Search This Blog

Wednesday, August 17, 2022

குறுந்தொகை10. தோழி கூற்று

 

 

10. தோழி கூற்று

ஆசிரியர் ஓரம்போகியார் ஐங்குறுநூற்றில் மருதத்திணை 100 பாடல்களையும் எழுதியவர். அகநானூற்றில் இரண்டு பாடல்கள்- 286,316

குறுந்தொகையில் ஐந்து பாடல்கள்- 10, 70 ,122, 123, 384)

நற்றிணையில் இரண்டு- 20, 360

 

திணை -மருதம்

 

தலைமகனுக்கு தோழி வாயில் நேர்ந்தது

மருதநிலம். இதுதான் பாடல் களமாகிறது.  வயலும் வயல் சார்ந்த இடமும். வளமை அதிகம். பரத்தையற்பிரிவிற்கும் குறையிருக்காது.

பரத்தை இல்லம் சென்று வருகின்றான் தலைவன். தலைவியைக் காண விழைகின்றான். தோழி வருகின்றாள். அவளின்வழி தலைவியோடு சமரசம் செய்து விடலாம் என்று நினைக்கின்றான். இவனின் எல்லாச் செயல்களையும் அறிந்தவள் தோழி. ஆனால் தலைவனைப் பற்றி தலைவி தோழியிடம் இதுவரை எந்தக் குற்றமும் கூறியதில்லை. ஆனால் தோழிக்குத் தெரியும். அதனால் தலைவனிடம் சொல்கிறாள்…இதுவரைக்கும் தலைவி உன்னைப் பற்றி எதுவும் என்னிடம் கூறியதில்லை. இப்போதும் நீ வந்ததும் உன்னை ஏற்றுக் கொள்வாள். ஆனால் தலைவியின் இந்தச் செயல் உனக்குத்தான் நாணத்தைத் தரும். அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று சொல்வார்களே அதுபோல்தான் இங்கேயும் தலைவன் தன் செயலுக்காக நாணும் வகையில் தலைவி அவனை ஏற்றுக் கொள்வாள். அவள் தாய் போன்றவள். தலைவன் செல்வ வளத்தோடு  இருப்பதற்கு முதற்காரணமாக இருப்பவளும் அவள்தான்   என்று தோழி கூறுகின்றாள்

 

 

யாய் ஆகியளே விழவு முதலாட்டி

பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின் நாணிய வருமே

மருதநிலத்திலே  உள்ள காஞ்சி மரங்களில் முற்றிய பயறுபோல் கொத்துக் கொத்தாக பூக்கள் காணப்படும். அந்தப் பூக்களில் பசுமையான மகரந்தத் தாதுக்கள் நிறைந்து காணப்படும். உழவர்கள் அந்தக் காஞ்சி மரங்களின் மெல்லிய கிளைகளை வளைக்கின்றனர். அப்போது அதிலுள்ள  பூந்தாதுக்கள் உழவர்களின் மேனியிலே விழுந்து படிகிறது. இத்தகைய காஞ்சி மரங்களையுடைய ஊருக்குத் தலைவன் நீ. இதுவரை நீ அவளுக்குச் செய்த கொடுமைகளைத் தலைவி என்னிடம் மறைத்துவிட்டாள். அதனால், இப்போதும் நீ வந்தவுடன் நீ நாணுமாறு உன்னை ஏற்றுக்கொள்வாள். ஏனென்றால் அவள் தாய் போன்றவள். நீ செல்வத்தோடு வாழ்வதற்கு முதற்காரணமும் அவள்தான். என்று தலைவனிடம் தோழி வாயில் நேர்கின்றாள். பிரச்சனை எதுவும் வராது நீ தலைவியைக் காணலாம் என்று சொல்கிறாள் தோழி.

