Search This Blog

Sunday, May 15, 2011

குறிஞ்சிப்பாட்டு மூலமும் எளிய உரையும்(1-53 வரிகள்)


குறிஞ்சிப்பாட்டு                     
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள்நுதல்
ஒலிமென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவருங் கடுநோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்                   
வேறுபல் உருவில் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி       (1-8)
(-ள்) அன்னையே வாழ்வாயாக! நான் சொல்வதை விருப்பத்துடன் கேட்பாயாக! ஒளி  பொருந்திய நெற்றியும் தழைத்த மென்மையான கூந்தலும் உடைய  என் தோழியின் உடலில் அணிந்துள்ள அணிகலன்கள் தளர்வுற்றதைக் கண்டு போக்க முடியாத அரிய கொடுநோய் வந்துற்றதோ என்று வருந்தினாய். ஊரிலே உள்ள பிறரால் அறிய முடியாதவற்றையும் குறியால் உணர்ந்து சொல்லுகின்ற கட்டுவிச்சி, வேலன் போன்றோரிடமும் நோய்க்கானக் காரணத்தைக் கேட்டாய்.பல்வேறு உருவக் கடவுளரை வழிபட்டாய். வாயால் வாழ்த்தியும் பன்னிற மலர்களைத் தூவியும் நறுமணப் பொருட்களால் தூபமிட்டும் சந்தனம் முதலிய மணப்பொருட்களைக் கொண்டும் தலைவியின் நோயினை ஓட்டுவிக்க முயன்றாய். இதனாலும் நோயினைத் தீர்க்க முடியாதது கண்டு மனத்தடுமாற்றம் கொண்டு நீயும் (உன் தோழியாகிய தலைவியின் தாயும்) வருந்துகின்றீர்.
சொற்பொருள் விளக்கம்                  
அன்னாய் வாழி - அன்னையே வாழ்வாயாக, வேண்டு அன்னை - விரும்பிக் கேட்பாயாக, ஒள்நுதல் - ஒளி பொருந்திய நெற்றி, ஒலிமென் கூந்தல்தழைத்த மென்மையான கூந்தல், என் தோழி மேனிஎன் தோழியின் உடல், விறல் இழை -  மிகுதியான அணிகலன்கள், நெகிழ்த்த- தளரச் செய்த, வீவு - தீர்க்க முடியாத, போக்க இயலாத,  அரு கடு நோய்அரிய கொடிய நோய்,  அகலுள் - அகன்ற உள்ளிடம் (ஊர்), ஆங்கண் - அவ்விடத்து, அறியுநர் - பிறரால் அறியவியலாதவற்றையும் குறியால் அறிந்து கூறும் கட்டுவிச்சி, வேலன் போன்றோர், வினாயும்நோய்க்கானக் காரணத்தைக் கேட்டும், பரவியும் - வாயால் வாழ்த்தியும், தொழுதும் - வணங்கியும்,  தூயும் - பன்னிற மலர்களைக் கலந்து தூவியும் வேறுபல் உருவில் - பல்வேறு உருவில் அமைந்த, கடவுட் பேணி - கடவுளை வழிபட்டும், (அமரர்ப் பேணியும்.