர்
                நமக்குக் கிடைத்த சங்க இலக்கியப் பாடல்களில் மிக அதிகமான பாடல்களுக்குச் சொந்தக்காரர் கபிலர். அவர் வடித்த பாடல்கள் அனைத்திலும் காட்சிக் களங்கள், கவிதைத் தளத்தில் சொல்லோவியமாய் சிரித்து நிற்கும்.
                கபிலர் பாடிய அகப்பாடல்கள் 197. நற்றிணை 20, குறுந்தொகை 29, ஐங்குறுநூறு (குறிஞ்சி) 100, பதிற்றுப்பத்து (ஏழாம்பத்து) 10, அகநானூறு 18, புறநானூறு 28, குறிஞ்சிப்பாட்டு 1, கலித்தொகை (குறிஞ்சிக்கலி) 29, இத்துணைப் பாடல்களிலும் குறிஞ்சித்திணை பாடல்கள் மட்டுமே 193 இருக்கின்றன. பாரியின் பறம்புமலை அவருக்குச் சொல்லிய கவிதைகள் இவை; இவை தவிர அகநானூற்றிலே பாலைத்திணையில் ஒரு பாடலும், நற்றிணை முல்லைத்திணையில் ஒரு பாடலும், மருதத்திணையில் ஒரு பாடலும் குறுந்தொகையில் நெய்தல்திணை பாடலொன்றுமாக ஐந்திணைப் பாடல்களையும் பாடி அசத்திய அற்புதக் கவிஞர் அவர். அகம் மட்டும் தான் இவரின் ஆற்றலுக்கும் அகப்படுமா! என்றால் இல்லை என்கிறது சங்க இலக்கியம். புறநானூற்றிலே 28 பாடல்களும், பதிற்றுப்பத்தில் பத்துப்பாடல்களும் என 38 புறப்பாடல்கள் இவருடையன. கபிலர் பாடிய பாடல்கள், இயற்கைக் காட்சிகளை இனிதாய் நமக்கு இன்புறத் தந்தது மட்டுமல்ல; காதலைக் கவித்துவத்தோடு பாடியது மட்டுமல்ல; பண்டைத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டைப் பகன்றது மட்டுமல்ல; சங்க்காலத் தமிழக வரலாற்றை நமக்குத் தந்த வரலாற்று கருவூலங்கள்.
                கபிலரால் பாடப்பெற்ற மன்னர்கள் செல்வக் கடுங்கோ வாழியாதன், அகுதை, அந்துவன், ஆரிய அரசன் பிரகதத்தன், இருங்கோவேள், எவ்வி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், விச்சிக்கோன், பொறையன் போன்றோர். இவர்களைத் தவிர பாரி மகளிர், கழாத்தலையார் மற்றும் பேகனின் மனைவி கண்ணகியும் அவரின் கவிதை வரிகளுக்குள் கால் பதித்தவர்கள்.  கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்து ஏழாம்பத்தில்  சிறப்பித்துப் பாடியதால் அம்மன்னன் இவருக்கு சிறுபுறம் என நூறாயிரம் கானம் (நூறாயிரம் பொற்காசும்) வழங்கினான். நன்றா என்றும் குன்றேறி நின்று கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் என்று ஏழாம்பத்தின் பதிகம் மொழிகிறது.
                சங்ககாலப் புலவர்களில் தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் கபிலர். அருளும் அன்பும் உளத்தூய்மையும் வாய்மையும், பாட்டியற்றும் வன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர். அறவோராய், ஆற்றுவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய் விளங்கியவர் அவர். சங்கச் சான்றோரின் பொய்  புகலாச் செந்நாவால் போற்றிப் புகழப்பட்டவர்.
உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன் என்று நக்கீரனாரும்,
உவலை கூராக் கவலையில் நெஞ்சின்
நனவில் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே
பெருங்குன்றூர் கிழாரும்,
.                     ......தாழாது
செறுத்த செய்யுள் செய்செந்நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
என்று பொருந்தில் இளங்கீரனாரும்,
புலன் அழுக்கற்ற அந்தணாளன்
இரந்து செல்மாக்கட்டு இனியிடன் இன்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்
என்று மாறோக்கத்து நப்பசலையாரும் புகலுவது கபிலரின் மன்னா உலகத்தும் மன்னுகின்ற புகழைப் பெற்ற சீர்மையினையே செப்புகின்றன.
