Search This Blog

Friday, May 25, 2018

சங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள்


           சங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள்
முன்னுரை
வாழ்தல் என்பதன் முழுமையான பேறினை அடைய நாம் கற்கின்ற நூல்கள் நமக்குப் பயிற்சிக்களமாகவும் வாழ்வியல் உண்மைகளைப் புரிந்துகொள்ளும் இடமாகவும் அமைதல் வேண்டும். அறிவுடையவர்களே எல்லாம் உடையவர்கள் என்றும் அந்த அறிவே நமக்கு,
சென்றவிடத்தால் செலவிடாது தீதொரிஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.(குறள்.422)
என்றும் அறிவின் திறமையைப் பற்றிச் சொன்ன வள்ளுவர், அறிவையும் பண்பையும் ஒப்பு நோக்கி,
மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர் (குறள்.997) என்கிறார்.
எந்த ஒரு தனிமனிதனும் தனக்கென்று சில கட்டுப்பாடுகளையும் கடமைகளையும் வகுத்துக்கொண்டு வாழ்வதாலும் பண்புள்ள செயல்களால் தம்மைப் புடம் போடுவதாலும் தமது வாழ்வினையும் மதிப்புமிக்க வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளமுடியும் என்பதே பெரியோர்களின் முடிவு, அதற்கு உயர்ந்த உண்மைகளையும் பண்பாடுடைய மனிதர்களையும் சங்க இலக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
சங்க இலக்கியத்தில் வாழ்வியல்
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் என்ற உயர்ந்த சிந்தனையோடு வாழ்ந்த நம் சங்கப் புலவர்களின் பொய்புகலாச் செந்நாவில்  உதித்தவை சங்கப் பாடல்கள்.
மன்னனும் மக்களும் வாழ்வின் உண்மைநிலை உணர்ந்து செம்மை வாழ்வு வாழ்ந்த காலத்தில் படைக்கப்பட்டவை அவை. நேர்மையும் உளத்திண்மையும் வளமையும் வாய்மையும் தெளிவும் துணிவும் அன்பும் அருளும் நிறைந்த பாடல்கள் அவை. அத்தகு உயரிய பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகள் பொதிந்துள்ளமை இயல்பு தானே?
உலகத்து உண்மைநிலை
இன்பமும் துன்பமும் உலக இயற்கை என்பதைத் தெளிவாக உணர்ந்தவர்கள் சங்கச் சான்றோர். இந்த உண்மைநிலையை உணர்ந்து இனியவற்றைக் கண்டு இன்பமாக வாழ்தல் வேண்டும் என்பதே அவர் தம் கருத்து.
ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
------------------------------------------------
படைத்தோன் மன்ற பண்பி லாளன்
இன்னது அம்மஇவ் உலகம்
இனிய காண்கிதன் இயல்பு உணர்ந்தோரே. (புறம்.194, 1-7)
ஒரு வீட்டிலே சாவுப்பறை கேட்கிறது மற்றொரு வீட்டிலே மண நிகழ்வுக்கான மங்கலஓசை கேட்கிறது. இப்படி இந்த உலகம் இன்பமும் துன்பமும் சேர்ந்து படைக்கப்பட்டுவிட்டது. அதன் இயல்பை உணர்ந்து, இன்னாதவற்றைச் சிந்தனையிலிருந்து நீக்கி, இனியவற்றைக் கண்டுணர்ந்து வாழ்வோம் என்கிறார் பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவர். உயர்ந்தவற்றை மட்டுமே நினைக்கவேண்டும் என்ற அவர்களின் விருப்பம், அவர்தம் உள்ளத்து உயர்வையே காட்டுகிறது.
செம்மை வாழ்விற்கான நல்லியல்புகள்
சங்கப்பாடல்கள் முழுமையும் நோக்க, மனிதன் நன்னெறி வாழ்வதற்கான கருத்துக்களைப் பரக்கக் காணலாம். நல்லது செய்து வாழ்வீர்களாக, நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, தீமை செய்வதை ஒழித்து வாழ்வீர்களாக என்று மன்ன்னும் மக்களும் உவக்க அறிவுரை பகர்ந்துள்ளனர் சங்கப்புலவர்.
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லோரும் உவப்பது அன்றியும்
நல்ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.(புறம்.195.6-9)
Even if you don’t do good deeds, avoid
Doing bad ones! If you do that, it will bring
Joy to all, and also lead you on a good path!
உடலின் இயல்பு இது உயிரின் தன்மை இது என்பதைப் பகுத்தாய்ந்து, கிடைத்தற்கரிய மனித வாழ்வைச் செம்மைப்படுத்தி வாழ்வதற்கான சீரிய கருத்துக்களைத் தாங்கி வந்த சங்கப்பாடல்களில் முத்தான பாடலிது! புலவர் கணியன் பூங்குன்றனார் பாடியது!
யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என்று மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
இன்னாதென்றலும் இலமே.------------
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறம்.192)
யாதும் ஊர்தான். எல்லோரும் என் உறவினரே என்று துணிவோடு சாதீயத்தை மறுத்துரைத்த கணியன் பூங்குன்றனார், நம் உள்ளம் வியப்போடு வியந்து நோக்கத் தெளிவான கருத்துகளை அடுக்கிக்கொண்டே போகிறார்...பெரியோரை வியந்து போற்றுவதுமில்லை, அதேசமயம் சிறியோர்களை இகழ்ந்து பேசுவதுமில்லை. அதுமட்டுமன்று, நன்மையும் தீமையும் மற்றவர்களால் நமக்குச் செய்யப்படுவதன்று, நாமே தான் நமக்குச் செய்வது. துன்பத்தால் வருந்துவதும் பின்னர் அந்தத் துன்பத்திலிருந்து நீங்குவதும் நாமே தான் நமக்குச் செய்ய முடியும்.
இந்த உலகில் இறப்பு என்பது புதுமையான புதிய நிகழ்ச்சியுமில்லை. ஆதலால், மகிழ்ச்சியோடு வாழ்கின்ற காலத்திலும் வாழ்க்கை மிகவும் இனிமையானது என்று மகிழ்ச்சியடைவதுமில்லை, துன்பம் வருகின்றபோது வாழ்க்கையின்மீது கோபப்பட்டு வாழ்க்கை இனிமை இல்லாதது என்று கூறுவதும் இல்லை.
நூற்றாண்டுகள் பல கடந்தும் நிலைத்து நிற்கும் உண்மைகளை உணர்ந்து சொல்லியிருக்கும் சங்கப்புலவர்களின் வரிகள், வாழ்விற்கு ஏற்றம் தருபவை. சிந்தனைக்கு செழுமை அளிப்பவை.







No comments:

Post a Comment