பட்டினப்பாலை.200), நறையும் - நறும் புகையும், (துகளெழ. கலித்தொகை.101), விரையும் - மணப் பொருட்கள் கொண்டும், ஓச்சியும் - நோயினை ஓட்டுவித்தும், அலவுற்று - மனத் தடுமாற்றம் கொண்டு வேறு எதுவும் செய்தற்கு இல்லையே என்று வருந்தும் நிலை) எய்யா - அறியாமையால்,(எய்யாமையே அறியாமையே. தொல்.உரி.நூ.44)  நீயும் -  நீயும், (நோயுற்ற என் தோழியே அன்றி நீயும், அவளின் அன்னையாகிய உன் தோழியும் என்பது இந்தநீயும்என்பதிலே அடங்கும்) வருந்துதி -  வருந்துகின்றாய்.
தோழியின் சொல்வன்மை
நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்
புள்பி்றர் அறியவும் புலம்புவந்து அலைப்பவும்                   
உள்கரந்து உறையும் உய்யா அரும்படர்
செப்பல் வன்மையின் செறித்துயான் கடவலின்  (9-12)
(-ள்) தலைவியின் நல்ல அழகு கெடுகின்றது. மணமிக்க தோள் மெலிகின்றது. வளையல் கழறுதலால் பிறர் அவளின் நோயினை அறிகின்றனர்.தனிமைத்துயரால் அவளும் வருந்துகின்றாள். அவள் மனத்துள் மறைத்து வைத்திருக்கின்ற தாங்கிக் கொள்ளமுடியாத இந்நோயினை உம்மிடம் சொல்லும் ஆற்றலோடு அவளின் உள்ளக் கருத்தை உள்ளடக்கி நானும் கடமையால் கூறுகிறேன்.
சொற்பொருள் விளக்கம்
நல்கவின் தொலையவும் - நல்ல அழகு கெடவும், நறுந்தோள் நெகிழவும் - மணமிக்க தோள் மெலியவும், புள் - வளையல் (புட்கை போகிய புன்தலை மகாஅர்.மலைபடுகடாம்.253), பிறர் அறியவும் - பிறர் தலைவியின் நோயினை அறியவும், புலம்பு வந்து அலைப்பவும் - தனிமைத் துயரால் வருந்தவும், உள் கரந்து உறையும் - மனத்துள் மறைத்து இருக்கின்ற, உய்யா அரும்படர் - தாங்கிக் கொள்ள முடியாத புதுமையான நோய், (முன்னர் வீவு அரும் கடு நோய் என்றவள் இங்கே உய்யா அரும்படர் என்கிறாள். போக்க முடியாத நோய் அவளுக்குப் பொறுக்க முடியாததாகவும் இருக்கிறது என்று தலைவிக்குள்ள நோயினது கொடுமையின் எல்லையினைக் கோடிட்டுக் காட்டும்  தோழியின் சொல்வன்மை நினைந்து மகிழற்குரியது. அரும்படர் என்ற சொல் புதுமை என்ற பொருளைத் தருகின்றது. தலைவிக்கு வந்திருக்கும் இந்நோய் இதுவரை அவளுக்கு வராத புதுமையான நோய் என்கிறாள்.படர் என்றமை கொடி படர்தல் போல தலைவனின் நினைவும் தலைவியின் உள்ளத்திலேயும் படர்ந்து செல்கின்றது.அவனின் நினைவு இன்னும் படருமே தவிர குறுகுதல் இல்லை என்பதையும் உணர்த்துகின்றாள் தோழி). செப்பல் - சொல்லுதல், வன்மையின் - ஆற்றலோடு, செறித்து - தலைவியின்உள்ளக் கருத்தை உள்ளடக்கி, யான் கடவலின் நான் கடமையால் கூறுகிறேன். (கடவன் பாரி கைவண்மையே.புறநானூறு.106)