                எவ்வுயிர்க்கும் தண்மை கொண்டு ஒழுகிய அந்தணராகிய இவர் பறம்பு மலைப் பாரியின் முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த அன்புள்ளத்தைக் கேள்வியுற்றார் சும்மாயிருப்பாரா! பறம்பு நாடு சென்று பாரியைக் கண்டார்; உளங்கொண்ட உற்ற நண்பரானார்; பறம்பு நாட்டின் மலை வளம் கண்டு வனப்பில் ஆழ்ந்து குறிஞ்சித் திணைப்பாடல்களும் கொஞ்சும் தமிழில் குழைத்துத் தந்தார். குறிஞ்சிக்கோர் கபிலர் என்று புகழும் அளவிற்கு மலை வளம் அவரின் பாடல்களில் மலையளவு நுழைந்தது.
பாரியின் வளமை போன காலத்தும் உற்ற துணையாகயிருந்து, பாரியின் நல்லுள்ளத்தை எண்ணி எண்ணிச் செம்மாந்து நின்ற உண்மை நண்பர் அவர்; பாரியைப் பற்றி மூவேந்தர்களிடமும் கபிலர் கூறிய சொற்கள், (புறம். 110) இடுக்கண் உடையுழி ஊற்றுக்கோலாய் நின்ற சீரிய தகைமையினைச் சொல்லுவன; பாரியைப் பிரிந்து வாழ முடியாத நிலையில் பாரி மகளிரை அந்தணரிடம் அடைக்கலமாகக் கொடுத்துவிட்டுத் தானும் அவரோடு வருவதாகக் கூறி உயிர்துறக்க முனைகிறார்; உயிர் துறக்கிறார்,  கபிலர் என்றும் மகாகவிஞன். அவர் பெண்ணை ஆற்றங்கரையில் வடக்கிருந்து உயிர் நீத்ததாகவும் நெருப்பில் புகுந்து இறந்ததாகவும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர் (திருக்கோவிலூர் கல்வெட்டு, செந்தமிழ் தொகுதி. 4;. 232 ஆம் பக்கம்).
                தம் மனம் ஒன்றிய பாரியோடு மலை வளம் நுகர்ந்து, மலையும் மலை சார்ந்து வளர்ந்த மரங்களும், மலர்ந்த மலர்களும் இத்துணையா என்று நம்மையும் மலைக்க வைத்த கபிலரின் இயற்கை பற்றிய நுண்ணறிவை விஞ்சுதற்கும் ஒருவருண்டோ? மலை உள்ளளவும் தமிழ் உள்ளளவும் கபிலரும் வாழ்வார். அவர் தம் இலக்கியங்களும் தமிழரை வாழ்விக்கும்.
பொருட்சுருக்கம்
குறிஞ்சிப்பாட்டு எனும் பண்பாட்டு காதல் நாடகத்தை நடத்திச் செல்லும் சக்தியாக விளங்குபவள்  தோழி.
                        தலைவனைக்  கண்ட நாள் முதலாய் தலைவியின் உள்ள வாட்டம் உடல் வாட்டமாய் மாற, இதுகண்ட செவிலியும் மனம் கொண்ட மகளின் மாற்றம் அறிய மற்றோரை வினவுகின்றாள். தெய்வம் வேண்டிப் பரவுகின்றாள்; நோய் தீர வேண்டுகின்றாள்; பார்க்கின்றாள் தோழி; இது தான் தருணம் என்று நினைக்கின்றாள்; தலைவியின் அல்லலை அன்னையிடம் அமைதியாகச் சொல்லுகின்றாள். அன்னையின் மனம் அரற்றாது, ஆர்ப்பரிக்காது, வெதும்பாது விம்பாது இருக்க எப்படி எப்படி கூற வேண்டுமோ, அப்படி மெல்ல மெல்ல வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் ஏற்றுகின்றாள்; நான் சொல்லுவது கசப்பான உண்மை. கேட்டதும் உனக்குக் கோபம் வரும்; ஆனால் சினத்தைப் பொறுத்துக் கொள் அம்மாஎன்கின்றாள். கேளுங்களேன் அவளின் சொல் நாடகத்தை...
