Search This Blog

Sunday, May 15, 2011

குறிஞ்சிப்பாட்டு மூலமும் எளிய உரையும்(53-106 வரிகள்)


அருவியில் ஆடிய அரிவையர்
அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு தெள்நீர்
அவிர்துகல் புரையும் அவ்வெள் அருவி
தவிர்வுஇல் வேட்கையேம் தண்டாது ஆடிப்
பளிங்குசொரிவு அன்ன பாய்சுனை குடைவுழி
நளிபடு சிலம்பில் பாயம் ஆடிப்
பொன்எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்தஎம்
பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி
உள்ளகம் சிவந்த கண்ணேம்                  (54-61)
(-ள்) தலைவனுடைய நெடிய மலையுச்சியில் இருந்து வீழ்ந்த தெளிந்த அருவிநீர், வெண்மையானத் துகிலை போன்று இருந்தது. அவ்வெள்ளருவியில் நீங்குதல் இல்லாத வேட்கையோடு தணியாது அருவியில் ஆடினோம். பளிங்கினைச் சொரிவதுபோல, பாய்ந்து வரும் அருவிச் சுனைகளில் குடைந்து ஆடினோம். அவ்வாறு ஆடும்போது, மனம் விரும்பியவாறு பாடல்களைப் பாடினோம். பொன்னில் பதித்த நீலமணி போன்ற எம் சிறிய முதுகுப்புறத்தே தாழ்ந்து கிடக்கின்ற கரிய கூந்தலில் படிந்த நீரினை  பிழிந்து ஈரத்தை உலர்த்தினோம். இவ்வாறு நீரிலே விளையாடியமையால், எம் கண்களின் உள்ளிடமெல்லாம் சிவந்தன.
சொற்பொருள் விளக்கம் : அண்ணல் நெடுங்கோட்டு தலைவனுடைய நெடிய மலை, இழிதருவீழும், தெள்நீர்தெளிந்த நீர், அவிர்துகில் வெண்மையான துகில், புரையும் போன்றிருந்தது, அவ்வெள் அருவிஅந்த வெண்மையான அருவியில், தவிர்வுஇல் நீங்குதல் இல்லாத, வேட்கையேம் வேட்கையோடு, தண்டாது தணியாது, ஆடிப்அருவியில் ஆடி, பளிங்குசொரிவு அன்ன பளிங்கினைச் சொரிவது போல, பாய்சுனை பரந்தசுனை, குடைவுழிகுடைந்து ஆடும்போது, நளிபடு சிலம்பில் செரிந்த மலையிடத்து, பாயம் பாடிப்மனம் விரும்பியவாறு பாடி, பொன்எறி மணியின் பொன்னிலே இட்டுவைத்த நீலமணிபோல, சிறுபுறம் தாழ்ந்தசிறிய முதுகுபுறத்தே தாழ்ந்து கிடந்த, எம் பின்னிருங் கூந்தல் எம் பின்னிய கரிய கூந்தலை, பிழிவனம் பிழிந்தோம், துவரிஈரம் உலர்த்தி, உள்ளகம் சிவந்த உள்ளிடம் சிவந்த, கண்ணேம்கண்களை உடையேம்.

பாறையில் மலர் குவித்த பாவையர்

-----------   ------------  ----------- வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி,தேமா, மணிச்சிகை
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ் கூவிளம்
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான்பூங் குடசம்
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரிமலர் ஆவிரை, வரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம் , திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை பிடவம், சிறுமா ரோடம்,
வாழை வள்ளி நீள்நறு நெய்தல்
தாழை தளவம் முள்தாள் தாமரை
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங் குரலி
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை
அடும்புஅமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக் கத்தி,
ஆரம் காழ்வை கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்
அரக்குவிரிந் தன்ன பருஏர்அம் புழகுடன்
மால்அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல்அறைக் குவைஇ(61-98)
                                       
