Search This Blog

Thursday, May 24, 2018

சங்க இலக்கியம் பகரும் ஈதல் இன்பம்


சங்க இலக்கியம் பகரும் ஈத்துவக்கும் இன்பம்

மன்னரும் புலவரும் ஈதல் இசைபட வாழ்தல் என்ற கொள்கையினை உடையோராய் இருந்தமையினைச் சங்க இலக்கியங்கள் பலபட பகருகின்றன.
பேகன் என்ற சிற்றரசனின் கொடுக்கின்ற பண்பினைப் பரணர், அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்(புறம்.142,1-4)என்ற பாடல் மூலம் விளக்குகின்றார்.மழை பொழிகின்றது, அந்த  மழை  எவ்வாறு குளத்திலும் வயலிலும் களர் நிலத்திலும் ஒரே தன்மையுடையதாக இருக்கின்றதோ, அதைப்போல பேகனும் யாராக இருந்தாலும் கொடுத்துதவும் பண்பினை உடையவன் என்கின்றார்.இவ்வாறு கொடுப்பதனால், தனக்கு நன்மை வந்து சேரும் என்று பலன் கருதிச் செய்கின்றானா? என்றால் அதுவுமில்லை.
எத்துணை ஆயினும் ஈதல் நன்று
மறுமை நோக்கின்றோ அன்றே,
பிறர் வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே.(புறம்.141,13-15)
மன்னன் இத்தன்மையன் என்றால், அவர்களிடம் பரிசில் பெற்று வாழுகின்ற புலவர்களின் உள்ளமோ அதைவிட இனிது.
பெருஞ்சித்திரனார் என்ற புலவர், புலமை பெரிதுடைய புலவர். வறுமையில் வாழ்ந்தனர். குமண வள்ளலிடம் செல்கின்றார், கொடைக்குப் பெயர் பெற்ற குமணன் கொடுத்த பொருட்களைத் தனக்கெனச் சேர்த்து வைத்து இன்பம் காணவில்லை அப்புலவர்.பரிசுப் பொருட்களோடு வருகின்றார், தன் மனைவியிடம் சொல்கின்றார்;
என் மனைக்கு உரியவளே! இந்தப் பொருளையெல்லாம் உன்னை விரும்புகின்றவர்களுக்கும் நீ விரும்புகின்றவர்களுக்கும் உன் உறவினர்களுக்கும் பசியால் நாம் வருந்தியபோது உதவிய நல்லோர்களுக்கும் மற்றும் இவர்கள் நமக்கு உறவினர்கள் உறவினர் அல்லாதவர் என்று நினைக்காமல் நாம் வளமாக வாழ்வதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எண்ணாமல்இப்பொருளை இவர்களுக்குக் கொடுக்கலாமா வேண்டாமா என்று என்னிடமும் கேட்காமல் எல்லோருக்கும் கொடுப்பாயாகஎன்கின்றார்.
இன்பம் எது? என்பதை உணர்ந்திருந்த அப்பெரியோர்களின் பெற்றியை என்னென்பது?
நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பல்மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்
சுடும்பின் கடும்பசி தீர யாழ நின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க்கும் என்னாது, என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
என்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே!(புறம்.163.1-7)
இலஞ்சமும் ஊழலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படும் கயமையும் வாழ்கின்ற தமிழகத்திலா இத்தகு சான்றோர்களும் வாழ்ந்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறதல்லவா?
மன்னனும் புலவனும் ஈதலில் வல்லவர்களாய் இருந்தமை ஒரு புறம்.. அப்படி அவர்கள் வாழாத நிலையில் அவர்களை அறநெறிப்படுத்தும் அரிய பணியினை ஆன்று அவிந்து அடங்கியக் கொள்கைச் சான்றோராய் விளங்கிய புலவர்களெ செய்துள்ளனர். துணிவுடன் மன்னனிடம் ஈதலின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே. (புறம்.189.4-8)
மன்னனாகட்டும்கல்லாத மக்களாகட்டும்…..இருவருக்கும் சாப்பிட நாழி உணவுதான் தேவை. உடுப்பதற்கு இரண்டு உடைகள் போதுமானவை. இவை தவிர மனிதனின் தேவைகள் என்ன? ஆதலால், செல்வம் உடையவர்கள் மற்றவர்களுக்குக் கொடுங்கள். நாமே அனுபவித்துவிடலாம் என்று நினைத்தால், அவ்வாறு நினைத்து அனுபவிக்காமல் போனவர்கள்தான் இவ்வுலகில் நிறையபேர் இருக்கின்றார்கள் என்கின்றார், நக்கீரர்.
உலகையேயே கைப்பந்தாக ஆட்டிப்படைக்க நினைத்த அலெக்ஸாண்டர் என்ற மன்னன், இறந்த பின்பு தன்னைப் பதைக்கும்போது தன் இரு கைகளையும் வெளியே தெரியுமாறு புகைக்கவேண்டும் என்று சொன்னாராம். எத்துணை நாடுகளைக் கைப்பற்றினாலும் இந்த உலகைவிட்டுச் செல்லும்போது கையில் எதுவும் எடுத்துச் செல்ல முடியாது என்று உலக மக்களுக்குச் சொல்வதற்காக!
நம் தமிழ் மூதாட்டி வையாரும்,
நாகத்து அன்ன பாகுஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா (புறம்.367.1-2)
தேவலோகத்தைப் போன்ற வளமுடைய நாட்டை தம்முடையது என்று மன்னர்கள் உரிமை கொண்டாடினாலும் அவர்கள் இறப்பின்போது எச்செல்வமும் அவர்களுடன் செல்லாது என்று இரண்டே வரிகளில் நெஞ்சில் பதிக்கின்றார். ஆதலால், ஈதல் செய்வீர் என்பதே அவரின் அறிவுரை.










No comments:

Post a Comment