இதிலே நம் குடும்ப அமைப்பின் ஆணி வேரும் இருக்கிறது.  நீ செல்வத்தோடு வாழ உன்னோடு இணைந்து பணியாற்றியவள். உனக்குள்ள மதிப்பு , செல்வம் இதற்கெல்லாம் காரணமும் அவள்தான். அப்படியிருக்க, இப்போது உன்னோடு பிரிவு ஏற்பட்டு இதன் மூலம் உன்னுடைய  மதிப்பு சமுதாயத்திலே குலையுமாறு செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையையும் தலைவனுக்குக் கொடுக்கின்றாள் தோழி. அன்றைய சமூகத்தில் பெண்ணுக்கும் ஆணுக்கும் தனித்தனி நீதி இருந்துள்ளமை பார்க்க முடிகிறது. கற்பென்று சொல்லவந்தால் இருபாலர்க்கும் அதைப் பொதுவில் வைப்போம் என்று பாரதி சொன்னாலும்கூட இன்று வரை அதுதானே தொடர்கிறது?

உள்ளுறை

உழவர்களின் உடலில் உதிர்ந்து படிந்த காஞ்சிப் பூக்களின் மகரந்தப் பொடிகள் அவர்கள் காஞ்சி மரத்தை வளைத்ததைக் காட்டிவிடுகின்றன. அதேபோல் தலைவன் பரத்தை வீடு சென்று வந்ததை அவனுடைய மேனியில் பூசியுள்ள சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களின் வாசனையே காட்டிக் கொடுத்துவிடுகிறது.

 

Saturday, May 26, 2018

சங்க இலக்கியத்துள் நாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகள் (தெய்வ வழிபாட்டுச் சிந்தனைகள்)



                                                                         
                        
          சங்க இலக்கியத்துள் நாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகள்
              (தெய்வ வழிபாட்டுச் சிந்தனைகள்)

