Search This Blog

Sunday, May 15, 2011

குறிஞ்சிப்பாட்டு மூலமும் எளிய உரையும்(169-207 வரிகள்)


அம்பு எய்தி அன்பு செய்தான் தலைவன்

---------    ------------   ------------- வார்கோல்                                
உடுஉறும் பகழி வாங்கிக் கடுவிசை
அண்ணல் யானை மணிமுகத்து அழுத்தலின்
புண்உமிழ் குருதி முகம்பாய்ந்து இழிதரப்
புள்ளி வரிநுதல் சிதைய நில்லாது
அயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்குஉறு மகளிர் ஆடுகளம் கடுப்பத்(169-175)

(-ள்) நீண்டகோல் கொண்டதாகிய நாணினைக் கொள்ளுமிடத்து, நாணினைச் சேர்த்து வலித்து இழுத்து மிக்க வேகத்தோடு செலுத்தினான். அம்பெய்த அவ்வேளை, தலைமைத் தன்மை பொருந்திய அந்த யானையின் அழகிய முகத்திலே அம்பு பாய்ந்தது. அம்பு தைத்த இடத்திலிருந்து குருதி கொட்டியது.  அதன் முகமெல்லாம் குருதி பரவியது. யானையின் முகத்திலுள்ள வரிகளிலும் இரத்தம் வழிந்து நெற்றியின் அழகு சிதைந்தது. அக்களிறு அவ்விடத்து நில்லாது, தன்னை மறந்து புறங்காட்டி ஓடியது. யானை ஓடிய பின்னர் அவ்விடமானது, தெய்வத்தால் வருத்தமுற்ற மகளிருக்கு அவ்வருத்தத்தைப் போக்க முருகக்கடவுளுக்கு வெறியாட்டு நடத்தும் களம்போன்று காட்சியளித்தது.

சொற்பொருள் விளக்கம் : வார்கோல்நெடிய கோலையும், உடுநாணைக் கொள்ளுமிடம், உறும் பகழிசேர்ந்த நாணை, வாங்கிவலித்து இழுத்து, கடுவிசை  - மிக்க வேகத்தோடு செலுத்த, அண்ணல் யானைதலைமைப் பண்புமிக்க யானை, அணி முகத்து அழுத்தலின்அழகிய முகத்திலே (அம்பு சென்று) புகுந்ததால், புண் உமிழ் குருதிஅப்புண்ணிலிருந்து உமிழ்ந்த இரத்தம், முகம் பாய்ந்துஅதன் முகத்திலே பரவி, இழிதரவடிந்து ஓட, புள்ளி வரிநுதல் சிதையபுள்ளிகளையும் வரிகளையுமுடைய நெற்றியின் அழகு சிதைய, நில்லாதுஅவ்விடத்து நில்லாது, அயர்ந்துதன்னை மறந்து, புறம் கொடுத்த பின்னர்புறங்காட்டி ஓடிய பின்னர், நெடுவேள்முருகக் கடவுள் (பிங்கலந்தை நிகண்டு) அணங்கு உறு மகளிர் – (தெய்வத்தால் வாழ்த்துதல் பெற்ற மகளிர்) அணங்குற்ற மகளிர், ஆடுகளம் கடுப்பமுருகனுக்கு வெறியாட்டு நிகழ்த்தும் ஆடுகளம் போல,

