Search This Blog

Sunday, May 15, 2011

குறிஞ்சிப்பாட்டு மூலமும் எளிய உரையும்(107-168)


 தலைவனின் எழில்

எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்
தண்ணறுந் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல்உளர்ப்பு அவிழா
காழகில் அம்புகை கொளீஇ, யாழிசை
அணிமிகு வரிமிஞிறு ஆர்ப்பத் தேங்கலந்து
மணிநிறம் கொண்ட மாஇருங் குஞ்சியின்
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ண வண்ணத்த மலர்ஆய்பு விரைஇய
தண்ணறுந் தொடையல் வெண்போழ்க் கண்ணி
நலம்பெறு சென்னி நாம்உற மிலைச்சி                (107-116)

(-ள்)(தலைவன்) எண்ணெய் தடவிய சுருண்டு வளர்ந்த தலைமயிரில் மணம்வீசும் அகில்,சந்தனம் போன்றவற்றையும் மணம் தரும் குளிர்ச்சியான மயிர்ச்சாந்தினையும் மணக்கப் பூசியிருந்தான். தலைமயிரின் ஈரம் உலர விரலாலே தலைமயிரை ஆற்றி, பாகமாக்கிச் சிக்கெடுத்து கரிய அகிலையிட்டு உண்டாக்கிய புகையினையும் அதில் ஊட்டியிருந்தான். யாழிசை போன்று வண்டுகள் ஒலிக்குமாறு , அவன் தலைமயிரில் மணம் கலந்திருந்தது. நீலமணி போன்ற நிறத்தையுடைய பெரிய கரிய தலைமயிரில் மலையில் உள்ளனவும் நிலத்தில் உள்ளனவும் அரும்பாக உள்ளனவும் நீர்ச்சுனையில் பூத்தனவுமாகிய பல்வேறு வண்ணம், குணம் கொண்ட மலர்களையும் ஆராய்ந்து கலந்து குளிர்ச்சியான மணம் வீசும் மாலையாக்கி அணிந்திருந்தான்.  அதனோடு வெண்தாழை மடலாலான மாலையினையும் கண்டவர் அஞ்சுமாறு அழகுபெற தலையில் சூடியிருந்தான்.
                                               
சொற்பொருள் விளக்கம் : எண்ணெய் நீவியஎண்ணெய் தடவிய, பூசிய, சுரி வளர்சுருண்ட வளர்ந்த, நறும் காழ்- மணம் தரும் அகில், சந்தனம் முதலியன, தண் நறும் தகரம்குளிர்ந்த நறுமணம்  மயிர்ச்சாந்து (கூந்தற்கிடும் வாசனைச் சாந்து. சிலப்பதிகாரம். 14, 117 உரை), மதுரைக்காஞ்சி. 552 உரை), கமழ மணக்க, மண்ணி பூசி, கழுவி, ஈரம் புலரஈரம் உலர, விரல் உளர்ப்பு விரலாலே தலைமயிரை ஆற்றி, அவிழா பாகமாக்கி சிக்கெடுத்து, காழ் அகில் அம்புகை கரிய/மிகுதியான, அகிலில் இட்ட அழகிய புகை, கொளீஇகொள்ளச் செய்து, யாழ் இசை யாழின் இசையைப் போன்று, அணி மிகு வரிஅழகுமிக்க பாட்டினை, மிஞிறு வண்டுகள், ஆர்ப்பஒலிக்க, தேம்கலந்து மணம் கலந்து, மணி நிறம் கொண்ட நீலமணியின் நிறத்தைக்கொண்ட, மாஇரு குஞ்சியின்பெரிய கரிய தலை மயிரினையுடைய, மலையவும் மலையில் உள்ளலையும், நிலத்தவும் நிலத்தில் உள்ளவையும், சினையவும் கிளைகளில் அரும்பாக உள்ளவையும், சுனையவும்நீர்ச்சுனையில் (மலை ஊற்று) பூத்தனவும், வண்ண வண்ணத்த மலர்பல்வேறு வண்ணம்; குணம் கொண்ட மலர்களை - ஆய்பு ஆராய்ந்து, விரைஇய கலந்து, தண் நறும் தொடையல் குளிர்ச்சியான மணம் வீசும் மாலையினையும், வெள் போழ் கண்ணிவெண்மையான தாழைமடலாலாகிய மாலையினையும் (அணிந்து), நலம் பெற சென்னிஅழகு பெற தலையில், நாம் உற அச்சம் கொள்ளுமாறு (போம் நாம், உரும் என வரூஉம் கிளவி, ஆமுறை மூன்றும் அச்சப் பொருள் தொல். உரியியல். 25) மிலைச்சி - சூடி,