பண்டுதொட்டு இன்றுவரை தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளை எந்தவித மாற்றமுமின்றி பேணிக் காத்து வருபவர்கள் தமிழகத்துக் கிராமப்புற மக்கள். அவர்களின் தெய்வ வழிபாடு குறித்தப் பண்பாட்டுக் கூறுகள் சங்க இலக்கியத்துள்ளும் பயின்று வந்துள்ளமை அறியக்கூடியதாய் உள்ளது. அதனை ஆராய்வதாகவே இக்கட்டுரை அமைகிறது.
பண்பாடு - விளக்கம்
பண்பாடு என்பது மனித சமுதாயத்தின் வாழ்வியல் ஒழுங்கைக் குறிக்கிறது. ஒரு சமுதாயத்தில் உள்ள மககளின் வாழ்க்கை நடத்தும் முறையே பண்பாடு ஆகும் என்று சமூகவியலும் மானுடவியலும் விளக்கம் அளிக்கின்றன.
.  “சங்ககாலம்தொட்டு இன்றுவரை தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளைப் பாதுகாத்து வைத்திருப்பவர்கள் கீழ்த்தட்டு மனிதர்கள்தாம் . இந்த மக்கள்தாம் அவர்கள் அறியாமலே மக்கள் பண்பாட்டுப் புதையல்களைச் சுமந்து நிற்கிறார்கள் என்பதும் அறியத்தக்கது”1
தமிழர்தம் பண்பாட்டின் ஆணிவேராய் இருந்த கிராமப்புறத் தெய்வ வழிபாட்டில் நாள் வழிபாடும், விழாக்கால வழிபாடும் விழாவிற்கான முன்னேற்பாடுகளும் உற்றார் உறவினர் வருகையும் புத்தாடை உடுத்து ஊரே ஆரவாரமாகத் திகழும் ஆர்ப்பரிப்பும் நேர்த்திக்கடன் செலுத்துதலும் ஆடலும் பாடலும் கூத்தும் என்ற  நம் பண்பாட்டு அசைவுகள் பற்றிய பதிவுகளைச் சங்க இலக்கியத்துள்ளும் காணக்கூடியதாய் உள்ளது.
கிராமப்புற மக்களின் பண்பாட்டுக் கூறுகளைச் சங்க இலக்கியத்துள்ளும் காணுகின்றபோது பண்டுதொட்டு வருகின்ற நம் பண்பாட்டுப் பாரம்பரியங்களை அழியாது காத்து வரும் அளப்பரிய சேவையைத் தமிழ் இனத்துக்குச் செய்து வருபவர்கள் தமிழகத்துக் கிராமப்புற மக்களே என்பது தெளிவாகிறது. அந்த வகையில் கிராமப்புற மக்களின் வழிபாட்டுச் சிந்தனைகள் சங்க இலக்கியத்துள் பெற்றுள்ள இடம், குறித்து இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாள் வழிபாடும் விழாக்கால வழிபாடும்
.நம் தமிழகத்துக் கிராமப்புற மக்களின் தெய்வ வழிபாட்டில் நாள் வழிபாடும் விழாக்கால வழிபாடும் சிறப்பிடம் பெறுகின்றன. இவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலும்  காணக்கூடியதாய் உள்ளது.
நாள்தோறும் தெய்வத்திற்கு நடத்தபெறும் நாள் வழிபாட்டைக் குறிக்கும் “நாட்பலி”(அகம்.213,7) என்ற சொல்லாட்சி  சங்க இலக்கியத்துள் இடம்பெற்றுள்ளது.
மக்கள் திரண்டு வந்து தெய்வத்திற்கு நடத்துகின்ற வழிபாடாகிய விழாக்கள் குறித்த செய்திகளையும் சங்கஇலக்கியங்களும் பகர்கின்றன. மக்கள் விரும்பிக் கொண்டாடியதால்  விழாக்கள், ‘விழவு’’ என்று அழைக்கப்பட்டனவாகக் கொள்ளலாம். விழாக்களைச் சாறு என்றும் அழைத்தனர்.
சாறுகொள் ஊர் (அகம்.206. 11)
சாறு அயர் மூதூர் (சிறுபாண். 201)
விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர் (பெரும். 411)
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண் ( புறம். 84. 4)
நாட்டுப்புற மக்களின் நாள் வழிபாடும், விழாக்கால வழிபாடுமாகிய தெய்வ வழிபாட்டு மரபுகள், சங்க இலக்கியத்துள்ளும் பயின்று வந்துள்ளமை  நோக்க, அன்று தொட்டு இன்றுவரை நம் தமிழரின் பண்பாட்டுக்கூறுகள் அழியாமல் காக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.
வழிபாட்டில் பூசைப் பொருட்கள்
தெய்வ வழிபாட்டிற்கு வருவோர் வழிபாட்டிற்குத் தேவையான பூசைப் பொருட்களைக் கொண்டுவந்து தெய்வத்தை வழிபடல் என்பது இன்றும் நடக்கின்ற நடைமுறை மரபு. அதனைச் சங்க இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன.
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்
நாறுகமழ் வீயும், கூறும் இசை முழவமும்
மணியும் கயிறும் மயிலும் குடாரியும்
பிணிமுகம் உளப்படப் பிறவும் ஏந்தி
அறுவரைச் சேராத தொழுநர் (பரி.8, 97-102)
என்று தெய்வ வழிபாட்டிற்குக் கொண்டு செல்லும் பொருட்கள் என்னென்ன என்பதையும் இப்பாடல் பட்டியலிட்டுள்ளது.
பல்மலர் சிதறிப் பராவுறு பலிக்கே (நற்.322.12)
என்று மலரிட்டு வழிபடுதலையும், நெல்லும் மலரும் தூவி வழிபட்டதை முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும் கூறுகின்றன.
புலராப் பச்சிலை இடைஇடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்து கண்டன்ன(புறம்.39,12-13)
என்பதால் பச்சிலை இடைவைத்துக் கட்டப்பட்ட கதம்பம் என்ற மலர் மாலையும் தெய்வ வழிபாட்டில் பயன்பட்டுள்ளமை பெறப்பட்டுள்ளது.
விழாவிற்கு ஊர் அழைத்தல்
விழா நடைபெறுகின்றமையை ஊர் முழுக்க அறிவிப்பது என்பதை ஊர் குடிமகன்(நாவிதன்) ஊர் மக்களுக்கு அறிவிப்பார்.
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
சாறு என நுவலும் முதுவாய்க் குரவ (நற். 200,3-4)
இன்று நம் கிராமங்களில் நடைபெறுகின்ற இந்நடைமுறை மரபில்,  பண்டைய தமிழர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியைத்தான் காணமுடிகிறது
கால் நாட்டல் மற்றும் காப்பு கட்டுதல்
தெய்வ வழிபாட்டில் விழாக்கள் நடைபெறும்போது அதனை உறுதிசெய்யும் நிகழ்வாக, கோவிலில் கால் நாட்டுதல் நடைபெறுதல் வழக்கம். அதனை,
ஆல்அமர்ச் செல்வன் அணிசால் மகன்விழாக்
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி(கலி.83, 14-15)
என்று சங்க இலக்கியமும் பதிவு செய்துள்ளது.
விடர்முகை அடுக்கத்து விறல்கெழு செல்விக்குக்
கடனும் பூணாம் கைந்நூல் யாவாம் (குறு.218.1-2)
விழாவை முன்னிட்டு காப்புக் கட்டுகின்ற மரபும் இன்றுள்ளதுபோன்றே அன்றும் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை இப்பாடல் வரிகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
வழிபாட்டிற்கு விருந்தினர் வருதல்
இன்றும் கிராமங்களில் நடைபெறும் கோவில் கொடைவிழாவிற்கு உறவினர்களும் விருந்தினர்களும் வந்திருந்து புத்தாடை உடுத்து மகிழ்ச்சியுடன் ஆரவாரமாகக் கொண்டாடுவதைக் காண்கின்றோம். இந்தக் காட்சிகள் அனைத்தும் சங்க இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளமையைப் பார்க்கின்றபோது சங்க இலக்கியத்துள் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியங்கள் புதைந்துள்ளமையை அறிய முடிகிறது.
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு (பட்டின. 215)