அறம் உரைக்கும் தலைவியின் ஆற்றொணாத் துன்பம்
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்                                      
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி                                         
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென
நாம் அறி உறாலின் பழியும் உண்டோ
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென
மான்அமர் நோக்கம் கலங்கிக் கையற்று                                    
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்    (13-26)
(-ள்) முத்தினாலும் மாணிக்கத்தாலும் பொன்னாலும் அதன் அளவிற்கேற்ப செம்மையாச் செய்த அணிகலன்கள் அருந்துவிடின் மீண்டும் பொருத்தி சீர் செய்திட முடியும். ஆனால், சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் குன்றினால் குற்றமற்ற அறிவுடைய பெரியோர்களுக்குக் கூட அதனால் ஏற்பட்ட குற்றத்தை நீங்குமாறு கழுவி புகழை மீண்டும் பழைய நிலைக்கு நிற்கச் செய்தல் என்பது எளிதான செயலன்று என்று, பழைய நூலை அறிந்தோர் கூறுவர்.
                        பெற்றோரின் அவர்தம் மனதிற்கு இயைந்தவனுக்கு மணமுடித்துக் கொடுக்கும் விருப்பமும், என்னுடைய பெண்மையும் ஒருசேர கெடுமாறு பெரிய தேரினையுடைய என் தந்தையின் அறிய காவலைக் கடந்து தலைவனும் நானும் தேர்ந்தெடுத்த மணம் இது என்று, நாம் அறிவுறுத்தினால் பழியும் ஏற்படுமோ?
                        தலைவனுக்கு மணம் செய்துதர இயைந்து வரவில்லை எனின், மறுபிறப்பிலேனும் தலைவனோடு இணைந்து வாழும் வாழ்க்கை நமக்கு இயையும் என்று பொறுத்திருப்பேன் என்று கூறி மானின் (மருண்ட) பார்வை கொண்ட தலைவி, கலக்கமுற்று செய்வதறியாது கண்கலங்கி வருந்தினாள்.
சொற்பொருள் விளக்கம்
முத்தினாலும்- முத்தினாலும், மணியினும் - மாணிக்கத்தினாலும், பொன்னினும் - பொன்னினாலும், அத்துணை - அதன் அளவிற்கேற்றவாறு, நேர் வரும் - செம்மையாகச் செய்த, குரைய - அசைநிலை (AN EXPLETIVE). கலங்கெடின் - அணிகலன் கெட்டுப் போனால், புணரும் - பொருத்தலாம், சால்பும் - சான்றாண்மையும், வியப்பும் - பெருமையும், இயல்பும் - ஒழுக்கமும், குன்றின் - குன்றினால், மாசறக் கழீஇய - குற்றம் நீங்குமாறு கழுவி, வயங்கு புகழ் - விளங்குகின்ற புகழை, அந்நிலை - பழைய நிலையில், நிறுத்தல் - நிற்கச் செய்தல், ஆசு அறு காட்சி - குற்றமற்ற அறிவு, மருள்தீர்ந்த மாசறு காட்சி (குறள். 199), ஐயர்க்கும் - பெரியோர்களுக்கும், அந்நிலை எளிய என்னார் - அந்நிலையை அடைதல் எளியது என்று சொல்லார். தொல்மருங்குபழைய நூலை, அறிஞர்அறிந்தவர், மாதரும்பெற்றோரும் (மனதிற்கு இயைந்தவனுக்கு மணமுடித்துக் கொடுக்கும்) விருப்பமும், மடனும்என் பெண்மைத் தன்மையும், ஓராங்குஒரு சேர, தனப்பகெட, நெடுந்தேர் எந்தைபெரிய தேரினையுடைய என் தந்தையின், அருங்கடிஅரிய காவலை, நீவிநீங்கி, இருவேம் ஆய்ந்ததலைவனும் நானும் தேர்ந்த, மன்றல்மணம், இது என்இது என்று, நாம் அறி உறாலின் நாம் அறிவுறுத்தினால், பழியும் உண்டோ – (புகழே அன்றி) பழி ஏற்படுமோ?, ஆற்றின்மணம் செய்தற்கில்லை, வாரார் ஆயினும் – (இயைந்து) வரவில்லை எனினும்,  ஆற்றபொருத்து, ஏனை உலகத்தும்  - மறுபிறப்பிலும், இயைவதால் நமக்கெனதலைவனோடு இணைந்து வாழும் வாழ்க்கை நமக்குக் கைகூடும் என்று கூறி,  மான்அமர்மானினைப் போன்ற, நோக்கம்பார்வைகொண்ட (மருண்ட நோக்கல்) தலைவி, கலங்கிக்கலக்கமுற்று, கையற்றுசெயலற்று, ஆனா - குறையாத, சிறுமையள்காமநோயுடையவள், இவளும்என் தோழியாகிய தலைவியும், தேம்பும்கண்கலங்கி வருந்தினாள்.