                அம்மா நீயும் தலைவியின் நோய்க்குக் காரணம் புரியாமல் வருந்துகின்றாய். தலைவியோ உள்ளத் துயரை உரைக்க முடியாமல் உழலுகின்றாள். நானும் தலைவியிடம் கேட்டேன். அவளும் சொன்னாள்; நான் தலைவனோடு கொண்ட காதலை வெளியிட்டால் நம் குடிக்கு பழி ஏற்படுமோ? மனதிலே நினைத்தவனை ஊரறிய மணம் செய்து கொடுக்கவில்லையானால், மறுபிறவியிலேனும் அவனும் நானும் ஒன்று சேருவோம்என்று கூறி கண் கலங்கினாள். நானும் உன்னிடம் சொல்ல அஞ்சுகின்றேன். எனினும் உன் சம்மதமில்லாமல் நாங்கள் தேர்ந்தெடுத்த ஏமம் சால் அருவினையாகிய இச்செயலைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.
                தினைப்புனம் காப்பதற்கு எம்மை அனுப்பினாய். நாங்களும் தினைப்புனம் காவலை ஒழுங்காகச் செய்தோம். உச்சிப்பொழுதில் அருவியில் ஆடினோம். பல மலர்களைத் தேடிப் பிடித்து பறித்து வந்து பாறையில் குவித்துத் தழையாடை தொடுத்தோம். தலையிலே சூடினோம். இப்படியாக அசோக மர நிழலில் இளைப்பாறி இருந்தோம். காளையொருவன் வந்தான்; கண்கவரும் வனப்பினன்; கையிலே வில்; காலிலே கழல்; அவனோடு வேட்டை நாய்களும் வந்தன; அவை கண்டு அஞ்சி வேற்றிடம் செல்ல முனைந்தோம்; எம்மருகில் வந்தான் அவன்; இன்சொல் பேசி எம் மெல்லியல்பு புகழ்ந்தான்; எம்மிடமிருந்து தப்பிச் சென்ற விலங்குகள் திசை தப்பி இவ்விடம் வந்தனவோ என்று வினாவினான். நாங்கள் அமைதியாக இருந்தாம்; தப்பிப்போனதின் தடம் காட்டாவிடினும் மறுமொழியேனும் பேசக் கூடாதா என்றான். அந்நேரம் கானவர் விரட்டிய யானை ஒன்று எம்மை நோக்கி ஓடி வந்தது. நாங்களும் பயந்து, மயில் போல் நடுங்கி அவன் பக்கலில் நெருங்கினோம். அவனோ, யானையின் மேல் அம்பெய்தான். அம்பு தைத்த யானை  வந்தவழி பார்த்து போயிற்று.
                யானை போனாலும் எம் நடுக்கம் தீரவில்லை. நடுக்கத்துடன் நின்றிருந்தோம். அவன் தலைவியைப் பார்த்து, பயப்படாதே, உன் அழகை நுகர்வேன்என்றான். என்னையும் நோக்கி முறுவலித்தான். தலைவியைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். உன்னை என் இல்லக்கிழத்தியாக ஏற்றுக் கொள்வேன் பிரிதலும் இலேன் என்று கூறி மலையுறை தெய்வத்தின் முன்னிலையில் தலைவியிடம் உறுதியளித்தான். அருவி நீரை அள்ளிப் பருகி ஆணையிட்டான்.
                மாலை நேரமும் வந்தது. இருவரும் பிரிய வேண்டிய கட்டாயம், தன்னைப் பிரிதற்குத் தலைவி வருந்துவாள் என்பது தலைவனுக்கும் தெரியும். அதனால் சில நாட்களிலே உன்னை நாடறிய மணம் செய்வேன். அதுவரை பொறுத்திரு என்று ஆறுதல் சொல்லி ஆற்றுவித்தான். அவன் உயர்குடி பிறந்தவன்; வாய்மை தவறாதவன்; தலைவியை மணந்து கொள்ளும் விருப்பமுடையவன்; இத்தகு நல்லியல்பினனாகிய தலைவன், எம்மைப் பிரிய மனமின்றி நம் ஊருணிக்கரை வரை வந்தான்; பின்னர் அகலா காதலோடு அகன்று சென்றான். அதுநாள் முதல் தலைவியைக் காண இரவிலே வருகின்றான். அவன் இரவில் வரும் ஏதம் எண்ணி இவளும் (தலைவியும்) கலங்குகின்றாள். இதுதான் அவள் நோய் என்று உண்மை உரைத்தாள் தோழி! இதுவே குறிஞ்சிக் காதலின் கரவிலா மணம்; தமிழர் தம் பண்பாட்டின் தகவுடை குணம்.

                          
                           



No comments:

Post a Comment