ஊரே, ஒலி வரும் கம்மையோடு மலிபு தொகுபு ஈண்டி
கலிகெழு மறுகின் விழவு அயரும்மே (நற்றிணை. 348. 3-4)
விழாவிற்கு வந்திருந்தவர்கள் தம்மை ஆடை அணிகலன்களால் ஒப்பனை செய்திருந்தனர் என்பதை,
உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழைஅணிப பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே ( குறுந். 295. 1-3)
விழாக்காலத்தில் மக்கள் தூக்கத்தையும் மறந்து விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றமை அறியப்படுகின்றது.
இரும்பிழி மகாஅர் இல்அழுங்கல் மூதூர்
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும் (அகம். 122, 1-2)
இவ்வாறு உறவுகளோடு மகிழ்ந்து விழாக் கொண்டாடும் மக்கள் தாமும் தம் சுற்றமும் மகிழ்ந்து வாழ தெய்வத்திடம் வேண்டி நின்ற காட்சியினைசை் சங்க இலக்கியமும் காட்டுகிறது.
ஊரே ஒலி வரும் சும்மையொடு மலிபுதொகுபு
கலிகெழு மறுகின் விழவு அயரும்மே  (நற். 348, 3-4)

காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என
ஏமுறு நெஞ்சத்தேன் பரவுதும் (பரி.1,65-67)
இது இன்றும் தொடரும் காட்சிகளே.
நேர்த்திக்கடன் செலுத்துதல்
தெய்வ வழிபாட்டில் ”இது நடந்தால் இதைச் செய்கிறேன்“ என்று சொல்லும்போது அந்தச் செயல் நடந்துவிடும் என்று நம்புதல், நம்பிக்கையின் விளைவாக நடந்துவிடும்போது, கண்டிப்பாக அதை நிறைவேற்றுதல் என்பதே நேர்த்திக்கடனில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. நேர்தல் என்பது உடன்பாடு என்று பொருள்படுகிறது நேமிசம், நேர்ச்சை, வேண்டுதல், கோரிக்கை, காணிக்கை, என்று பலப் பெயர்களில் தமிழர்ப் பண்பாட்டில் காணப்படும் நேர்த்திக்கடன் நிகழ்வினை,
புனைவன் துடவைப் பொன்போல் சிறுதினைக்
கடிஉண் கடவுட்கு இட்ட செழுங்குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெளிஉறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் (குறு.105,1-4)
என்ற குறுந்தெகைப் பாடல் கூறுகிறது. குறவன் தான் பயிரிட்ட தினைப்புனத்தில் விளைந்த தினைக்கதிரில் சிலவற்றைத் தெய்வத்திற்காக நேர்ந்துவிட்டிருந்தமையும் அக்கதிரினைத் தெய்வத்திற்கு உரியது என்று அறியாது மயில் உண்டுவிட்டதும் அதனால் மிகவும் துன்புற்று நடுங்கியதும் கூறப்பட்டுள்ளது. இன்றும் மக்கள் தெய்வத்திற்கு நேர்ந்துவிடும் உயிருக்கோ, பொருளுக்கோ துன்பம் நேருமானால் அதைத் தெய்வக்குற்றமாகவே கருதுகின்றனர். அவ்வாறு தெய்வத்திடம்  நேர்கின்றவர்கள்,