பைங்கால் பித்திகத்து ஆய்இதழ் அலரி
அம்தொடி ஒருகால் வளைஇச்செந்தீ
ஒண்பூம் பிண்டி ஒருகாது செரீஇ
அம்தளிர்க் குவவுமொய்ம்பு அலைப்பச் சாந்தருந்தி
மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்றுபடு நறுந்தார் பூணொடு பொலிய
செம்பொறிக்கு ஏற்ற வீங்குஇறைத் தடக்கையின்
வண்ண வரிவில் ஏந்தி அம்புதெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்குஅறக் கட்டி
இயல்அணிப் பொலிந்த ,ஈகை வான்கழல்
துயல்வருந் தோறும் திருந்தடிக் கலாவ,   (117-127)

(-ள்) பசுமையான காம்பினையுடைய பிச்சியின் அழகிய இதழ்களோடு  அமைந்த பூவினாலான மாலையினையும் தலையில் வளைத்துச் சூடி, சிவந்த தீயைப் போன்ற நிறமுடைய அசோகத் தளிரினைக் காதில் செருகியிருந்தான்; அழகிய அத்தளிர் அவனின் திரண்ட தோளில் அசைந்து கொண்டிருந்தது.சந்தனம் பூசியிருந்த வலிமை தங்கிய அவனின் அழகிய மார்பில் தொன்றுதொட்டு தொங்குகின்ற மணமிக்க மாலையினோடு அணிகலன்களும் விளங்கின.  சிவந்த இரேகைகளையுடைய உள்ளங்கைக்குப் பொருந்திய இறுகிய பருத்த முன்கையினையுடைய பெரிய கைகளில் அழகிய கட்டமைந்த வில்லை ஏந்தியிருந்தான். அம்புகளை ஆராய்ந்து நுண்ணிய வேலைப்பாடமைந்த துணியினால் அசைவு இல்லாதவாறு பிணித்திருந்தான். இயல்பான அழகோடு விளங்குகின்ற பொன்னாலான சிறப்புப் பொருந்திய கழல், பாதத்தினை அடிபெயர்த்து  வரும்பொழுதெல்லாம் ஏறி இறங்கி அசைந்தன.
சொற்பொருள் விளக்கம் : பைங்கால் பித்திகத்து பசுமையான காம்பினையுடைய பிச்சியின், ஆய் இதழ் அலரி அழகிய இதழோடு கூடிய பூவினால், அம்தொடிஅழகிய பூங்கொத்தினை, ஒருகாழ் ஒரு சரத்தினை (பூமாலை) வளைஇதலையில் வளைத்துச் சூடி, செந்தீ சிவந்த தீயைப் போன்ற, ஒண்ஒளி வீசும், பூம் பிண்டி அசோகரை, ஒருகாது செரீஇ ஒரு காதிலே செருகி, அம் தளிர்அழகிய அத்தளிர்,  குவவுதிரண்ட, மொய்ம்பு தோள் (பூந்தாது மொய்ம்பினவாக. கலித். 88), அலைப்பஅசைய, சாந்து அருந்தி சாந்தினை பூசி, மைந்து இறை கொண்ட வலிமை தங்கிய, மலர்ந்து ஏந்து (ஏந்திழை பு.வெ.4.24) அகலத்து பரந்த அழகிய மார்பில், தொன்றுதொன்று தொட்டு, படு - தொங்குகின்ற (படுமணி திருமுருகு. 80), நறுந்தார் மணம்மிக்க மாலையினை, பூணொடு பொலிய அணிகலன்களோடு விளங்க, (பொலிந்த சாந்தமொடு பதிற்றுப்பத்து. 88.30), செம்பொறிக்கு ஏற்ற சிவந்த (பொறிஇரேகை (பிங்.) இரேகைகளையுடைய உள்ளங்கைக்குப் பொருந்திய, வீங்குஇறுகிய பருத்த, இறைமுன்கை, தடக்கையின் பெரிய கையினையும், (தாடோய் தடக்கை (புறநா. 14.11), வண்ண வரி வில் ஏந்தி அழகிய கட்டமைந்த வில்லை ஏந்தி, அம்பு – (வரிசிலை (பு.வெ.1.16) வண்ணமும் துணையும் (குறிஞ்சி. 31) குணம் வண்ண வண்ணத்த மலர்இனம்), தெரிந்துஅம்புகளை ஆராய்ந்து, நுண்வினை கச்சை நுண்ணிய வேலைப்பாடமைந்த துணியினால், தயக்கு அறஅசைவு இல்லாதவாறு, கட்டிபிணைத்து, இயல் அணிப் பொலிந்தஇயல்பான அழகோடு விளங்குகின்ற, ஈகை வான் கழல்பொன்னாலான அழகிய சிறப்புப் பொருந்திய அழகிய கழல், துயல் வருந்தொறும் அசைந்து வரும்பொழுதெல்லாம், திருந்தடி- அழகுற அமைந்த, அடி -பாதம், கலாவபின்ன,
                                     