திணிநிலைக் கடம்பின் திரள்அரை வளைஇய             
துணையறை மாலையின் கைபிணி விடேஎம்
நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத்திரை
அடும்கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை
அஞ்சில் ஓதி அசையல் யாவதும்
அஞ்சல் ஓம்புநின் அணிநலம் நுகர்குஎன
மாசுஅறு சுடர்நுதல் நீவிநீடு நினைந்து
என்முகம் நோக்கி நக்கனன்(176-183)
(-ள்)முருகக் கடவுளுக்கு வெறியாட்டு நடத்தும் காலத்திலே அங்கு நிற்கும் திண்ணிய கடம்பமரத்தின் அடிப்பகுதியை வளைத்து இரண்டு மாலைகளைச் சேர்த்து கட்டியிருத்தல் போல, நானும் தோழியும் பிணித்த கைகளை விடாதிருந்தோம். நுரையுடைய வெள்ளம் பாய்கின்றபோது அதன் கரையின்  நிற்கும் வாழை மரத்தின் நிலையினைப் போல நடுங்கி நின்றோம். அப்போது தலைவன், தலைவியைப் பார்த்து, அழகிய சிலவாகிய கூந்தலை உடையவளே! வருந்தாதே,  அஞ்சுவதைத் தவிர்த்துவிடு. உன் அழகு நலத்தை நாம் நுகர்வேன் என்று குற்றமற்ற ஒளி வீசும் நெற்றியினைத் தடவிக் கொடுத்தான். பின்பு நீண்ட நேரம் நினைத்துப் பார்த்து என் முகத்தை நோக்கி பொருள் பொதிந்த முறுவலைச் செய்தான்.
சொற்பொருள் விளக்கம்: திணிநிலைக் கடம்பின்திண்மையான கடம்ப மரத்தின், திரள்அரை வளைஇயதிரண்ட அடிப்பகுதியை வளைத்து, துணையறை மாலையின்இரட்டை மாலையினைப் போன்று, கைபிணி விடேஎம்பிணித்த கைகளை விடாதிருந்தோம், நுரையுடைநுரையுடைய, கலுழிவெள்ளம், பாய்தலின்பாய்வதால், உரவுத்திரைவலிமையான நீரலைகள், அடும் கரைஇடிக்கும் கரையிலுள்ள, வாழையின் நடுங்கவாழை மரம் நடுங்குவதைப் போல் (யாம்) நடுங்க, பெருந்தகைதலைவன், அஞ்சில் ஓதிஅழகிய சிலவாகிய கூந்தலையுடையவளே, அசையல்தடுமாறு, யாவதும்சிறிதும், அஞ்சல்அஞ்சுவதை, ஓம்பு நின்தவிர்த்துவிடு/நீக்கி விடு, அணிநலம் நுகர்கு எனஅழகினது இன்பத்தை நுகர்வேன் என்று, மாசு அறு சுடர்நுதல் நீவிகுற்றமற்ற ஒளிவீசும் நெற்றியினை தடவிக் கொடுத்து, நீடு நினைந்தநீண்ட நேரம் நினைத்துப் பார்த்து பின், என் முகம் நோக்கிஎனது முகத்தை நோக்கி (நோக்குபார்த்தல் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு) ஒரு நோக்கத்தோடு பார்க்கின்ற கண்ணோட்டம் நோக்கு. வெறும் நோக்கமின்றி  பார்த்தல் என்ற அளவிலே இருப்பது பார்வை) இங்கே நோக்கத்தோடு நோக்கியமையின் நோக்கு, நக்கனன்பொருள் பொதிந்த முறுவலைச் செய்தலின்.

தலைவி தலைவனோடு கூடல்
---------     ---------------   அந்நிலை
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர
ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ
ஆகம் அடைய முயங்கலின் ,(183-186)

(-ள்)
அந்நிலையில் (இயல்பாகவே) நாணமும் அச்சமும் பொருந்திய தலைவி அவன் தழுவலிலிருந்து அகல முனைந்தாள். அவனோ தலைவியை பிரிய விடாது அணைத்தான். அவள் மார்பு, தன் மார்பில் சேருமாறு தழுவினான்.

சொற்பொருள் விளக்கம்: அந்நிலைஅந்நிலையில், நாணும் உட்கும்நாணமும் அச்சமும், நண்ணுவழிபொருந்திய, அடைதரதங்குதலால், ஒய்யெனவிரைவாக, பிரியவும் விடான்அவன் தழுவுதலிலிருந்து அகலவும் விடாதவனாய், கவைஇஅணைத்து, ஆகம் அடைய முயங்கலின்மார்பு தன் மார்பில் சேருமாறு தழுவியதால்,