வருபுனல் அணிக என வரம் கொள்வோரும்
கருவயிறு உறுக எனக் கடம்படுவோரும்
செய்பொருள் வாய்க்க என செவிசார்துவோரும் (பரி.8, 5-7)

என்று நீர் வளம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும் செல்வம் வேண்டியும் என்று பல்வேறு நன்மைகளைத் தெய்வத்திடம் வேண்டியுள்ளனர்.                                            தமிழர்தம் “தெய்வ வழிபாட்டு மரபுகள் வழிவழியாக ஆற்றொழுக்காக கடைபிடிக்கப்பட்டு வருவதை நோக்குமிடத்து இம்மரபுகள் மக்களின் வாழ்வியலோடும் உணர்வோடும் கலந்துவிட்ட செம்மையை உணரமுடிகிறது”2. இன்றும் நம் தெய்வ வழிபாட்டில் நேருதல் என்பதும் நேர்த்திக்கடன் என்பதும் முக்கிய இடத்தைப் பெற்று வருவதை அறியலாம்.
      தமிழரின் வழிபாட்டுச் சிந்தனைகளை அழியாது காத்து விழாக்களில் உறவுகளைப்பேணி, கலைகளை வளர்த்து, தமிழர்களின் பண்பாட்டு மரபுகளைச்  சுமக்கிறோம் என்று தெரியாமலே சுமந்து  வருபவர்கள், கிராமப்புற மக்கள். பழந்தமிழரின் வழிபாட்டு முறையைத் திறம்பட அழியாமல் காக்கும் கிராமப்புற மக்களின் வழிபாட்டுச் சிந்தனைகள்  தமிழ் மண்ணின் அழியா சொத்துக்கள் என்பதை சான்றோர் செய்யுட்களாகிய சங்க இலக்கியங்கள் வழியும் அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1.     இந்திரன்(தொ.ஆ) வேரும் விழுதும், ப. 9
2.     சிலம்பு நா. செல்வராசு, கோவில் பண்பாடு, ப.245