                        வந்தன நாய்கள்

முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்
பகைபுறங் கண்ட பல்வேல் இளைஞரின்
உரவுச்சினம் செருக்கித் துன்னுதொறும் வெகுளும்
முளைவாள் எயிற்ற வள்உகிர் ஞமலி
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவனம் எழுந்து நல்லடி தளர்ந்துயாம்
இடும்பைகூர் மனத்தேம் மருண்டுபுலம் படர        (128-134)
 (-ள்)பகைவரின் இடங்களைப்  பாழ் செய்யும், நெருங்குதற்கரிய வலிமையும், பகைவர்களைப் புறமுதுகிட்டோடச் செய்யும்   பல வேலினையுடைய இளைஞரைப் போன்று, மிகுந்த சினத்தோடு, செருக்குற்று நெருங்கியபோதெல்லாம், சினக்கின்ற மூங்கில் போலும் வெண்மையும் வாள்போலும் கூர்மையுமாகிய பற்களும்,கூர்மையான நகங்களையுமுடைய நாய்கள், இமையாக் கண்களோடு எங்களை வளைத்து நெருங்கி வந்தன;அதைக் கண்டு நடுங்கினோம்;  இருந்த இடத்திலிருந்து எழுந்தோம்; விரைந்து செல்ல அடி எடுத்து வைக்க முடியாது தளர்ந்தோம்;வருத்தம் மிகுதியாகக் கொண்ட மனத்தோடு,  என்ன செய்வதென்று தெரியாமல் மயங்கினோம்; வேற்றிடம் நோக்கிச் செல்ல முனைந்தோம்,
சொற்பொருள் விளக்கம் : முனைபாழ் படுக்கும் பகை புலத்தைப் பாழ் செய்யும், துன் அரும் துப்பின் நெருங்குதற்கரிய வலிமையும், பகைப் புறம் கண்ட பகைவர்களைப் புறத்தினைக் கண்ட, பல்வேல் இளைஞரின் பல வேலினையுடைய இளைஞரைப் போன்று, உரவுச்சினம் மிகுந்த சினத்தோடு, செருக்கிசெருக்குற்று, துன்றுந்தொறும்நெருங்கியபோதெல்லாம், வெகுளும் சினக்கும், முளைவாள் எயிற்ற முளைபோலும் வெண்மையும் வாள்போலும் கூர்மையுமாகிய பற்கள், வள் உகிர் ஞமலி கூர்மையான நகங்களை உடைய ஞமலி, திளையாக் கண்ண வளைகுபு நெரிதர இமையாக் கண்களொடு வளைந்து நெருங்கி வர, நடுங்குவனம் நடுங்கினோம், எழுந்து இருந்த இடத்திலிருந்து எழுந்து, நல்லடி தளர்ந்துவிரைந்து செல்ல முடியாமல் அடி எடுத்து வைக்க முடியாது தளர்ந்து, யாம் இடும்பைகூர் மனத்தேம் வருத்தம் மிகுதியாகக் கொண்ட மனத்தோடு, மருண்டுஎன்ன செய்வதென்று தெரியாமல் மயங்கி, புலம் படரவேற்றிடம் நோக்கிச் செல்ல,
                 