தன்னிலை கூறும் தோழி

இகல்மீக் கடவும் இருபெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலேன்(27-29)
(-ள்) பகை காரணமாக, படைசெலுத்த எண்ணிய இரண்டு பேரரசர்களுக்கு இடையே அவர்களை அமைதிபடுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சான்றோர் போல, நான் உனக்கும் அஞ்சுவேன் தலைவியின் நோய்க்கும் அஞ்சுவேன். இப்படி இரண்டு பெரிய அச்சத்தோடு யானும் தளர்ச்சியுற்று வருந்துகின்றேன்.
சொற்பொருள் விளக்கம்: இகல்மீக் கடவும் பகை மேல் படையைச் செலுத்தும், இருபெரு வேந்தர்இரண்டு பேரரசர்கள், வினையிடை நின்ற அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட, சான்றோர் போலஅறிவுடையோர் போன்று, இருபேர் அச்சமோடு – (உனக்கும் அஞ்சும், தலைவியின் நோய்க்கும் அஞ்சும்) இரு பெரிய அச்சத்தோடு, யானும் ஆற்றலேன்தாங்கமுடியாது வருந்துகின்றேன்.
மாதர் சினம் தணிய தலைவியின் மனம் கூறும் தோழி
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும்
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது
எமியேம் துணிந்த ஏமம்சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீநனி உணரச்
செப்பல் ஆன்றிசின் சினவா தீமோ.                (30-34)
(-ள்) (மகட்கொடை நேர்கின்றபோது) தன் மகளை தலைவனுக்குக் கொடுக்கும்போது, அவனுடைய நிலைபேறுடைய செல்வத்தையும், தலைவனின் குடியும் தன் குடியும் ஒத்தத் தன்மையோடு இருத்தலையும், தலைவனின் குணமும், தலைவியின் குணமும் மற்றும் தலைவனின் சுற்றத்தினரும் நம்மோடு பொருந்துமாற்றை ஒப்பிட்டுப் பார்த்து எண்ணாமல், நாங்கள் மட்டுமே துணிவோடு எமக்குக் காவலாக அமையத்தக்க அறிய மணத்தை நிகழ்த்தினோம். அது நிகழ்ந்த முறையினை, நீ நன்றாக உணரும்படி சொல்லுகின்றேன். கேட்டு சினவாது இருப்பாயோ. (ஐயம் எழுகிறது தோழிக்கு! இயல்புதானே).
சொற்பொருள் விளக்கம் : கொடுப்பின் – (தன்மகளை ஒரு தலைவனுக்கு) கொடுக்கும்போது, நன்கு உடைமையும் நிலைபேருடைய அவன் செல்வத்தையும், குடி நிரல் உடைமையும்தலைவன் குடியும் தம்குடியும் ஒத்தத் தன்மையோடு இருத்தலையும், வண்ணமும் தலைவனின் குணமும் தலைவியின் குணமும், துணையும் தலைவனின் சுற்றத்தினரையும், பொரீஇ பொருந்துமாறு (ஒப்பீட்டுப் பார்த்து), எண்ணாதுஎண்ணாமல், எமியேம் நாங்கள் மட்டும், துணிந்த துணிவோடு, ஏமம்சால் காவலாக மிக்கு அமையத்தக்க, அருவினைஅறிய மணத்தை, நிகழ்ந்த வண்ணம் நிகழ்ந்த முறைபடி, நீநனி உணரநீ நன்றாக உணரும்படி, செப்பல் கூறுதல், ஆன்றிசின் அமைந்தேன், சினவா தீமோ – (கேட்டு) சினவாது இருப்பாயோ.
     தலைவனோடு தலைவிக்கு ஏற்பட்ட தொடர்பின் தொடக்கம்
                தினைப்புனம் காவல்
நெல்கொள் நெடுவெதிர்க்கு அணந்த யானை
முத்துஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப
துய்த்தலை வாங்கிய புனிறுநீர் பெருங்குரல்
நல்கோன் சிறுதினைப் படுபுள் ஓப்பி
எல்பட வருதியர் எனநீ விடுத்தலின்              (35-39)
(-ள்) நெல்லை தன்னிடம் கொண்டதாகிய நீண்டு வளர்ந்த மூங்கிலைத் திண்பதற்காக, மேல்நோக்கித் தன் துதிக்கையை தூக்கிநின்ற யானை, தூக்கிய துதிக்கை வலிக்குமிடத்து, முத்துக்கள் நிறைந்த கொம்பினிடத்தே (தந்தம்) அத்துதிக்கையை இறக்கிப்போடும். அக்காட்சியைப் போல, மென்மையானத் தலைப்பகுதி கொண்ட கதிர் வெளிவந்த வளைந்த பெரிய கதிர்களைக் கொண்ட சிறிய தினையிடத்தே, அதனைத் தின்பதற்காக அங்கு வந்து தங்குகின்ற பறவைகளை ஓட்டி, சூரியன் மறையும் நேரம் வருவீர்களாக! என்று அனுப்பியதால் நாங்களும் சென்றோம்.
சொற்பொருள் விளக்கம் : நெல்கொள் நெல்லை தன்னிடத்தே கொண்ட, நெடுவெதிர்க்குநெடிய மூங்கிலுக்கு, அணந்த யானைஅண்ணாந்து நோக்கிய யானை, முத்துஆர் மருப்பின்முத்துக்கள் நிறைந்த தந்தத்திடையே, இறங்குகை கடுப்பஇறக்கிப்போட்ட தும்பிக்கை போல, துய்மென்மையான, தலை தலைப்பகுதி, வாங்கிய வளைந்த, புனிறுநீர் கதிர் ஈன்ற தன்மையுடைய, பெருங்குரல்பெரிய கதிர்கள், நல்கோடு நன்கு வளைந்த, சிறுதினைப்சிறிய தினை, படுபுள்தங்கிய பறவை, ஓப்பிதுறத்தி, விரட்டி, எல்பட சூரியன் மறையும் நேரம், வருதியர் வருவீர்களாக, எனநீ என்று நீ கூறி, விடுத்தலின் - அனுப்பியதால்