(-ள்)  வளமையான இதழ்களையுடைய அழகிய செங்காந்தள் மலர், ஆம்பல் மலர், அனிச்ச மலர், ஆம்பல் மலர், குளிர்ச்சியான குளத்திலே பூத்த குவளை மலர், குறிஞ்சி மலர், வெட்சி மலர், செங்கோட்டு வேரி, இனிய கனிகளைத் தரும் மாம்பூ , செம்மணிப்பூ, தனக்கே உரிய மணமும் விரிந்து கொத்தாகவுள்ளதுமாகிய பெரிய மூங்கிற்பூ,வில்வம், தீயின் நிறத்தை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரம், வடவனம், வாகைப்பூ, வெண்ணிறமுடைய வெட்பாலைப்பூ, பஞ்சாய்க்கோரை, வெண்காக்கண மலர், நீலமணி போன்றிருக்கும் கருவிளம்பூ, பயினிப்பூ, வானிப்பூ, பல கொத்துக்களையுடைய குரவ மலர், பச்சிலைப்பூ, மகிழம்பூ, கொத்தாய் மலர்ந்திருக்கும் காயாம்பூ, விரிந்த  பூக்களையுடைய ஆவிரம், சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ, சிறு பூளை,குன்றிப்பூ, முருக்கிலை, மருதப்பூ, விரிந்த பூக்களையுடைய கோங்கமலர், மஞ்சாடிப்பூ, திலக மரத்தின் மலர், தேன் மணக்கும் பாதிரிப்பூ, செருந்தி மலர், புனலி, பெரிய குளிர்ச்சியான சண்பக மலர், கரந்தைப்பூ, காட்டு மல்லிகைப்பூ, மிக்க மணம் வீசும் மாம்பூ, தில்லைப்பூ, பாலைப்பூ, கல்லில் படர்ந்திருக்கும் முல்லைப்பூ, கஞ்சங்குல்லை மலர், பிடவ மலர், செங்கருங்காலி மலர், வாழைப்பூ, வள்ளிப்பூ, நீண்டிருக்கும் மணம் வீசும்  நெய்தற்பூ, தெங்கம்பாளைப்பூ, செம்முல்லைப்பூ,முள்ளினையுடைய தண்டினைக் கொண்ட தாமரைப்பூ , ஞாழல்பூ, முல்லைப்பூ, குளிர்ந்த கொகுடிப்பூ, பவழமல்லிப்பூ, சாதிப்பூ, கருந்தாமக் கொடிப்பூ, கோடல்பூ, தாழைப்பூ, தாது முதிர்ந்து மணம் வீசும் சுரபுன்னைப்பூ, காஞ்சிப்பூ, நீலமணி போலும் கொத்துக்களையுடைய தேன் நாறும்  கருங்குவளைப்பூ,பாங்கர்ப்பூ,  ஓமைப்பூ, மரவப்பூ, பல பூக்களும் நெருங்கியிருக்கும் தணக்கம்பூ, இண்டம்பூ, இலவம்பூ, கொத்தாய் தொங்கும் சுரபுன்னைப்பூ, அடும்பம்பூ, ஆத்திப்பூ, நீண்ட கொடியில் மலரும் அவரைப்பூ, பகன்றைப்பூ, பலாசம்பூ, அசோக மலர், வஞ்சி மலர், பிச்சி மலர், கருநொச்சி மலர், தும்பைப்பூ, துளசிப்பூ, விளக்கின் ஒளி போன்றிருக்கும்  தோன்றிப்பூ, நந்திவட்டப்பூ, நறவம்பூ, மணம் வீசும் புன்னாகம்  பூ, பருத்திப்பூ, பீர்க்கம்பூ, பசுமையான குருக்கத்தி மலர், சந்தன மலர், அகிற்பூ, மிக்க மணத்தினையுடைய பெரிய புன்னைப்பூ, நாரத்தம்பூ, நாகப்பூ, நள்ளிரவிலே  மணம் வீசும் இருவாட்சி மலர், கரிய பெரிய குருந்த மலர், வேங்கை மலர் முதலிய பிற பூக்களையும் சிவப்பு நிறத்தைப் பரப்பி வைத்தாற் போன்றிருக்கும் மிக்க அழகுடைய செம்பூவினையும்  அங்கு இருந்த மிக்க காடு அடர்ந்த பகுதியில் மனமகிழ்ச்சியோடு உலவித் திரிந்து, ஆசையோடு மலர்களைப் பறித்து வந்தோம். மழை பெய்ததால் கழுவி சுத்தம் செய்யப்பெற்ற அகன்ற மலைப்பாறையின் மீது அனைத்துப் பூக்களையும் குவித்து வைத்தோம்.