 நாய்களை அடக்கிக் கெடுதி வினவிய     தலைவன்

மாறுபொருது ஓட்டிய புகல்வின் வேறுபுலத்து
ஆகாண் விடையின் அணிபெற வந்துஎம்
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி
மெல்லிய இனிய மேவரக் கிளந்துஎம்
ஐம்பால் ஆய்கவின் ஏத்தி ஒண்தொடி
அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி
மடமதர் மழைக்கண் இனையீர் இறந்த
கெடுதியும் உடையேன்  என்றனன் -------  (135-142)
(-ள்)அப்போது தன்னைப்  பகைத்தவற்றைத் தாக்கி விரட்டிய ஏறானது, வேற்றிடத்திலுள்ள புதிய பசுவினைக் காண்பது போல எம்மிடம் வந்தான் அவன். எங்கள் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்டு தானும் அதற்கு அஞ்சினான். நாங்கள் அச்சத்திலிருந்து விடுபடும்வகையில் இனிமையாக மென்மையாகப் பேசினான். எம் ஐம்பால் கூந்தலையும்   மென்மையான  அழகினையும் பாராட்டினான். ஒளிமிக்க வளையல், அசைகின்ற மெல்லிய சாயல், வளைந்திருக்கும் கொப்பூழ், மடப்பம் பொருந்திய செழித்த குளிர்ச்சியான கண்கள் இவற்றையும் பாராட்டினான்.பின்பு, இளையவர்களே!  என்னிடமிருந்து தப்பிச் சென்ற விலங்கொன்று இந்த வழி போனதோ? என்றான்.

சொற்பொருள் விளக்கம் : மாறுபொருது ஓட்டிய பகைத்தவற்றைத் தாக்கி விரட்டி, புகல்வின்ஏறானது, வேறுபுலத்துதான் முன்பறியாத இடத்தில், ஆகாண் பசுவினைக் காணும், விடையின் காளை போன்று, அணிபெற வந்துஅழகோடு எம்மிடம் வந்து, எம் அலமரல் எங்கள் தடுமாற்றத்தை/அச்சத்தை, ஆயிடை அச்சமயத்தில், வெரூஉதல் யாங்கள் அஞ்சுவதற்கு, அஞ்சிதான் அஞ்சி, மெல்லிய இனிய மேவரக் கிளந்துமென்மையாக இனிமையோடு அச்சத்திலிருந்து நீங்கும் வகையில் எமக்குப் பெருவிருப்பம் பொருந்தப் பேசி, எம் ஐம்பால் எம் ஐந்து பிரிவான கூந்தல் பின்னல், ஆய் கவின் ஏத்தி   மென்மையான அழகினைப் பாராட்டி, ஒண்தொடிஒளியுடைய வளையல், அசைமென் சாயல் வருந்தி மெல்லிய சாயலினையும், அவ்வாங்கு உந்தி அழகாய் வளைந்த கொப்பூழ், மடமதர் மழைக்கண் வளைந்த அழகிய குளிர்ச்சியான கண்கள், இனையீர் இளையர்களே, இறந்த கெடுதியும் உடையேன்-தப்பிச் சென்ற விலங்கினை வினவுதலும் உடையேன்.(தொல்காப்பிய களவியலில்கெடுதி வினவல்என்ற துறை உண்டு. தொல்.களவியல்.நூ.99)
      