பறவை ஓட்டும் பாவையர்

கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த
புலிஅஞ்சு இதணம் ஏறி அவண
சாரல் சூரல் தகைபெற வலந்த
தழலும் தட்டையும் குளிறும் பிறவும்
கிளிகடி மரபின ஊழ்ஊழ் வாங்கி
உரவுக்கதிர் தெறூஉம் உருப்பவிர் அமயத்து,            (40-45)
(-ள்) ரண் அமைத்தலைச் செய்வோன் (ஆரவாரமிக்க மரத்தின்மேல்) உயரத்தில் உருவாக்கிய புலி அஞ்சுதற்கு காரணமாகிய பரணில் ஏறியிருந்து, அம்மலைச்சாரலில் விளையும் பிரம்பினாலே, அழகுபெற பின்னிய தழல் என்னும் கருவியும், தட்டை என்னும் கருவியும், குளிரு என்னும் கருவியும், கவண் போன்ற பிற கருவிகளையும் கொண்டு, கிளியை ஓட்டும் முறைப்படி எந்தக் கருவியை எப்படி இசைக்க வேண்டுமோ அந்த முறையில் ஓசை எழுப்பி, ஞாயிற்றின் கதிர்கள் எரிகின்ற வெப்பமான உச்சிப்பொழுதிலே நானும் தலைவியும் பறவைகளை ஓட்டிக்கொண்டிருந்தோம்.
சொற்பொருள் விளக்கம் : கலிகெழு ஆரவாரமிக்க, மரமிசை மரத்தின் மேல், சேணோன் இழைத்தபரண் கட்டுவோன் உருவாக்கிய, புலிஅஞ்சு புலி அஞ்சுதற்குக் காரணமான, இதணம்பறன், ஏறி ஏறி, அவண்அவ்விடத்து, சாரல் பக்கமலை, சூரல் பிரம்பால், தகைபெற அழகுபெற, வலந்தபின்னிய, தழலும் தழல் என்னும் கருவியும், தட்டையும் தட்டை என்னும் கருவியும், குளிறும் குளிறு என்னும் கருவியும், பிறவும்பிற கருவிகளும் (இவை அனைத்தும் பறவை ஓட்டும் கருவிகள். தழல் - கையால் சுற்றும்போது ஓசை ஏற்படுத்தும் கருவி. தட்டைமூங்கிலைப் பிளந்து ஓசை எழுப்பும் கருவி. குளிறுமூங்கிலை வீணை போல் தட்டித்தெரித்து ஓசை எழுப்பும் கருவி. பிற கருவி கவண் போன்றன.) கிளிகடி மரபின் கிளியை ஓட்டும் முறையில், ஊழ்ஊழ் எந்தக் கருவியை எப்படி இசைக்கவேண்டுமோ அந்த முறையோடு ஓசை எழுப்பி, வாங்கிகையில் கொண்டு, உரவுக்கதிர் மிகுந்த ஞாயிற்றின் கதிர்கள், தெறூஉம்எரிவதால், உருப்புவெப்பம், அவிர் விளங்கிய, அமயத்து - உச்சிப்பொழுதில்