தலைவன் நாட்டின் சிறப்பு

----------   ---------  ---------- - -- அவ்வழி
பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை
முழுமுதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென
புள்எறி பிரசமொடு ஈண்டி, பலவின்
நெகிழ்ந்துஉகு நறும்பழம் விளைந்த தேறல்
நீர்செத்து அயின்ற தோகை வியலூர்ச்
சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறுஊர் பாணியின் தளரும் சாரல்
வரைஅர மகளிரின் சாஅய் விழைதக
விண்பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண்கமழ் அலரி தாஅய் நன்பல
வம்புவிரி களத்தின் கவின்பெறப் பொலிந்த
குன்றுகெழு நாடன்  ---------  --------- (186-199)
(-ள்)
 பழுத்த மிளகுகள் உதிர்ந்த கற்பாறையின் நீண்ட சுனையில் பெரிய அடிப்பகுதிகொண்ட மாமரத்தின் இனிய கனி உதிர்ந்து வீழ்ந்தன. அதனோடு  வண்டுகள் சிதறிய தேனோடு கூடிய பலாமரத்தின் விரிந்து தேன் சிதறும் நறுமணம் கமழும் பலாப் பழமும் வீழ்ந்ததினால் சுனைநீர் கள்ளானது.  இதனை நீரென்று கருதிப் பருகியது மயில். இதனால் அகன்ற ஊர்களிடத்தே, விழா கொண்டாடும் இடங்களில் மிகுதியாக பல ஓசைகளும் கலக்குமாறு இனிய இசைக்கருவிகளிலிருந்து ஓசை எழுப்ப, கயிற்றிலே ஏறி ஆடுகின்ற ஆடுமகள், தாளத்திற்குத் தளருவதுபோல தளரும். இத்தகைய மலைச்சாரலில் தெய்வ மகளிரைப் போல தலை சாய்த்து விண்ணை முட்டும்படி கிளைத்திருந்து காந்தள்.  அக்காந்தள் மலரின் குளிர்ச்சியும் மணமும் நிறைந்த நல்ல பல பூக்கள்  கச்சினை விரித்து தைத்தாற் போன்று அழகுமிக்கு பொலிவுற்று விளங்குகின்ற மலைநாடு. இத்தகைய மலை நாட்டுக்குத் தலைவன்.அவன் அவ்வேளையில்,
சொற்பொருள் விளக்கம்: அவ்வழி அவ்வேளை, பழுமிளகு உக்க பாறை பழுத்த மிளகு உதிர்ந்து கிடந்த கற்பாறையுடைய, நெடுஞ்சுனை நீண்டசுனை, முழுமுதல்பெரிய அடியினையுடைய, கொக்கின் மாமரத்தின், தீம் கனி உதிர்ந்தென இனிய பழங்கள் உதிர்ந்தனவாக, புள் எறி பிரசமொடு - வண்டுகள் சிதறிய தேனோடு, ஈண்டு - கூடி, பலவின் பலா மரத்தின், நெகிழ்ந்துகு நறும் பழம் பழம் பிளந்து (கசிந்து) மணம் மிகுந்த பழத்தின், விளைந்த தேறல் கிடைத்த பள்ளினை, நீர் செத்து அயின்ற தோகை நீர் என்று கருதிப் பருகிய மயில், வியல் ஊர்அகன்ற ஊரிடத்தே, சாறு கொள் ஆங்கண் விழாக் கொள்ளும் அவ்விடங்களிலே, விழவு களம் நந்தி விழாக் காலத்தில் பேரிகை, அரி கூட்டு இன் இயம் கறங்க பறை (இவை அனைத்தும்) சேர்ந்து இனிய இசை ஒலிக்க, ஆடுமகள் ஆடுகின்ற பெண், கயிறு ஊர் பாணியின் கயிற்றன் மேல் ஊர்ந்து தாளத்திற்கேற்ப ஆடி, தளரும்தளர்வது போல் தளரும் (மயில்), சாரல் மயிலையுடைய மலைச்சாரலில், வரையர மகளிரில்வரையரை மகளிர் இருத்தலால், சாஅய் அழகு கெட்டு அழிந்த, விழை தககண்டோர் விரும்பும்படியான, விண்பொரும் சென்னிவானத்தைத் தொடும் மலைச் சிகரங்களில், கிளைஇய காந்தள் கப்பு விட்டு கிளைத்து வளர்ந்த செங்காந்தள், தண்கமழ் அலரி குளிர்ச்சியான மணம் கமழும் பூக்கள், தாஅய் பரவி, நன்பல நல்ல பல, வம்பு விரி களத்தின் கச்சை விரித்த களம்போல, கவின் பெற பொலிந்த அழகு மிக்கு பொலிந்த, குன்று கெழு நாடன்மலை குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய தலைவன்,