தழை ஆடை உடுத்து மர நிழலில் தங்கிய மங்கையர்

புள்ளார் இயத்த விலங்குமலைச் சிலம்பின்
வள்உயிர் தெள்விளி இடைஇடைப் பயிற்றிக்
கிள்ளை ஓப்பியும் கிளைஇதழ் பறியாப்
பைவிரி அல்குல் கொய்தழை தைஇப்
பல்வேறு உருவின் அம்குழைச் செயலைத
தாதுபடு தண்ணிழல் இருந்தனம் ஆக,                  (99-106)

(-ள்) குறுக்கிட்டுக் கிடக்கும் பக்க மலையெங்கும் பறவைகளின் ஒலி நிறைந்திருந்தது. அவ்விடத்தே, கூர்மையான ஓசையோடு  தெளிந்த சொற்களை இடைஇடையே கூறி கிளிகளையும் ஓட்டினோம். அதோடு (பாறையில் குவித்து வைத்த மலர்களின் வெளிப்புற இதழ்களைப் பறித்து) பாம்பு படம் எடுத்தாற்போன்ற அல்குலில் கட்டுதற்கு ஏற்ப, தழையாடைக்குத் தக்கவாறு சரி செய்து கட்டி அணிந்து கொண்டோம்.பல்வேறுபட்ட நிறத்தையுடைய மலர்களைக் கொண்டு அழகமைந்த மாலைகளைக் கட்டி, எம் மென்மையான கரிய கொண்டைமுடியில் அழகுறச் சூட்டிக்கொண்டோம். தீப்போன்ற நிறமுடைய அழகிய தளிரைப் பெற்ற அசோகமரத்தின் பூந்தாதுக்கள் உதிர்கின்ற குளிர்ச்சியான நிழலில் இருந்தோம். இருந்தபோது,
சொற்பொருள் விளக்கம்
புள்ளார் இயத்த பறவைகளின் நிறைந்த ஒலி, விலங்குமலைச் சிலம்பின் ஒன்றிற்கொன்று குறுக்கிட்டுக் கிடக்கும் மலைகளின் பக்க மலைகளில், வள்உயிர் தெள்விளி இடைஇடைப் பயிற்றிகூர்மையான ஓசையோடு தெளிந்த சொற்களை  இடைஇடையே கூறி, கிள்ளை ஓப்பியும் கிளிகளை ஓட்டியும், கிளைஇதழ் பறியாமலர்களின் வெளிப்புற இதழ்களைப் பறித்து, பைவிரி அல்குல் பாம்பு படம் எடுத்தாற் போன்ற அல்குல்  (வயிற்றின் அடிப்பகுதி), கொய்தழை தைஇ – (தழை ஆடைக்குத் தகுந்தவாறு அறிந்து சரிசெய்த) கொய்த தழையினை கட்டி உடுத்தி, பல்வேறு உருவின் பல வேறுபட்ட நிறத்தையுடைய, வனப்பமை கோதைஅழகான பொருந்திய மாலைகளை, எம் மெல்இரு முச்சிஎம்முடைய மென்மையான கரிய கொண்டை முடியில், (இவள் போதவிழ் முச்சியூதும் வண்டே (ஐங். 93), கவின் பெற கட்டிஅழகுறச் சூட்டி, எரி அவிர் உருவின்நெருப்பு ஒளிர்கின்ற பிரகாசிக்கும் நிறத்தையுடைய, அம்குழைச் செயலை, அழகிய தளிரையுடைய அசோகின்  தாதுபூந்தாது, படு படுகின்ற (ஒன்றன் மீது ஒன்று கூறுதல்), தண்ணிழல் குளிர்ச்சியான நிழல், இருந்தனம்இருந்தோம், ஆக - அவ்வாறாக,

No comments:

Post a Comment