மழை பொழிந்த நண்பகல் நேரம்
விசும்பு ஆடு பறவை வீழ்பதிப் படர
நிறைஇரும் பெளவம் குறைபட முகந்துகொண்டு
அகல்இரு வானத்து வீசுவளி கலாவலின்
முரசுஅதிர்ந் தன்ன இன்குரல் ஏற்றொடு
நிரைசெலல் நிவப்பின் கொண்மூ மயங்கி
இன்னிசை முரசின் சுடர்ப்பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்குஇலை எஃகின
மின்மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்ததென,    (46-53)
(-ள்) வானில் பறக்கும் பறவைகள் எல்லாம் கூட்டுள் சென்று தங்குமாறும் கடல்நீர் குறையுமாறும் அந்நீரினை மேகங்கள் முகந்து சென்றன. அவற்றோடு, அகன்ற பெரிய வானத்தில் வீசுகின்ற காற்றும் கலந்தது. இதனால் முரசு அதிர்வதுபோல, இனிய குரலையுடைய இடியும் முழங்கின.  ஒளிவீசும் அணிகலன்கள் அணிந்த முருகன், பகைவர்க்கு எதிராக ஏந்திய இலைபோன்ற வேல்போல இடியோடு மின்னலும் மின்னின. இவை அனைத்தும் சேர்ந்து கூட்டமாக மலைமேல் மழையாகப் பொழிந்தன.
சொற்பொருள் விளக்கம் : விசும்பு அடு பறவை வானில் பறக்கும் பறவை, வீழ்பதிப் படரகூட்டுள் உறைதற்குச் செல்லும் வகையில், நிறைஇரும் பெளவம் நீரால் நிறைந்த கரிய கடல், குறைபட முகந்துகொண்டு குறையுமாறு நீரை மேகங்கள் முகந்துகொண்டு, அகல்இரு வானத்து அகன்ற பெரிய வானத்து, வீசுவளி வீசுகின்ற காற்று, கலாவலின் கலத்தலால், முரசுஅதிர்ந் தன்ன முரசு அதிர்வதுபோல, இன்குரல் இனிய குரலையுடைய, ஏற்றொடு இடியொடு, நிரைசெலல் -  நிரலாகச் செல்லும், நிவப்பின் உயரத்தில், கொண்மூ முகில், மயங்கி கலங்கி, இன்னிசை முரசின் இன்னிசை முரசினையும், சுடர்ப்பூண் ஒளிவீசும் அணிகலன்களையும், சேஎய் முருகக் கடவுள், ஒன்னார்க்கு பகைவர்க்கு, ஏந்திய கையிலே ஏந்திய, இலங்குஇலைவிளங்குகின்ற இலை போன்ற, எஃகின்வேர்ப்படை போன்று, மின்மயங்கு மின்னல் கலந்து, கருவிய தொகுதியாக, கூட்டமாக, கல்மிசைப் பொழிந்ததெனமலைமேல் பொழிந்தன,

No comments:

Post a Comment