 நங்கையின் சொல்லை எதிர்பார்த்து நின்றான் நாயகன்
-------- ---------- -----------       அதன்எதிர்
சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கிக்
கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லியலீர்என
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கைகவர் நரம்பின் இம்மென இமிரும்
மாதர் வண்டொடு சுரும்புநயந் திறுத்த
தாதுஅவிழ் அலரித் தாசினை பிளந்து
கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்துஎம்
சொல்லற் பாணி நின்றனன்.ஆக,      (142-152)
(-ள்)  தலைவன் பேசியதற்கு எதிர்மொழி பேசவில்லை. அதனால் அவனும் துன்புற்று மனம் கலங்கி , ‘மெல்லியலீர்! எம்மிடமிருந்துத் தப்பிச் சென்ற விலங்கின் இடத்தைக் காட்டாவிட்டாலும் என்னோடு பேசுதல்கூட குற்றமோ?’ என்றான்.பின்னர் நட்டராகம் என்னும் பாலைப் பண்ணை வாசித்தலில் சிறந்த பாலை யாழை வாசிப்போன் கைகளால் இழுத்து உண்டாக்கிய ஓசை போன்று ஒலி எழுப்புகின்ற பெண் வண்டோடு அமர்ந்த சுரும்புகளும் விரும்பி மொய்த்திருந்த பூந்தாது அவிழ்ந்த பூக்களையுடைய வலிய மரக்கிளையை முறித்தான். யானைப்பாகனின் பரிக்கோலினை எதிர்க்கும் களிற்றைப் போல பெருமையோடு நாய்களை அடக்கினான். நாய்களின் கூட்டம் எழுப்பிய கல் என்ற மிகுந்த ஒலியை அடக்கியபின், நாங்கள் அவனோடு பேசும் நேரத்தை எதிர்பார்த்து நின்றான்.
சொற்பொருள் விளக்கம் : அதன் எதிர் சொல்லேம் ஆதலின் அவன் பேசியதற்கு எதிர்மொழி பேசவில்லை. அதனால், அல்லாந்து கலங்கிதுன்புற்று, மனம் குழம்பி,கெடுதியும் விடீஇர் ஆயின்   நீங்கிய விலங்கின் இடத்தை காட்டித் தரவில்லை என்றாலும், எம்மோடு என்னோடு, சொல்லலும் பேசுதலும், பழியோ குற்றமோ? மெல்லியலீர்மென்மையான இயல்புடைய பெண்களே! என என்று, நைவளம் பழுநிய பாலை வல்லோன் நைவளம் (நட்டபாடை) என்னும் பண் முற்றிலும் அமைந்த பாலை யாழை இயக்க வல்லவன், கைகவர் நரம்பின் கை விரும்பி மீட்டும் நரம்பிலிருந்து எழும் ஓசை போல, இம்மென இமிரும் இம் என்று ஒலிக்கும், மாதர் வண்டொடு பெண் வண்டோடு, சுரும்பு நயந்து இறுத்த ஆண் வண்டு (புணர்ச்சியை) விரும்பித் தங்கிய, தாது அவிழ்பூந்தாது அவிழ்ந்த, அலரிபூக்களை, தாசினை வலிய மரக்கிளை (தாவே வலியும் வருத்தமுமாகும். தொல். சொல். 344), பிளந்து முறித்து, தாறுஅடு களிற்றின் – (யானைப்பாகன்) பரிக்கோலை எதிர்க்கும் களிறுபோல, வீறுபெற ஓச்சிபெருமையுண்டாகுமாறு ஓட்டி, கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்து – ‘கல்என்ற ஓசையிட்ட நாய்களின் சுற்றம் எழுப்பிய மிகுந்த ஒலியை அடக்கி, எம் சொல்லற் பாணி யாம் பதில் சொல்லும் காலத்தை, செவ்வியை (எதிர்பார்த்து), நின்றனன்நின்றான், ஆகஅவ்வாறு நின்றபோது,
                 