Thursday, May 24, 2018

சங்க இலக்கியம் பகரும் ஈதல் இன்பம்


சங்க இலக்கியம் பகரும் ஈத்துவக்கும் இன்பம்

மன்னரும் புலவரும் ஈதல் இசைபட வாழ்தல் என்ற கொள்கையினை உடையோராய் இருந்தமையினைச் சங்க இலக்கியங்கள் பலபட பகருகின்றன.
பேகன் என்ற சிற்றரசனின் கொடுக்கின்ற பண்பினைப் பரணர், அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்(புறம்.142,1-4)என்ற பாடல் மூலம் விளக்குகின்றார்.மழை பொழிகின்றது, அந்த  மழை  எவ்வாறு குளத்திலும் வயலிலும் களர் நிலத்திலும் ஒரே தன்மையுடையதாக இருக்கின்றதோ, அதைப்போல பேகனும் யாராக இருந்தாலும் கொடுத்துதவும் பண்பினை உடையவன் என்கின்றார்.இவ்வாறு கொடுப்பதனால், தனக்கு நன்மை வந்து சேரும் என்று பலன் கருதிச் செய்கின்றானா? என்றால் அதுவுமில்லை.
எத்துணை ஆயினும் ஈதல் நன்று
மறுமை நோக்கின்றோ அன்றே,
பிறர் வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே.(புறம்.141,13-15)
மன்னன் இத்தன்மையன் என்றால், அவர்களிடம் பரிசில் பெற்று வாழுகின்ற புலவர்களின் உள்ளமோ அதைவிட இனிது.
பெருஞ்சித்திரனார் என்ற புலவர், புலமை பெரிதுடைய புலவர். வறுமையில் வாழ்ந்தனர். குமண வள்ளலிடம் செல்கின்றார், கொடைக்குப் பெயர் பெற்ற குமணன் கொடுத்த பொருட்களைத் தனக்கெனச் சேர்த்து வைத்து இன்பம் காணவில்லை அப்புலவர்.பரிசுப் பொருட்களோடு வருகின்றார், தன் மனைவியிடம் சொல்கின்றார்;
என் மனைக்கு உரியவளே! இந்தப் பொருளையெல்லாம் உன்னை விரும்புகின்றவர்களுக்கும் நீ விரும்புகின்றவர்களுக்கும் உன் உறவினர்களுக்கும் பசியால் நாம் வருந்தியபோது உதவிய நல்லோர்களுக்கும் மற்றும் இவர்கள் நமக்கு உறவினர்கள் உறவினர் அல்லாதவர் என்று நினைக்காமல் நாம் வளமாக வாழ்வதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எண்ணாமல்இப்பொருளை இவர்களுக்குக் கொடுக்கலாமா வேண்டாமா என்று என்னிடமும் கேட்காமல் எல்லோருக்கும் கொடுப்பாயாகஎன்கின்றார்.
இன்பம் எது? என்பதை உணர்ந்திருந்த அப்பெரியோர்களின் பெற்றியை என்னென்பது?
நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பல்மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்
சுடும்பின் கடும்பசி தீர யாழ நின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க்கும் என்னாது, என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
என்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே!(புறம்.163.1-7)
இலஞ்சமும் ஊழலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படும் கயமையும் வாழ்கின்ற தமிழகத்திலா இத்தகு சான்றோர்களும் வாழ்ந்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறதல்லவா?
மன்னனும் புலவனும் ஈதலில் வல்லவர்களாய் இருந்தமை ஒரு புறம்.. அப்படி அவர்கள் வாழாத நிலையில் அவர்களை அறநெறிப்படுத்தும் அரிய பணியினை ஆன்று அவிந்து அடங்கியக் கொள்கைச் சான்றோராய் விளங்கிய புலவர்களெ செய்துள்ளனர். துணிவுடன் மன்னனிடம் ஈதலின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே. (புறம்.189.4-8)
மன்னனாகட்டும்கல்லாத மக்களாகட்டும்…..இருவருக்கும் சாப்பிட நாழி உணவுதான் தேவை. உடுப்பதற்கு இரண்டு உடைகள் போதுமானவை. இவை தவிர மனிதனின் தேவைகள் என்ன? ஆதலால், செல்வம் உடையவர்கள் மற்றவர்களுக்குக் கொடுங்கள். நாமே அனுபவித்துவிடலாம் என்று நினைத்தால், அவ்வாறு நினைத்து அனுபவிக்காமல் போனவர்கள்தான் இவ்வுலகில் நிறையபேர் இருக்கின்றார்கள் என்கின்றார், நக்கீரர்.
உலகையேயே கைப்பந்தாக ஆட்டிப்படைக்க நினைத்த அலெக்ஸாண்டர் என்ற மன்னன், இறந்த பின்பு தன்னைப் பதைக்கும்போது தன் இரு கைகளையும் வெளியே தெரியுமாறு புகைக்கவேண்டும் என்று சொன்னாராம். எத்துணை நாடுகளைக் கைப்பற்றினாலும் இந்த உலகைவிட்டுச் செல்லும்போது கையில் எதுவும் எடுத்துச் செல்ல முடியாது என்று உலக மக்களுக்குச் சொல்வதற்காக!
நம் தமிழ் மூதாட்டி வையாரும்,
நாகத்து அன்ன பாகுஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா (புறம்.367.1-2)
தேவலோகத்தைப் போன்ற வளமுடைய நாட்டை தம்முடையது என்று மன்னர்கள் உரிமை கொண்டாடினாலும் அவர்கள் இறப்பின்போது எச்செல்வமும் அவர்களுடன் செல்லாது என்று இரண்டே வரிகளில் நெஞ்சில் பதிக்கின்றார். ஆதலால், ஈதல் செய்வீர் என்பதே அவரின் அறிவுரை.