இல்லறம் நாடினான் இனியவன்                    
---------------- -----எம்விழைதரு பெருவிறல்                        
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு
சாறுஅயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலர்உண
பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
வசையில் வான்திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துஉண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னொடு உண்டலும் புரைவது என்றுஆங்கு
அறம்புணை ஆகத் தேற்றி,    (199-208)
(-ள்) மலைநாட்டுத் தலைவன் எம்மை எப்பொழுதும் விரும்புகின்றவன். பெரிய வெற்றியுடையவன். அதனால் தலைவியின் உள்ளத்தையும் உணர்ந்து கொண்டு, இல்லறம் பற்றியும் பேசினான். விழாக் கொண்டாடும் காலத்தைப் போலவே நாள்தோறும் (பானை) மிடா நிறைய ஆக்கிய சோற்றினைக் வருபவர்களுக்குக் குறைவில்லாது கொடுக்கும் வளமையுடைய இல்லம் பொலிவுபெற அகன்று திறந்து கிடக்கின்ற வாயிலில், மகிழ்ச்சியோடு பலரும் உண்ண வேண்டும்என்றான்.
பெரும் பண்புடையவளே! மனையின்கண்ணே புதியதாகிய இறைச்சியை இட்டுச் சமைத்த நெய் மிக்க உணவினை, குற்றமற்ற உயர் குடிப்பிறந்த பெரியோர்கள் தம் சுற்றத்தோடு நம் இல்லத்திற்கு விருந்தினராய் வந்து உண்ண, அவர்கள் உண்டு எஞ்சிய மிச்சத்தை, உன்னோடு சேர்ந்து நான் உண்பது உயர்ந்ததேஎன்றும் கூறினான்.  அப்பொழுதே, நாம் இல்லறத்தில் அறத்தினைத் தெப்பமாகக் கொண்டு வாழ்க்கைக் கரையேறுவோம்என்று தலைவிக்குத் தெளிவித்தான்.
சொற்பொருள் விளக்கம்: எம் விழைதரு பெரு விறல் எம்மை விரும்புகின்ற பெரிய வெற்றியையுடைய, உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு தலைவியின் உள்ளத்து நிகழும் எண்ண ஓட்டத்தை தன் மனத்துட் நினைத்தவனாய் அதனையும் உட்கொண்டு, சாறு அயர்ந்து அன்ன விழா கொண்டாடினார் போல, மிடாபானை (சோறு வைக்கும் பாத்திரம்), சொன்றி சோறு, வருநர்க்கு வருபவர்க்கெல்லாம், வரையா வரையறை இல்லாது கொடுக்கும், வளநகர் செல்வத்தையுடைய இல்லம், பொற்ப பொலிவு பெற, மலரத் திறந்த அகலத் திறந்து, வாயில் வாசல், பலர் உண பலரும் உண்ணும்படி, பைநிணம் பசுமையான கொழுப்பு, ஒழுகிய ஒழுகுகின்ற, நெய் மலி அடிசில் நெய் மிக்க சோற்றை, வசையில் குற்றமில்லாத, வான்திணைஉயர்குடிப் பிறந்த, புரையோர்உயர்ந்தோர், கடும்பொடு தம் சுற்றத்தோ, விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் விருந்தினை உண்டு எஞ்சிய மிச்சத்தை, பெருந்தகை பெரும் பண்புடையவளே! நின்னொடு உண்டலும் உன்னோடு உண்பதும், புரைவது உயர்ந்ததே, என்று ஆங்குஎன்று கூறி அப்பொழுதே, அறம்புணையாகத் தேற்றி- இல்லறத்தில் அறத்தினைத் தெப்பமாகக் கொண்டு வாழ்க்கைக் கரையேறுவோம் என்று (தலைவிக்கும்) தெளிவித்து,

No comments:

Post a Comment