புனம் வந்த சின யானை;  நடுங்கிய நங்கையர்

இருவி வேய்ந்த குறுங்கால் குரம்பைப்
பிணைஏர் நோக்கின் மனையோள் மடுப்ப,
தேம்பிழி தேறல் மாந்தி மகிழ்சிறந்து
சேமம் மடிந்த பொழுதின் வாய்மடுத்து
இரும்புனம் நிழத்தலின் சிறுமை நோனாது
அரவுஉறழ் அம்சிலை கொளீஇ நோய்மிக்கு
உரவுச்சின முன்பால் உடல்சினம் செருக்கிக்
கணைவிடு புடையூக் கானம் கல்லென
மடிவிடு வீளையர் வெடிபடுத்து எதிரக்
கார்ப்பெயல் உருமிற் பிளிறிச் சீர்த்தக
இரும்பிணர்த் தடக்கை இருநிலம் சேர்த்திச்
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்வுஇடம் அறியேம் ஆகி ஒய்யென
திருந்துகோல் எல்வளை தெழிப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்துஅவற் பொருந்திச்
சூர்உறு மஞ்ஞையின் நடுங்க                (153-169)

(இ-ள்)     தினைத் தாளால் வேயப்பெற்ற குறுகிய கால்களையுடையது கானவரின் குடிசை.  அங்கே இருந்த கானவனின் மனைவி, பெண்மானைப் போன்ற மருண்ட நோக்கினையுடையள்; அவள் கள்ளின் தெளிவினைக் கானவனுக்குக் கொடுத்தாள். இதனை உண்ட கானவன் மகிழ்ச்சியால் தன் காவல் தொழிலை மறந்தான். அந்நேரம், தினைப்புனத்தில் யானை புகுந்து தினைக்கதிர்களைத் தின்று தீர்த்தது. சிறிதே எஞ்சியது. அதற்காக வருந்தினன். பாம்பு போன்ற அழகிய தன் வில்லை ஏந்தினன்; மிகுந்த கோபத்துடன், உள்ள வலியோடு உடல் வலிமையும் ஒருசேர அம்பினை எய்தான். கல் என்ற ஒலியுடன் வாயை மடித்து சீழ்க்கை ஒலி ஒழுப்பினான்; மிகுந்த ஒலியினை எழுப்பி யானையை எதிர்சென்று விரட்டினான். அதுவும் கார்காலத்து மழையின்போது தோன்றும் இடிபோல முழங்கி கரிய சருச்சரையுடைய பெரிய கைகளை, நிலத்தோடு சேர்த்து அடித்துப் புடைத்தது; மதத்தன்மையோடு, செருக்கி மரக்கொம்புகளை அழித்தது; மன மயக்கம் கொண்ட அவ்யானை கூற்றுவனைப் போல எதிரே வந்தது. அந்நேரம் அதனிடமிருந்து தப்பித்து எங்கே செல்வது என்று அறியாதிருந்தோம். எம் அழகுபெற அமைந்த வளையல் ஒலிப்ப நாணத்தை மறந்து நடுக்குற்ற மனத்தோடு  விரைந்து சென்று அவனைப் பொருந்தினோம். தெய்வமேறின மயில்போல் நடுங்கி நின்றோம்.

சொற்பொருள் விளக்கம் : இருவி வேய்ந்ததினைத்தாளால் வேயப்பட்ட, குறுங்கால்குட்டையான கால்களையுடைய, குரம்பைகுடிசையில், பிணைஏர் நோக்கின்பெண்மானின் அழகிய நோக்கினையுடைய, மனையோள்மனைவி, மடுப்பஉண்ணக் கொடுத்த, தேம்பிழிதேனிலிருந்து பிழிந்த  இனிய, தேறல்கள்ளின் தெளிவு, மாந்திகுடித்து,  மகிழ்சிறந்துமகிழ்ச்சி மிகுந்து, சேமம்காவல், மடிந்த பொழுதில்தூங்கிய பொழுதில், (மன்பதையெல்லாம் மடிந்த விருங்கங்குல் (கலித். 65), வாய் மடுத்துவாயால் தின்று, இரும்புனம் பெரிய தினைப்புனத்தை, நிழத்தலின் அழித்ததால், சிறுமை நோனாது சிறு பகுதி தினையே இருத்தலால் பொறுக்க முடியாது, அரவு உறழ்பாம்பை ஒத்த, அம்சிலை அழகிய வில்லினை, கொளீஇ நாணில் கொண்டு, நோய் மிக்கு – (தினை சுமந்தமையால் உண்டான) வருத்தம் மிக்கு, உரவுச்சினம் முன்பால்மிகுகின்ற சினத்தோடு முன் எம், உடல் சினம் செருக்கிஉடலிலும் சினத்தின் அடையாளங்கள் மிக்கு தோன்ற, கணைவிடுபு அம்பை எய்தும், புடையூபுடைத்தும், கானம் காடு, கல் என கல் எனும் ஓசை கேட்க, மடி விடு வீளையர் வாயை மடித்து விடுகின்ற சீழ்க்கை ஓசையை எழுப்பியவராய், வெடிபடுத்து எதிரமிகுதியான ஓசையை உண்டாக்கி வேழத்தை எதிர்சென்று யானையை விரட்ட, கார்ப் பெயல் உருமின்கார்காலத்து மழையில் பேரிடி முழங்குவதுபோல முழங்குரல் எழுப்பி, பிளிறிமுழங்கி, சீர் தக பெருமைக்குத் தக்கவாறு, இரும்பிணர்த் தடக்கை கரிய  பெரிய சருச்சரையுடைய கைகளை, இரு நிலம் சேர்த்திபெரிய நிலத்தோடு அடித்துப் புடைத்து, சினம் திகழ் கடாம் -  சினம் விளங்கும் மதத்தன்மையோடு, செருக்கி மிக்க மகிழ்ச்சியோடு, மரம் கொல்புமரங்களை அழித்து, மையல் வேழம் மனமயக்கம் கொண்ட கல்வேழம், மடங்கலின் கூற்றுவனைப் போல, எதிர்தர எதிரே வர, உய்விடம் அறியேம் ஆகிபிழைப்பதற்குரிய இடம் (எங்கே செல்வது என்று) அறியாத, ஒய் என விரைந்து (ஒலிக்குறிப்புச்சொல்), திருந்துகோல் எல்வளை தெழிப்ப திரு அழகுபெற அணிந்துள்ள திரட்சியான ஒளிபொருந்திய வளையல் ஒலிப்ப, நாணு மறந்து நாணத்தை மறந்து, விதுப்பு உறு மனத்தேம் நடுக்கமுற்ற மனத்தோடு நாங்கள், விரைந்து அவற் பொருந்திவிரைந்து சென்று அவனைப் பொருந்தி/சேர்ந்து, சூர்உறு மஞ்ஞையின் மேறின மயில்போல், நடுங்கநடுங்கி நிற்க,

No comments:

Post a Comment